என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலத்தில் வருகிற 13-ந்தேதி விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம்- அனுமதி கேட்டு த.வெ.க. நிர்வாகிகள் மனு
    X

    சேலத்தில் வருகிற 13-ந்தேதி விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம்- அனுமதி கேட்டு த.வெ.க. நிர்வாகிகள் மனு

    • சேலம்-கோவை மெயின் ரோட்டில் இதற்காக 25 ஏக்கர் நிலத்தில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
    • மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறி அங்கு கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதையடுத்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று இரவு மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் மனு கொடுத்தனர்.

    இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் கூறும் போது, சேலத்தில் ஏற்கனவே விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால் சில காரணங்களால் பொதுக்கூட்டம் நடத்த முடியாமல் போனது. இந்த முறை வருகிற (13-ந்தேதி) மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு திறந்தவெளி இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேச உள்ளார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறோம் என்றார். சேலம்-கோவை மெயின் ரோட்டில் இதற்காக 25 ஏக்கர் நிலத்தில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

    இதற்கிடையே சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள மேலும் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.

    புறநகர் பகுதியில் மகுடஞ்சாவடி பகுதியிலும், மாநகர் பகுதியில் சீலநாயக்கன்பட்டி பகுதியிலும் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. எந்த இடத்திற்கு அனுமதி கொடுக்கப்படுகிறதோ, அந்த இடத்தில் பணிகளை தொடங்க நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    Next Story
    ×