என் மலர்
சேலம்
- வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சில நாட்களுக்கு முன்பு தனபாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சேலம்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். இவர் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர். கனகராஜை கைது செய்வதற்குள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வந்த அவர் கடந்த வாரம் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு இன்று இதய அடைப்பை நீக்க ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக சேலத்தில் இருந்து தனபாலனை போலீசார் ஆம்புலன்சில் அழைத்து சென்றபோது தனது 2 மகன்களையும் முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும் என்று கதறி அழுதார்.
- திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
- சிவப்பு பட்டாடை அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. சிவப்பு பட்டாடை அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் உள்ள தருமராஜர் உள்ளிட்ட பஞ்சபாண்டவர், கிருஷ்ணபகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். இதேபோல் வாழப்பாடி ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன், வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன், புதுப்பட்டி மாரியம்மன் கோவில்களிலும் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது.
- கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
மேட்டூர்:
தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை திறக்கவில்லை.
இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
அதே நேரத்தில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது. இதன் காரணமாகவும் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என அந்த மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 14 ஆயிரத்து 136 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தொடர்ந்து நேற்று இரவு முதல் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 21 ஆயிரத்து 964 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது. இன்று காலை வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த தண்ணீர் மேட்டூர் அணையை இன்று வந்தடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 552 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 3 ஆயிரத்து 260 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று 53.38 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 53.01 அடியாக சரிந்துள்ளது.
- வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்கள், மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா நினைவு மாநில கைப்பந்து போட்டி வி.எஸ்.ஏ.கல்லூரியில் நடத்தின.
- இந்தபோட்டியில் 25-15,25-16, 18-25 25-17என்ற புள்ளிகணக்கில் சேலம் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
சேலம்:
சேலம் வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்கள், மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா நினைவு மாநில கைப்பந்து போட்டி வி.எஸ்.ஏ.கல்லூரியில் நடத்தின.
19 வயதுக்கு உட்பட்ட இந்த போட் டியில் ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 31 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. முடிவில் பெண்கள் பிரிவில் சேலம் மற்றும் சென்னை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று நேற்று மாலை விளையாடின. இந்தபோட்டியில் 25-15,25-16, 18-25 25-17என்ற புள்ளிகணக்கில் சேலம் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட் டத்தை தட்டி சென்றது. சென்னை அணி 2-ம் பரிசும், ஈரோடு அணி 3-ம் பரிசும் கிருஷ்ணகிரி அணி 4-ம் பரி சும் பெற்றன. மற்றொரு ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் கோவை மற்றும் நெல்லை அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று மோதின. முடிவில் கோவை அணிமுதலிடமும், நெல்லை அணி இரண்டாம் இடமும் நாகை அணி மூன்றாம் இடமும், கிருஷ்ணகிரி அணி நான்காம் இடமும் பிடித்தன. இதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி கலந்து கொண்டு வெற்றி பெற்ற கைப்பந்து அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர்கள் ராஜாராம், அகிலா தேவி, ரான்சன், லாரன்ஸ் பாஸ்கர், டாக்டர். செந்தில் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோபாலின் மகன் கோகுல்ராஜ் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ராமாபுரம் காட்டு பிள்ளையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவரது அண்ணன் விஜயன்.
இவர்களுக்கு பூர்வீக சொத்தாக 4 1/2 ஏக்கர் நிலம், 9 தறி பட்டறைகள் உள்ளது.
விஜயன் இறந்த நிலையில் பூர்வீக சொத்தை பாக பிரிவினை செய்து கொள்வதில் கோபால், விஜயன் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 30-6-2017 அன்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கோபாலை, விஜயனின் மகன் குணசேகரன் மற்றும் உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜி, பாரதி, சாந்தாமணி, குருசாமி ஆகியோர் இரும்பு ராடால் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த கோபால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து கோபாலின் மகன் கோகுல்ராஜ் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குணசேகரன், அவரது உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜி, பாரதி, சாந்தாமணி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.7000 அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். இதில் 6-வது குற்றவாளியான குருசாமி ஏற்கனவே இறந்து விட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
- சுதந்திர தினவிழாவை யொட்டி தொழில் நிறு வனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
- சேலம் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது-
சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை யொட்டி தொழில் நிறு வனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
திடீர் ஆய்வு
இதை தொடர்ந்து தேசிய விடுமுறையான சுதந்திர தினத்தன்று தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் தொழிலாளர்கள் பணி புரிகிறார்களா? என்று சேலம் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சேலம், மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், சங்ககிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முன் அனுமதியின்றி செயல்பட்ட 54 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 64 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 81 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல் வேலையில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
81 நிறுவனங்கள் மீது வழக்கு
இதையடுத்து அந்த 81 நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழி லாளர்நலத்து றை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், முரண்பாடு கள் கண்ட றியப்பட்டால் உரிய நடவ டிக்கை எடு க்கப்படும் என்றும் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ண வேணி தெரிவி த்துள்ளார்.
- 2 அனல் மின் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
- இன்று முதல் 45 நாட்களுக்கு 4-வது யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 4 யூனிட்டும், அதன் அருகில் 600 மெகா வாட் கொண்ட ஒரு யூனிட்டும் உள்ளது.
இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையத்தில் 4-வது யூனிட்டில் வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், இன்று முதல் 45 நாட்களுக்கு 4-வது யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிந்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் வேலூர் மாநகராட்சிக்கு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
- அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் வேலூர் மாநகராட்சி ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் வேலூர் மாநகராட்சிக்கு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 944 வழியிடை ஊரக கிராமங்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக தினசரி 150 எம்.எல்.டி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் குழாய் உடைப்பு
இந்நிலையில் அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் வேலூர் மாநகராட்சி ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது. இதனால் சாலையில் நடந்து செல்வோரும் வாகன ஓட்டிகளும் தண்ணீரில் நனைந்தபடியே சென்றனர். தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முறையான பராமரிப்பு பணி இல்லாததால் ராட்சத குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க புதிய குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் வெள்ளாண்டி வலசு பஸ் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
- நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பழங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு, நைனாபட்டி ரோட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (37). இவர் எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் வெள்ளாண்டி வலசு பஸ் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
பூட்டு உடைப்பு
நேற்று முன்தினம் வழக்கம்போல் கவிதா கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பழங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விழித்துக் கொண்டதால் கொள்ளையடித்த பொருள்களின் ஒரு பகுதியை கடை அருகிலேயே போட்டு விட்டு சம்பந்தப்பட்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் நள்ளிரவு நேரத்தில் கவிதாவின் கடைக்குள் நுழையும் மர்ம நபர் 3 முறை பெரிய அளவிலான பைகளில், அங்கிருந்த பழம் மற்றும் பொருட்களை அள்ளிச் செல்வது பதிவாகி உள்ளது.
இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு பழக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து, எடப்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் கொள்ளை
மேலும் அண்மையில் கவிதாவின் பழக்கடை அருகே உள்ள சேகர் (48) என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
சேலம் - எடப்பாடி பிரதான சாலையில் தொடர்ந்து பழக்கடைகளை குறிவைத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்கள் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கட்டிட வேலை முடிந்து பெயிண்டிங் வேலை நடந்து வருகிறது. இதில் ஹரிஹரன் அங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.
- 2-வது மாடியில் பெயிண்டிங் பணிக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
சேலம்:
சேலம் மின்னாம் பள்ளியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் ஹரிஹரன் (24) பொன்னம்மா பேட்டையில் பழனிச்சாமி என்பவர் வீடு கட்டி வருகிறார்.
கட்டிட வேலை முடிந்து பெயிண்டிங் வேலை நடந்து வருகிறது. இதில் ஹரிஹரன் அங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். நேற்று மதியம் 2-வது மாடியில் பெயிண்டிங் பணிக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கிசிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஹரிஹரன் பரிதாமாக இருந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடி அமாவாசை யையொட்டி இன்று நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- மேட்டூர் காவிரி அற்றில் ஏராளமான பேர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
சேலம்:
இன்று ஆடி அமாவாசை யையொட்டி இன்று தினத்தன்று சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடநதது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் ஏராளமானவர்கள் கூடினர். அவர்கள் வாழை இலை வைத்து அதில் அரிசி, நெல், தேங்காய், பழம் உள்ளிட்டவை வைத்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கன்னங்குறிச்சி ஏரி, மூக்கனேரி உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கஞ்சமலை
கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சித்தேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஏராளமானவர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வர தொடங்கினர். அங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி சாமி வழிபாடு நடத்தினர். அங்குள்ள உப்பு குளத்தில் பக்தர்கள் மரு, மற்றும் தோல் வியாதி நீங்க உப்பு, மிளகு, வெல்லம், ஆகியவற்றை தலைசுற்றி போட்டு வேண்டி கொண்டனர். அங்குள்ள நீரோடை பகுதிகளில் தங்கள் முன்னோர்களுக்கு எள், மஞ்சள், நெய், சாத உருண்டை வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.
பூலாம்பட்டி
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில் முன்புள்ள காவிரி படித்துறை, படகு துறை, விநாயகர் கோவில், காவிரித்தாய் கோவில், நந்திகேஸ்வரர் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் திரளானவர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பூலாம்பட்டி காவிரிக்கரை கைலாசநாதர் கோவில், நவக்கிரக சன்னதி, பசுபதீஸ்வரி ஆலயம் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் ஏராளமானவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். மேலும் பாங்கிகாடு அய்யனாரப்பன் கோவில், குள்ளம்பட்டி அய்யனாரப்பன் கோவில், சென்றாயனூர் தெற்கு தோட்டம், பெரியாண்டிச் சியம்மன் கோவில், பெரமாச்சிபாளையம் கம்பத்தையன் கோவில், கல்வடங்கம் அங்காளம்மன் கோவில், புள்ளாக்கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மேட்டூர்
மேட்டூர் காவிரி அற்றில் ஏராளமான பேர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையில் உள்ள அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். இதனால் மேட்டூர் காவிரி பாலம், மேட்டூர் அனல்மின் நிலையம், புதுப்பாலம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
மேச்சேரி
மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பண்டிகை மற்றும் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பத்தரகாளி அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல் பிரசித்தி பெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், வாழப்பாடி காசி விஸ்வநாதர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன்கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், எல்லைபிடாரி அம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் இன்று காலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு பால், மஞ்சள் மற்றும் நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் சின்ன முதலைப்பட்டி அம்மச்சி அம்மன் கோவில் மற்றும் நாமக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்
ராசிபுரத்தில் நாமக்கல் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர் உள்பட 11 பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பரமத்திவேலூர்
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர் ,பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் ஆடி அமாவாசையை முன்னிட்டு நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்தி வேலூர் பேட்டை மகா மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன் ,கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதிஅம்மன் ,செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் குடிப்பாட்டு மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- மாணவன் கோகுல்காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
- மாணவன் தற்கொலை குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டி அருகே உள்ள கீரபாப்பம் பாடி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் கோகுல்காந்தி (14). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கோகுல் காந்தி தனது தாய் வனிதா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார்.
மாணவர் கோகுல்காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று கோகுல்காந்தியின் தாய் வனிதாவுக்கு பிறந்த நாள் ஆகும்.
இதையடுத்து கோகுல்காந்தி தனது தாய்க்கு சேலை வாங்கி கொடுத்து கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் கோகுல் காந்தி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது தனது பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதை நினைத்து மாணவர் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
அப்போது கழுத்தில் இருந்த துண்டு அறுந்து விழுந்தார். அப்போது சத்தம் கேட்டு அவரது தாய் வனிதா சென்று பார்த்தார். அப்போது தூக்கில் இருந்து கோகுல்காந்தி கீழே விழுந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வனிதா தனது மகன் கோகுல்காந்தியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் கோகுல்காந்தி இறந்து விட்டார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






