என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 260 கன அடியாக அதிகரிப்பு
- கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது.
- கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
மேட்டூர்:
தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை திறக்கவில்லை.
இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
அதே நேரத்தில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது. இதன் காரணமாகவும் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என அந்த மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 14 ஆயிரத்து 136 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தொடர்ந்து நேற்று இரவு முதல் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 21 ஆயிரத்து 964 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது. இன்று காலை வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த தண்ணீர் மேட்டூர் அணையை இன்று வந்தடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 552 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 3 ஆயிரத்து 260 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று 53.38 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 53.01 அடியாக சரிந்துள்ளது.






