என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி அமாவாசையையொட்டி காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்

    • ஆடி அமாவாசை யையொட்டி இன்று நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மேட்டூர் காவிரி அற்றில் ஏராளமான பேர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    சேலம்:

    இன்று ஆடி அமாவாசை யையொட்டி இன்று தினத்தன்று சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடநதது.

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் ஏராளமானவர்கள் கூடினர். அவர்கள் வாழை இலை வைத்து அதில் அரிசி, நெல், தேங்காய், பழம் உள்ளிட்டவை வைத்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கன்னங்குறிச்சி ஏரி, மூக்கனேரி உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    கஞ்சமலை

    கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சித்தேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஏராளமானவர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வர தொடங்கினர். அங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி சாமி வழிபாடு நடத்தினர். அங்குள்ள உப்பு குளத்தில் பக்தர்கள் மரு, மற்றும் தோல் வியாதி நீங்க உப்பு, மிளகு, வெல்லம், ஆகியவற்றை தலைசுற்றி போட்டு வேண்டி கொண்டனர். அங்குள்ள நீரோடை பகுதிகளில் தங்கள் முன்னோர்களுக்கு எள், மஞ்சள், நெய், சாத உருண்டை வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    பூலாம்பட்டி

    எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில் முன்புள்ள காவிரி படித்துறை, படகு துறை, விநாயகர் கோவில், காவிரித்தாய் கோவில், நந்திகேஸ்வரர் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் திரளானவர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பூலாம்பட்டி காவிரிக்கரை கைலாசநாதர் கோவில், நவக்கிரக சன்னதி, பசுபதீஸ்வரி ஆலயம் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் ஏராளமானவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். மேலும் பாங்கிகாடு அய்யனாரப்பன் கோவில், குள்ளம்பட்டி அய்யனாரப்பன் கோவில், சென்றாயனூர் தெற்கு தோட்டம், பெரியாண்டிச் சியம்மன் கோவில், பெரமாச்சிபாளையம் கம்பத்தையன் கோவில், கல்வடங்கம் அங்காளம்மன் கோவில், புள்ளாக்கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    மேட்டூர்

    மேட்டூர் காவிரி அற்றில் ஏராளமான பேர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையில் உள்ள அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். இதனால் மேட்டூர் காவிரி பாலம், மேட்டூர் அனல்மின் நிலையம், புதுப்பாலம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    மேச்சேரி

    மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பண்டிகை மற்றும் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பத்தரகாளி அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதேபோல் பிரசித்தி பெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், வாழப்பாடி காசி விஸ்வநாதர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன்கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், எல்லைபிடாரி அம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் இன்று காலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு பால், மஞ்சள் மற்றும் நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேபோல் சின்ன முதலைப்பட்டி அம்மச்சி அம்மன் கோவில் மற்றும் நாமக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்

    ராசிபுரத்தில் நாமக்கல் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர் உள்பட 11 பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பரமத்திவேலூர்

    ஆடி அமாவாசையை முன்னிட்டு கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர் ,பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    அதேபோல் ஆடி அமாவாசையை முன்னிட்டு நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்தி வேலூர் பேட்டை மகா மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன் ,கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதிஅம்மன் ,செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் குடிப்பாட்டு மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×