என் மலர்
சேலம்
- சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.
- மதியம் 2.30 மணிக்கு சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் கன மழையாக கொட்டியது.
சேலம்:
சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. தொடர்ந்து நேற்று மதியம் திடீரென கரு மேகங்கள் திரண்டது.
சூறைக்காற்றுடன் மழை
மதியம் 2.30 மணிக்கு சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் கன மழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் இரு சக்கர வகனங்களில் சென்றவர்கள் பாலங்களின் கீழ் பகுதிகளில் ஒதுங்கினர்.
ஜங்சன், சாரதா கல்லூரி சாலை, அத்வை ஆசிரம சாலை, மெய்யனூர், இட்டேரி ரோடு, தாதாகப்பட்டி, நெத்திேமடு, கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி, சேலம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், 4 ரோடு, 5 ரோடு, ஜங்சன், அழகாபுரம், அஸ்தம்பட்டி உள்பட பல பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் கரை புரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் தத்தளித்த படியே சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இதனால் மழை நின்றதும் பல சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மழை நின்றதும் பாத்திரங்களில் தண்ணீரை எடுத்து அப்புறப்படுத்தினர்.
திருவாக்கவுண்டனூர் பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவு நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டை சுற்றிலும் கழிவு நீர் தேங்கியதால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இதே போல சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான சங்ககிரி, மேட்டூர், வீரகனூர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
129.10 மழை
மாவட்டத்தில் அதிக பட்சமாக சங்ககிரியில் 31 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 29.4, வீரகனூர் 23, தலைவாசல் 12, தம்மம்பட்டி 9, சேலம் 8.5, கெங்கவல்லி 5, ஆத்தூர் 4.2, ஆனைமடுவு 4, ஏற்காடு 3 மி.மீ என மாவட்டம் முழுவதும் 129.10 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமார பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பாலப்பட்டி, மோகனூர், பாண்ட மங்கலம், கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், நல்லூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், ஆனங்கூர், அண்ணாநகர், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
பலத்த மழை
அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , நடந்து சென்ற பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர் .
அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் , பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் கனமழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
குளிர்ச்சி
இந்த மழையினால் வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக திருச்செங்கோட்டில் 33 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் 18.2, மங்களபுரம் 5.8, கொல்லி மலை 3, ராசிபுரம் 1.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 61.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகம் 1995 -ம் கட்டப்பட்டது.
- இந்த நூலகத்திற்கு நூலக வாசிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் என 100 -க்கும் மேற்பட்டவர்கள் தினமும் வந்து புத்தகம் படிக்கின்றனர்.
மேட்டூர்:
மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகம் 1995 -ம் கட்டப்பட்டது. இங்கு 4,470 பேர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த நூலகத்திற்கு நூலக வாசிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் என 100 -க்கும் மேற்பட்டவர்கள் தினமும் வந்து புத்தகம் படிக்கின்றனர்.
மேற்கூரை சேதம்
இந்த நிலையில் தற்போது கட்டிட மேற்கூரை ஆங்காங்கே இடிந்து மிகவும் சேதம் அடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இது குறித்து நூலக வாசிகள் கூறும்போது, இந்த கட்டிடத்தின் மேற்கூரை ஆங்காங்கே இடிந்து விழுவதால் அச்சம் அடைந்து மாணவ- மாணவிகள் படிக்க வருவதில்லை. பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து பல முறை மனு கொடுத்தும் இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே நூலகத்தை சரி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தற்போது அணையில் 18.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3 ஆயிரத்து 454 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 51.83 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 18.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.
- கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
- 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.
மேலும் ஆந்திரா, பெங்களூரு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் உழவர் சந்தைகள் மற்றும் திருமணிமுத்தாறு ஆற்றோரம், வ.உ.சி, பால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை சற்று உயர்ந்துள்ளது.
தக்காளி கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்கிறது. கேரட் கிலோ ரூ.40, பீன்ஸ் ரூ.100, அவரை ரூ.50, உருளை ரூ.56, பாகற்காய் ரூ.35, கத்தரி ரூ. 24, வெண்டைக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.50 முதல் ரூ.80 வரை, சுரக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.20, மாங்காய் கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- எருமநாயக்கன்பாளையம் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முத்துராஜ் மர்ம நபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வாழக்குட்டப்பட்டி எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஜக்கம்ம நாயக்கர் மகன் முத்துராஜ் (வயது 39). இவர் மாந்திரீகம் செய்து தாயத்து கட்டும் தொழிலும் செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை எருமநாயக்கன்பாளையம் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முத்துராஜ் மர்ம நபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் ஜெயக்குமார் (37), மல்லூர் வேங்காம்பட்டி கீழ் தெருவை சேர்ந்த பூவரசன் (30), வேங்கம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த ராஜா (28), அதே பகுதியை சேர்ந்த கணேசன் (53) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தன்று இரவு முத்துராஜ் கடைக்கு சென்று விட்டு வந்தபோது மறைந்திருந்த ஜெயக்குமார் தரப்பினர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கட்டையால் பலமாக தாக்கியதில் இறந்தது தெரியவந்தது.
இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால் போலீசாரும் தீவிரமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.
- தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஜவுளி, இனிப்புகள் வாங்க பொதுமக்கள் நகரப் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டனர்.
சேலம்:
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஜவுளி, இனிப்புகள் வாங்க பொதுமக்கள் நகரப் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சேலம் முதல் அக்ரகாரம், 2-வது அக்ரகாரம், புதிய பஸ் நிலையம் பகுதி, ஸ்வர்ணபுரி, ஜங்சன் மெயின் ரோடு, பேர்லேண்ட்ஸ் பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் குடும்பம், குடும்ப மாக பொதுமக்கள் புத்தாடை வாங்க துணிக்கடை களுக்கு திரண்டனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிக ளிலும் கூட்டம் அலை மோதியது. மேலும் மதியத்திற்கு மேல் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பல்வேறு இடங்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால் போலீசாரும் தீவிரமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், டி.வி.எஸ். பஸ் நிறுத்தம், 5 ரோடு, முதல் அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பாக செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காணிப்பு கோபுரங்களில் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா மூலமும், போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் அடுத்த வாரம் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தொழில் பேட்டையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாவதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள தாதம்பட்டி அடுத்த படையாட்சி காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 43). இவர் உடையாபட்டி அருகே உள்ள தொழில்பேட்டையில் வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தொழில் பேட்டையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பிரபாவதி (45). இவர் மன அழுத்த காரணத்தால் கடந்த 7 ஆண்டுகளாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிரபாவதி வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாவதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தரமான சேலைகள் தயார் செய்து வழங்கப்பட்டு வருவதால் தரத்தின் முக்கியத்துவம் கருதி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வாங்கி செல்கின்றனர்.
- வெளிமாநில தரமற்ற சேலைகளால் பாரம்பரியமிக்க இளம்பிள்ளை சேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை தரமான சேலைக்கு பெயர் போன ஊர். கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தரமான சேலைகள் தயார் செய்து வழங்கப்பட்டு வருவதால் தரத்தின் முக்கியத்துவம் கருதி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வாங்கி செல்கின்றனர்.
அதோடு விசைத்தறி தயாரிப்பாளர், நூல் தயாரிப்பாளர், வார்ப்பு ராட்டை தொழிலாளி, நெசவு தொழிலாளி, வாஷிங் செய்பவர், அட்டை அடிப்பவர், டெக்ஸ்டைல் தொழில் செய்பவர் என பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சில வியாபாரிகள் சூரத்திலிருந்து தரமற்ற 2, 3 முறை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய சேலைகளை இறக்குமதி செய்து ரூ.300, ரூ.400 என்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கு இளம்பிள்ளை பகுதியில் சேலை உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் வெளிமாநில தரமற்ற சேலைகளால் பாரம்பரியமிக்க இளம்பிள்ளை சேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தரமற்ற சேலைகளை கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சேலைகளை வாங்க பொது மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றனர்.
- வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.
- ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சர்வ அபிஷேக, ஆராதனைகள், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
வாழப்பாடி:
வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சர்வ அபிஷேக, ஆராதனைகள், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. மஞ்சள் பட்டாடை உடுத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பஞ்ச பாண்டவர்கள், கிருஷ்ணபகவான் மரசிற்ப சாமிகளுக்கும், வன்னிமரத்து விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அக்ரஹாரம் அம்மன் அன்னதானம் குழுவினரால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாழப்பாடி ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன், வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன், புதுப்பட்டி மாரியம்மன், அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோவில்களிலும் பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- காரில் தூத்துக்குடியில் உள்ள கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அந்த காரை அவரது மகன் தனுஷ் ஓட்டினார்.
- படுகாயம் அடைந்த ராஜமாணிக்கத்தை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.
சேலம்:
சேலம் கருப்பூர் அருகே உள்ள கோட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 60). இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் ஒரு காரில் தூத்துக்குடியில் உள்ள கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அந்த காரை அவரது மகன் தனுஷ் ஓட்டினார். கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு சேலம் திரும்பினர்.
கார் இன்று அதிகாலை 2 மணி அளவில் கருப்பூர் கரும்பாலை அருகே வந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் முன் பகுதியில் இருந்த ராஜமாணிக்கம் படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த ராஜமாணிக்கத்தை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் பரிதாபமாக இறந்தார். ஆனால் கார் மீது மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்து குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிற்காகமல் சென்ற லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் என 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேட்டூர்:
சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சேலம் மாவட்டம் நங்கவள்ளி பஸ் நிலையத்தில் ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஜலகண்டாபுரம் நகர செயலாளர் கோகுலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் அருணாச்சலம், மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம், நங்கவள்ளி நகர செயலாளர் நடராஜ், மாதர் சம்மேளன மாவட்ட பொருளாளர் அம்பிகா, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் வேம்பன், விஜயமாணிக்கம், சாம்ராஜ், ஏ.ஐ.டி.யு.சி சந்திரன், சஞ்சீவி, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் என 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதையடுத்து கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51.45 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.






