என் மலர்
ராமநாதபுரம்
- அதிக லாபம் தருவதாக கூறி ஏராளமான மக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் மேல் விசாரணை, சோதனை என அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்காளத்தை மையமாக கொண்டு இயங்கி வந்த 2 அன்னிய செலாவணி வர்த்தக நிறுவனங்கள் அதிக லாபம் தருவதாக கூறி ஏராளமான மக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது.
இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மேல் விசாரணை, சோதனை என அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மேற்படி நிறுவனங்களுக்கு சொந்தமாக ராமேசுவரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் அறைகள் மற்றும் நிலம் என ரூ 30 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறையினர் முடக்கியிருந்தனர்.
தற்போது இந்த சொத் துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தி உள்ளது. அதன்படி இந்த விடுதியில் 60 அறைகள் மற்றும் தரிசு நிலம் ஒன்றை கையகப்படுத்தி இருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 10-ந்தேதி பூக்குழி இறங்குதல் விமரிசையாக நடந்தது.
- பூக்குழியில் நிலைதடுமாறி விழுந்தார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதற்கிடையே அந்த பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடை பெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 10-ந்தேதி பூக்குழி இறங்குதல் விமரிசையாக நடந்தது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதேபோல் ரியல் எஸ்டேட் அதிபரான கேசவனும் வேண்டுதல் நிறைவேற பூக்குழி இறங்கினார். அப்போது அவர் நெருப்புடன் கூடிய மரக்கட்டைகள் நிரப்பப்பட்டு இருந்த பூக்குழியில் நிலைதடுமாறி விழுந்தார்.
இதைப்பார்த்த சக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
உடலின் பெரும்பாலான பகுதியில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கேசவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி விக்னேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.
- கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வருகிற 14-ந்தேதி அன்று இரவு 12 மணிக்கு முன்னர் கட்டாயம் கரை திரும்ப வேண்டும்.
ராமநாதபுரம்:
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் வருகிற 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.
61 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் முன்னர் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வருகிற 14-ந்தேதி அன்று இரவு 12 மணிக்கு முன்னர் கட்டாயம் கரை திரும்ப வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
- கடலில் குதித்த கடற்படையினர் 34 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அத்தியாவசிய சமையல் பொருட்கள், மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், பீடி இலைகள் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்களை கண்காணிக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் மண்டபம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 56 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்கள் அதிகாரிகளின் வருகையை முன்கூட்டியே அறிந்து கொண்டு தப்பிச்சென்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் 304 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் இலங்கை கடற்படையால் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இலங்கை வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உடுத்துறை கடற்பகுதியில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது தமிழகத்திலிருந்து கடல் வழியாக கஞ்சா பண்டல்களுடன் வந்த படகை கண்டதும் இலங்கை கடற்படையினர் அந்த படகை நெருங்கினர். இதையடுத்து இலங்கை கடற்படையினரை கண்டதும் படகில் இருந்த வாலிபர் கஞ்சா பண்டல்களை கடலில் வீசினார். இருந்த போதிலும் உடனடியாக கடலில் குதித்த கடற்படையினர் 34 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.
மேலும் அந்த பைபர் படகை சுற்றிவளைத்து அதில் இருந்த வாலிபரை கைது செய்தனர். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 304 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி எனவும், கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வாலிபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் கஞ்சா போதை பொருளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனைக்கு பின் விடுதலை ஆனவர் என்று கூறப்படுகிறது.
- மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
- மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
ராமேசுவரம்:
உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய மார்க்ரேட் என்று பெயரிடப்பட்ட ஏ.ஐ. ரோபோடிக் ஆசிரியர் ராமேசுவரத்தில் செயல்படும் கிரைஸ்ட் தி கிங் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கற்பித்தல் பணிக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, நகரசபை சேர்மன் நாசர் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் பில்லி கிரகாம் அனைவரையும் வரவேற்றார்.
இது குறித்து பள்ளி முதல்வர் ஷாலினி பில்லி கிரஹாம் கூறியதாவது.:- மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏ.ஐ. ஆசிரியை பள்ளி மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிப்பதற்காகவே பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ரோபோடிக் ஆசிரியை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார்கள் முரளிதரன், அப்துல் ஜபார், டி.ஆர்.ஓ. நேர்முக உதவியாளர் சாமிநாதன், கடற்படை கமாண்டர் தினேஷ்குமார், மீனவ பிரதிநிதி சேசுராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதற்கு ரோபோட்டிக் ஆசிரியை பதில் அளித்தது. இதனை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
- மீனவர்களின் பிரச்சனைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும் என்றார் பிரதமர் மோடி.
- எனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போடுகள்.
ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மொழியின் பாரம்பரியம் உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிகக்கும் சென்றடைந்துள்ளது.
21ம் நூற்றாண்டில் தமிழகத்தின் பாரம்பரியத்தை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
மீனவர்களின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும்.
மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 3700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து தமக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது.
எனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போடுகள்.
100 ஆண்டுக்கு முன்பு பாம்பன் பாலத்தை கட்டியது ஒரு குஜராத்தி. இன்று புதிய பாம்பன் பாலத்தை திறந்த நானும் குஜராத்தி.
தேசத்தின் அனைத்து இடத்திலும் பாஜக தொண்டர்கள் மக்களுக்கு சேவை ஆற்றுவதை பார்த்து பெருமைப்படுகிறேன்.
சேவையாற்றும் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களுக்கு நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
நன்றி, வணக்கும், மீண்டும் சந்திக்கிறேன் என தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார்.
- தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில் 12 கோடி குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பல மாவட்டங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரிட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் திட்டத்தில் மட்டும் தமிழகத்தில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கான்கிரிட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 12 கோடி குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1,400 மக்கள் மருந்தகங்களில் தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது.
80 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைப்பதால் மக்களின் 700 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஏழைக் குழந்தைகளும் மருத்துவப்படிப்பினை கற்கும் வகையில் தமிழ்மொழியில் பாடத்திட்டங்களை உருவாக்குமாறு மாநில அரசுக்கு வேண்டுக்கோள் விடுக்கிறேன்.
மருத்துவ படிப்புகளை தாய் மொழியில் படிக்க வேண்டும் என்பதே விருப்பம், அதற்கான வழியை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியை விட கூடுதலாக நிதி வழங்கப்பட்டுள்ளது.
- 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது அவர் ஜம்முவில் உயர்மட்ட பாலம், மும்பையில் மிக நீளமான ரெயில் பாலம், பாம்பனில் செங்குத்து தூக்குப்பாலம் என பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளில் சாலை, விமானம், துறைமுகம், குடிநீர், கேஸ் போன்றவைகளுக்காக கட்டமைப்புகள் 6 மடங்கு அதிகரிப்பு.
இந்தியாவில் முதல் புல்லட் ரெயில்களுக்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியை விட கூடுதலாக நிதி வழங்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு பல திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கியும் சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள், அவர்கள் அழுதுவிட்டு போகட்டும்.
பா.ஜ.க. ஆட்சிக்கு முன்னதாக தமிழக ரெயில்வேக்கு ரூ.900 கோடி மட்டுமே கிடைத்தது. தற்போது ரூ.6000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு.
ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 7 மடங்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளில் கிராமப்புறம், நெடுஞ்சாலைகள் துறை மூலம் தமிழ்நாட்டில் 4,000 கி.மீ. அளவிற்கு சாலை போடப்பட்டுள்ளது.
தற்போது ரூ.8000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வல்லமை எவ்வளவு உயர்கிறதோ, அதே அளவு இந்தியாவில் வலிமை உயரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது.
- புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாம்பன் பாலத்தை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள்.
ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில் வணக்கம் என தமிழில் பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார்.
அப்போது ராம நவமி நன்னாளில் ஸ்ரீராம் என முழக்கமிடுங்கள் என பிரதமர் கூறிய உடன் அனைவரும் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.
விழாவில் அவர் மேலும் கூறியதாவது:-
ராம நவமி நாளில் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். ராமேஸ்வரம் பாரத ரத்னா கலாம் அவர்களின் பூமி, அறிவியலும் ஆன்மீகவும் இணைந்தது தான் வாழ்வு என்பதை நினைவுபடுத்துகிறது.
தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. சற்று நேரம் முன்புதான் அயோத்தியா ராமர் கோவிலில் ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் தெரிந்தன.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாம்பன் பாலத்தை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள். பாம்பன் பாலம் தான் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரெயில் பாலம். பாம்பன் பாலப்பணிகள் பல ஆண்டுகளாக நடந்தாலும் அதனை திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை.
ராமேஸ்வரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு ரெயில் சேவை கிடைப்பதன் மூலம் வளர்ச்சி மேம்படும் என பிரதமர் நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை இயங்கும் ரெயில் மூலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு போன்றவை அதிகரிக்கும். நாட்டின் பல துறைகளின் செயல்பாடுகளை 6 மடங்கு உயர்த்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விழுப்புரம் புதுச்சேரி இடையிலான 4 வழிச்சாலையை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
- வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பகுதியில் 4 வழிச்சாலை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்திற்கு ரூ.8300 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
மேலும், வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பகுதியில் 4 வழிச்சாலை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
விழுப்புரம் புதுச்சேரி இடையிலான 4 வழிச்சாலையை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
பூண்டியன்குப்பம்- சட்டநாதபுரம், கும்பகோணம் சோழபுரம்- தஞ்சை 4 வழிச்சாலைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
- பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- ராமேசுவரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' புதிய ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மத்திய பா.ஜ.க. அரசின் கனவுத்திட்டமான பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதனைத் தொடர்ந்து ராமேசுவரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' புதிய ரெயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செங்குத்து வடிவிலான தூக்கு பாலத்தை ரிமோட் மூலம் திறந்து வைத்த பிரதமர் மோடி, அதன் வழியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் கடந்து சென்றதை பார்வையிட்டார். நாட்டின் தேசியக்கொடி பறக்க அதில் இருந்த கடற்படை வீரர்கள் பிரதமர் மோடியை பார்த்து சல்யூட் அடித்து வீரவணக்கம் செலுத்தினர். பதிலுக்கு பிரதமர் மோடியும் வணக்கம் செலுத்தி கையசைத்தார்.
சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து பிரதமர் மோடி காரில் புறப்பட்டு ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார்.
- இலங்கையிலிருந்து இந்தியா திரும்பும் வழியில் ராமர் பாலத்தை தரிசித்தேன்.
- ராமரின் ஆசீர்வாதம் நமக்கு எப்போதும் இருக்கும்.
ராமேசுவரம்:
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக இலங்கையின் அனுராதாபுரத்திலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மண்டபம் வந்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில்,
இலங்கையிலிருந்து இந்தியா திரும்பும் வழியில் ராமர் பாலத்தை தரிசித்தேன். அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்ற அதே நேரத்தில் பாலத்தை கண்டு தரிசனம் செய்தேன். ராமர் நம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி. அவரது ஆசீர்வாதம் நமக்கு எப்போதும் இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






