என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
- மீனவர்களின் படகைஇலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
- விசாரணைக்கு பின் மீனவர்கள் 8 பேரும் மன்னார் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் 60 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அதிக மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு சென்றனர். ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு போதிய மீன்கள் கிடைக்கவில்லை என்று கூறிவந்தனர். அதேபோல் அதிக அளவில் கிடைக்கும் என்று எதிர் பார்த்த இறால் வரத்தும் வெகுவாக குறைந்தது.
இதற்கிடையே ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து சரமாரியாக தாக்கியதுடன், அவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்ட படகுகளை சேர்ந்த மீனவர்கள் லட்சக்கணக்கில் இழப்புடன் கரை சேர்ந்தனர். இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-
ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 235 விசைப்படகுகளில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே தலைமன்னார் கடல் பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். இன்று அதிகாலையில் அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது.
இதனைப் பார்த்த மீனவர்கள் அச்சத்திலும், அவசர கதியிலும் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அதில் ஜேசு என்பவரது படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்த ஜேசு (வயது 39), அண்ணாமலை (55), கல்யாணராமன், (45), சையது இப்ராகிம் (35), முனீஸ்வரன் (35), செல்வம் (28), கண்டிவேல் உள்பட 8 மீனவர்களை கைது செய்தனர்.
அவர்கள் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களை அபகரித்துக் கொண்ட இலங்கை கடற்படையினர், விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு சிரமங்களுக்கு இடையே மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற 12 நாட்களில் 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனையில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் வழக்கமான ஒன்றாகிப்போன மீனவர்கள் கைது நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் அடக்கி ஒடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உடனடியாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுதலை செய்து தமிழகத்திற்கு அழைத்து வரவேண்டும் என்று கைதான மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர்.






