என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர்.
    • அகதிகளாக வந்த 3 பேர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த வருடம் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்தது. இதனால் அவதியடைந்த இலங்கை தமிழர்கள் பலர் கள்ளத்தோணி மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.

    அவர்களிடம் கடலோர காவல் படை பிரிவு போலீசார் விசாரித்து அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். இலங்கையில் நிலைமை சீரான பிறகு கடந்த அகதிகள் வருகை முற்றிலும் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் 3 மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று அவர்கள் அந்த 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் இலங்கை பேச்சாளை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அகதிகளாக வந்த 3 பேர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதன் பின் அவர்கள் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    • பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இதற்காக நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வருகை தருகிறார்கள். அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. அதன்படி ஆனி அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே ஏராளமானோர் வாகனங்களில் ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். வட மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து பின் அதற்கு பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.

    பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று தனுஷ்கோடியிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர்.
    • ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்த சுற்றுலா பயணிகளை கண்காணித்த பாதுகாப்பு போலீசார் கடலில் இறங்க கூடாது என எச்சரித்தனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    விடுமுறையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கார், பஸ், வேன் மற்றும் ரெயில்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி கொடுத்தனர்.

    தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று தனுஷ்கோடியிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர். ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்த சுற்றுலா பயணிகளை கண்காணித்த பாதுகாப்பு போலீசார் கடலில் இறங்க கூடாது என எச்சரித்தனர்.

    இதே போல் பேக்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தையும் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

    • உள்ளூர் மக்கள், அரசியல் கட்சியினர், கடும் எதிர்ப்பு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • வழிபாட்டு உரிமை தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

    ராமேசுவரம்:

    உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

    ராமேசுவரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனி வழி காலம் காலமாக இருந்து வருகிறது. இதன் மூலம் உள்ளூர் பக்தர்கள் திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இணை ஆணையராக செல்லத்துரை பொறுப்பேற்ற நிலையில் உள்ளூர் பக்தர்கள் வழக்கமாக செல்லும் தரிசன வழித்தடத்திற்கு தடை விதித்தார். மேலும் மற்ற பக்தர்களை போல் கட்டண வழித்தடம் அல்லது பொது தரிசனம் வழியாக தரிசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதற்கு உள்ளூர் மக்கள், அரசியல் கட்சியினர், கடும் எதிர்ப்பு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ராமேசுவரத்தில் உள்ளூர் பக்தர்கள் வழிபாட்டு உரிமையை காக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் வழிபாட்டு உரிமை தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. ஆனால் கோவில் நிர்வாகம் கட்டண தரிசனம் வழியில் உள்ளூர் மக்கள் வர வேண்டும் என பிடிவாதமாக கூறிவிட்டது.

    கோவில் நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து இன்று கோவிலில் நுழைவு போராட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்காரணமாக கோவில் நுழைவுவாயிலில் இன்று காலை தடுப்புகள் அமைத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணியளவில் கோவில் முன்பு உள்ளூர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

    அவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டவாறு தடுப்புகளை தாண்டி கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு போலீசார் கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர்.

    இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோவிலுக்கு செல்ல முற்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் நுழைவு போராட்டம் காரணமாக மேலவாசல் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 

    • கடந்த 2 நாட்களாக மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
    • கடல் சீற்றம் குறைந்தவுடன் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த காலகட்டங்களில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை மராமத்து பணி பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே தொடங்கினர். அதன்படி விசைப்படகுகளில் வலைகளை ஏற்றுதல், கேன்களில் டீசல் நிரப்புதல், படகுகளை இயக்கி என்ஜின் செயல்பாடுகளை சரிபார்த்தல், மீன்களை பதப்படுத்த பெட்டிகளில் ஐஸ் நிரப்புதல் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தொண்டி, உச்சிப்புளி, மூக்கையூர் ஆகிய இடங்களில் இருந்து கடலுக்கு செல்வதற்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தயார் நிலையில் இருந்தன. அதே போல் வழக்கமாக குறைந்த தூரத்திற்கு சென்று மீன்பிடித்து வரும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்வதற்காக ஆயத்தமாகி இருந்தனர்.

     

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. அதிலும் நேற்று மாலை முதல் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறை அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. குறிப்பாக தென்கடல் பகுதியில் 5 அடி உயரத்திற்கும் மேலாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீனவளத்துறை தடை விதித்துள்ளது.

    ராட்சத அலை எழும்புவதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீனவர்கள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடல் சீற்றம் காரணமாக பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஒருசில படகுகள் பாதுகாப்பு கருதி கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

    மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து 61 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் கடல் சீற்றம் காரமாக தடை விதிக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சீற்றம் குறைந்தவுடன் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நாளை முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

    • பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என 2 பேர் பணிபுரிந்த நிலையில் கடந்த மாதம் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார்.
    • பேச்சுத் துணைக்கு, விளையாடுவதற்கு கூட யாரும் இல்லாததால் குழந்தை பள்ளிக்கு செல்வதற்கு பயப்படுகிறாள்.

    தொண்டி:

    திருவாடானை யூனியனில் 112 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் இன்று கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் தொண்டி அருகே தளிர் மருங்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒரே ஒரு மாணவிக்காக மட்டுமே பள்ளி திறக்கப்பட உள்ளது.

    இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெறாத நிலையில் கடந்த ஆண்டு 5-ம் வகுப்பில் ஒரு மாணவன், 2-ம் வகுப்பில் ஒரு மாணவி என இருவர் மட்டுமே படித்தனர்.

    இந்த ஆண்டு இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவன் இங்கிருந்து 6-ம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு செல்கிறான். இதனால் 2-ம் வகுப்பில் இருந்து 3-ம் வகுப்புக்கு செல்லும் ஒரே ஒரு மாணவி மட்டும் தற்போது படித்து வருகிறாள்.

    இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என 2 பேர் பணிபுரிந்த நிலையில் கடந்த மாதம் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார். இதனால் தற்போது ஒரு உதவி ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். தற்போது வரை இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை ஏதும் நடைபெறாத நிலையில் இன்று ஒரே ஒரு மாணவிக்காக மட்டுமே அரசு பள்ளி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், தளிர்மருங்கூர் அரசு பள்ளியில் மாணவர்கள் இல்லாவிட்டால் பள்ளியை மூடி விடுவார்கள் என்று தெரிந்ததால் தனியார் பள்ளியில் படித்து வந்த என் குழந்தையை இந்த பள்ளியில் சேர்த்தேன். இப்போது என் மகள் ஒருவர் மட்டுமே படிக்க உள்ளார். பேச்சுத் துணைக்கு, விளையாடுவதற்கு கூட யாரும் இல்லாததால் குழந்தை பள்ளிக்கு செல்வதற்கு பயப்படுகிறாள். இப்பள்ளியில் குழந்தைகள் இல்லாத நிலையில் இப்பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களை அழைத்து பேசி மாணவர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

    • கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஸ்படிகலிங்க பூஜையில் மனைவியுடன் கலந்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் ஆன்மிக பயணமாக திருச்சி, ராமேசுவரம், மதுரை கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக நேற்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் முசிறி செல்லும் வழியில் அமைந்துள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான குணசீலத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெற்ற விழாவில் கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார் எழுதிய குணசீல மகாத்மியம் என்ற நூலை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

    இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை ராமேசுவரம் வருகை தந்தார். அங்கு அவரை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இரவில் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்று புனித நீராடினார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் தனது மனைவியுடன் நீராடிய கவர்னர், கோவிலுக்குள் சென்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டார்.

    தொடர்ந்து அங்கு நடைபெற்ற ஸ்படிகலிங்க பூஜையில் மனைவியுடன் கலந்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தார். முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் உள்ள புகழ்பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி காரில் புறப்பட்டு அனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளுக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட அவர் மதுரை சென்றார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையையொட்டி ராமேசுவரம், மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
    • மன்னார் வளைகுடா, கொமாரின் பகுதி, அதை ஒட்டிய தமிழக கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.

    இதுதவிர தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது. இதன் காரணங்களால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

    மன்னார் வளைகுடா, கொமாரின் பகுதி, அதை ஒட்டிய தமிழக கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
    • குழந்தையின் தலையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் இரண்டரை வயது பெண் குழந்தையை தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தை லெமோரியாவை தனது சொந்த மாமா சஞ்சய் கொலை செய்து தலையை துண்டித்துள்ளார். குழந்தையின் கழுத்தறுத்து கொலை செய்து தலையை குளத்தில் வீசிவிட்டு தப்பியுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.

    பிறகு, குழந்தையின் தலையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், குளத்தில் வீசப்பட்ட குழந்தையின் தலையை போலீசார் மீட்டனர்.

    கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகாத நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திருடு போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
    • சித்திரை திருவிழா காண வந்த பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி ராதா, சித்திரை திருவிழாயை முன்னிட்டு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை காண தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். பின்னர் அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

    அப்போது வழியில் ரவி தியேட்டர் எதிரே அமைக்கப்பட்ட அன்னதான கூடத்தில் அன்னதானம் வாங்கினார். அதே சமயம் ராதா கழுத்தில் அணிந்திருந்த 31 பவுன் நகையை 'மர்ம' நபர்கள் திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் நைசாக பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். என்ன நடந்தது என்று நினைவு திரும்புவதற்குள் அவர்கள் மின்னலாய் மறைந்தனர்.

    முன்னதாக சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் பகுதி மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடும் கும்பல் பக்தர்களோடு பக்தர்களாக கூட்டத்தில் கலந்து நைசாக நகைகளை திருடி சென்று விடுகிறார்கள்.

    அதேபோல் தான் நகையை பறிகொடுத்த ராதா கழுத்து நிறைய நகைகள் அணிந்திருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். அன்னதானம் வாங்கும் ஆர்வத்தில் ராதா இருந்தபோது பின்னால் இருந்து நகைகளை பறித்து சென்றுவிட்டனர். நேற்று மாலை முதல் விடிய, விடிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி சென்றதால் நகை திருடர்களால் கைவரிசை காட்ட முடியவில்லை. இதனால் இன்று அதிகாலை நேரத்தை பயன்படுத்தி திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து ராதா கூறுகையில், நான் அதிகாலை 5 மணியளவில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மொபட்டில் வந்து கொண்டிருந்த போது ரவி தியேட்டர் எதிரே அன்னதானம் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனது கழுத்தில் அணிந்திருந்த 31 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் எப்படி திருடி சென்றார்கள் என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. எனவே எனது தங்கச் சங்கிலியை போலீசார் மீட்டு தர வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார். திருடு போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்து நகை பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சித்திரை திருவிழா காண வந்த பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    • ராமநாதபிரபுவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் ராமநாதபிரபு (வயது 28). வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி, மது போதை என்று ஊரை சுற்றி வந்துள்ளார். பண பலம் மிக்க அவரை பெற்றோரும் பல முறை கண்டித்தும் அவர் திருந்தவில்லை.

    இதற்கிடைய திருமணத்திற்கு பிறகு ராமநாதபிரபு தன்னுடைய மனைவி ஊரான ராமநாதபுரம் மாவட்டம் அம்மன் கோவிலை அடுத்த தெற்கு தரவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த சாத்தையா மற்றும் சிலருடன் அமர்ந்து ராமநாதபிரபு மது அருந்தினார். பின்னர் தலைக்கேறிய அளவுக்கு அதிகமான போதையுடன் தனக்கு சொந்தமான காரில் நண்பர்களான அம்மன்கோவிலை சேர்ந்த பழனி மற்றும் வள்ளிமாடன்வலசையைச் சேர்ந்த சிவா, தெற்கு தரவையைச் சேர்ந்த சாத்தையா ஆகியோருடன் அங்கிருந்து புறப்பட்டார்.

    அப்போது எதிரே வாலி நோக்கத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி உப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அதனை டிரைவர் கார்த்தி ஓட்டினார். அம்மன்கோவிலை அடுத்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை குடியிருப்பு பகுதியில் சென்றபோது எதிரோ வந்த லாரி, காரின் பக்கவாட்டு பகுதியில் லேசாக உரசியது. இதில் அந்த காரின் கண்ணாடி உடைந்ததுடன், காரிலும் கீறல் ஏற்பட்டது.

    இதனையடுத்து லாரியை முந்திச் சென்ற பிரபு லாரியை மடக்கி வழிமறித்து நிறுத்தினார். பின்னர் அந்த லாரி டிரைவர் கார்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்த பலர் திரண்டனர். அப்போது காரில் கீறல் விழுந்ததை உடனடியாக சரி செய்து தருவதாகவும், கண்ணாடியை மாற்றி தருவதாகவும் லாரி டிரைவர் கார்த்தி கூறியுள்ளார்.


    ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத ராமநாதபிரபு லாரி டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து தகராறு நடந்த பகுதியில் திரண்ட அம்மன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், லாரி டிரைவர் கார்த்திக்கு ஆதரவாக, ராமநாதபிரபு தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தனது சகோதரரை தொலைபேசியில் தொடார்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வரச்சொன்னதன்பேரில், அவருடன் அம்மன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் அங்கு வந்தனர்.

    அவர்களுடனும் போதையில் இருந்த ராமநாதபிரபு தகராறு செய்தார். மேலும் அவருடன் இருந்த அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்களை பார்த்து, தங்களுக்கு ஆதரவாக பேசாமல் வெளியூர் நபருக்கு ஏன் ஆதரவாக பேசுகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவழியாக இருதரப்பினரையும் சமாதானம் செய்து பிரச்சினையை மேலும் வளர்க்க வேண்டாம், அங்கிருந்து கலைந்து செல்லுமாறும், காருக்கும், லாரிக்கும் வழியை விடுமாறும் கூறியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து காரை எடுத்துக் கொண்டு புறப்பட்ட ராமநாதபிரபு தன்னுடன் காரில் வந்த நண்பர்கள் சிவா, சாத்தையா ஆகியோரை அதே இடத்தில் இறக்கிவிட்டார். ஆத்திரம் தீராமல் தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணினார். சிறிது தூரம் சென்று விட்டு மீண்டு காரை திருப்பிய ராமநாதபிரபு அதிவேகமாக வந்த அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது காரை மூர்க்கத்தனமாக ஏற்றினார். மேலும் பின் நோக்கி காரை இயக்கி மீண்டும் ஒருமுறை ஏற்றினார். பின்னர் காரில் இருந்து அவர் குதித்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இங்கே நடந்தது கனவா அல்லது நனவா என்று புரியாமல் மக்கள் நின்றனர். இந்த கோர சம்பவத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். த.மு.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லா கான், வர்த்தக அணி மாநில செயலாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா ஆகியோர் தலைமையில் காயம் அடைந்த 12 பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவம் நடந்த பகுதிக்கு ஒரு கிராமமே திரண்டு வந்தது. அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓலமிட்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் சாத்தையா உட்பட 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை செல்லும் வழியில் ராமநாதபிரபுவின் நண்பர் சாத்தையா பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது.

    கை, கால் முறிவு, தலையில் காயம் அடைந்த மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்தியவர் கிராமமக்கள் கையில் சிக்கினால் அவரை அடித்தே கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் ராமநாதபிரபுவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் மீது கடுமையான காயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல், பொது மக்களுக்கு இடையூறு, தீங்கு விளைவித்தல், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விபத்து, தாக்குதல், கொலை முயற்சி ஆகிய 5 பிரிவுகளில் கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சினிமாவை மிஞ்சும் அளவுக்கு, ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை மூர்க்கத்தனமாக காரை கொண்டு ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடல் வழியாக ஊடுருவலை தடுக்க தீவிர கண்காணிப்பு.
    • சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு.

    தொண்டி:

    தமிழகத்தில் 180 கி.மீ. நீள கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் விளங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

    அண்டை நாடான இலங்கை, ராமநாதபுரத்துக்கு கடல் வழியாக 20 மைல் தொலைவில் உள்ளது. எனவே அங்கிருந்து கடத்தலை தடுக்க கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாகவும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.பட்டனம் முதல் சாயல்குடி ரோஸ்மா நகர் வரை கடற்கரை உள்ளது. பாக் நீரினை, மன்னார் வளைகுடா பகுதிகளை உள்ளடக்கிய இந்த பகுதியில் அன்னிய ஊடுருவல், கடத்தல்களை தடுக்க தொண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோரப் பகுதியில் 'சஜாக்' எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை கடலோர பாதுகாப்பு குழு போலீசாரால் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.

    வருடத்திற்கு சுமார் ஏழு முறைக்கு மேல் நடக்கும் இந்த சஜாக் எனப்படும் ஒத்திகை கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ லைத் தடுப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    தற்போது காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிர வாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து தொண்டி கடல் பகுதிக்கு அருகே உள்ள இலங்கை கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் போன்ற அன்னியர்கள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி கடலில் வரும் படகுகளை நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? வேறு ஏதும் கடத்தல் பொருட்கள் உள்ளதா? ஆயு தங்கள் ஏதும் வைக்கப்பட்டு உள்ளதா? என படகுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடல் மார்க்கம் மட்டுமின்றி கிழக்கு கடற்கரை வழியாவும், சாலை வழியாகவும் சோதனைச் சாவடிகளில் தீவிரகண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஆரம்பிக்கும் எஸ்.பி.பட்டினம் முதல் தேவி பட்டணம் வரை உள்ள கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குடும்பத்தின் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் துளசி மற்றும் ஏட்டு, போலீசார் கடல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடற்கரை பகுதிக ளில் புதிய நபர்கள் நட மாட்டம் குறித்து மீனவர்கள் உடனடியாக கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    கடற்கரையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    ×