என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • அபிராமம் அருகே கருவேல மரங்களை அகற்றி நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டது.
    • நத்தம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இதன் சுவர்கள், தரைதளம், மேல்தளம் சேதமடைந்து உள்ளது. நூலகம் ஊருக்கு ஒதுக்குபபுறமாக இடத்தில் உள்ளதால் மக்கள் நீண்ட தூரம் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

    சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் எந்த நடவடி க்கையும் எடுக்காததால் கருவேல மரங்களால் புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்களில் குடிமகன்கள் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    இதுகுறித்து நத்தம் கிராம மக்கள் கூறுகையில், நூலகத்திற்க்கு சொந்த கட்டிட வசதி இருந்தும் அதை சீரமைக்கவில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் நூலகத்திற்க்கு யாரும் படிக்க செல்வது கிடையாது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் செல்வது கிடையாது. இந்த நூலகத்தை ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் பயன்ப டுத்தி வந்த நிலையில், நூலக கட்டிடம் சேதமடைந்ததால் யாரும் செல்லவில்லை.

    பொதுமக்கள் நடமாட்ட முள்ள பகுதியில் நூலகம் அமைத்து அனை வரும் பயன்படுத்தும் வகையில் நூலக கட்டிடத்தை கொண்டுவர வேண்டும். சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து, கருவேல மரங்களை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலக கட்டிடத்தை கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் யாருக்கும் இன்று அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை.
    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதி கடல் பரப்பில் காற்றழுத்தங்கள் இருப்பதால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தென் வட இலங்கை அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து வருகிற 21-ந் தேதி தமிழக கடலோர பகுதிக்கு நெருக்கமாக வருவதால் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் வரை உள்ள பல இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிலும் குறிப்பாக 21 மற்றும் 22-ந்தேதிகளில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எச்சரிக்கையின் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் யாருக்கும் இன்று அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் அவர்களுக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் பாம்பன் மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    பலத்த காற்று காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. பாம்பனில் அலைகள் ஆக்ரோஷமாக இருந்ததால் கடல் நீர் கரையோர வீடுகளில் புகுந்தது. இதனால் மீனவ மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    • அ.தி.மு.க. மாநில இளைஞரணி இணை செயலாளர் நியமனம் செய்யப்பட்டார்.
    • இவரை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்தார்.

    காரைக்குடி

    ஓ.பன்னீர்செல்வம் அணியின் அ.தி.மு.க. மாநில இளைஞரணியின் இணைச் செயலாளராக காரைக்குடியை சேர்ந்த டாக்டர். திருஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் ஆகியோரது பரிந்துரையின் பேரில் இவரை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்தார்.

    இதையொட்டி திருஞானம் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திருஞானத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் வடிவமைத்த ரத்னா பில்டர்ஸ் தலைமை பொறியாளர் பால்பாண்டியனுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
    • இது குறித்த தகவல் வலைத்தளங்களில் வைரலாக பரவி ஏராளமானோர் பொறியாளர் பால்பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரில் உள்ள ரத்னா பில்டர்ஸ் பல ஆண்டுகளாக கட்டிட பணிகளில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த நிறுவனத்தை அறியா தவர்கள் இருக்க முடியாது. பல்வேறு இடங்களில் புதிய பள்ளிவாசல் உள்பட உலகத்தரம் வாய்ந்த முறையில் பல கட்டிடங்களை வடிவமைத்து கட்டிக் கொடுத்துள்ளனர்.

    இந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் திறக்கப்பட்ட கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் இறையில்லமும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பள்ளிவாசலுக்கான வடிவமைப்பு பணிகளை ரத்னா பில்டர்ஸ் தலைமை பொறியாளர் பால்பாண்டியன் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

    திறப்பு விழாக்கு வருகை தந்த ஏராளமான ஜமாத் நிர்வாகிகள் பால்பாண்டியனை நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டினர். இறையில்லத்தை வடிவ மைத்த பொறியாளர் பால் பாண்டியனுக்கு ரூ.8 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளனர். சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்தப் பணத்தை நன்கொடையாக விழா கமிட்டினரிடம் வழங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்த தகவல் வலைத்தளங்களில் வைரலாக பரவி ஏராளமானோர் பொறியாளர் பால்பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • பிரதமரின் வேளாண் திட்டத்தில் 13-வது தவணை பெறுவதற்கு செல்போன், ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் இன்றும், நாைளயும் நடக்கிறது.
    • இது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நேரடியாக சந்தித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பி.எம்.கிஷான் திட்டம் எனப்படும் பிரதரின் கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான இடு பொருள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது 13-வது தவணை விரைவில் விடுவிக்கப்படவுள்ளது. 13-வது தவணை பணம் வரவு வைப்பதற்கு விவசாயிகள் தங்கள் கைபேசி எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்து ekyC பதிவேற்றம் செய்தால் மட்டுமே நிதியுதவி கிடைக்கும்.

    முதுகுளத்தூர் வட்டாரத்தில் 2100 விவசாயிகளுக்கு eKYC இதுவரை செய்யப்படாமல் உள்ளது. கிராமங்கள் தோறும் இது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நேரடியாக சந்தித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ekyC மூலம் கைபேசி எண்ணை இணைக்கும் பணியை பொது இ-சேவை மையங்கள் மற்றும் அஞ்சலகங்களில் மேற்கொள்ளலாம். விவசாயிகளுக்கு 13-வது தவணையை பெற்று வழங்குவதற்காக eKYC செய்து முடிக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஏதுவாக இன்றும், நாைளயும்(19, 20-ந்தேதிகளில்) முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் eKYC செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    முதுகுளத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் 314 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மஸ்தான் வழங்கினர்.
    • சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    விழாவில் அமைச்சர் மஸ்தான் பேசுகையில், பன்முக நோக்கத்தோடு இந்தியாவில் எந்த மாநி லத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தை அமைதி மாநிலமாக மாற்றி ஆளுமை திறன் கொண்ட முதல்வராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்.

    இங்கு பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசின் திட்டங்களை பெற்றுதர பக்கபலமாக இருப்பேன் என்றார். இதையடுத்து சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 314 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்து 99 ஆயிரத்து 983 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி தொகுத்து வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், திருவாடனை கருமாணிக்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பி ரமணியன், ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அபிராமத்தில் உள்ள மயானத்தை சுற்றி காம்பவுண்டு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • இங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எல்லா சமூக மக்களும் வசித்து வந்தாலும் இந்து சமூகத்தினர் இறந்துவிட்டால் அடக்கம் செய்வதற்கு சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது.

    20 ஆண்டு களுக்கு முன்பு இந்த மயானத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். காலப்போக்கில் கம்பிவேலி காணாமல் போய்விட்டது.

    அன்றில் இருந்து இன்று வரை மயானம் திறந்த வெளியில் இருக்கிறது. இதனால் மயானத்தை சமூக விரோதிகள் இரவு-பகல் பாராமல் மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் இதை பார்த்து முகம் சுழிக்கும் நிலை உள்ளது.

    இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வாசு மற்றும் பொதுமக்கள் கூறுகையில், மயானத்துக்கு சுற்றுசுவர் இல்லாததால் சிலர் சாததமாக பயன்படுத்தி க்கொண்டு வளாகத்தை மது அருந்தும் பார் ஆகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி உள்ளது. ஆங்காங்கே மதுபாட்டில் உடைந்து கிடக்கின்றன.

    இறுதி சடங்குக்கு வரும் பொதுமக்கள் இங்கு தண்ணீர் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஒருசில நேரங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்தபின்பும், இறந்த வர்களை எரிக்கும்போதும் கவனக்குறைவால் நாய் போன்ற விலங்குகள் இறந்தவர்களின் உடல்களை சிதைத்து பொதுமக்கள் நடமாட்டமுள்ள இடத்திற்கு கொண்டு வந்து விடுகிறது.இதனால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் பொது மக்களும் பயப்படுகின்றனர்.

    உடலை எரியூட்டும் தகன மேடை திறந்தவெளியாக இருப்பதால் இன்றுவரை நவீன மயமாக்கப்பட்ட மின்மயானம் இல்லை. இதை அதிகாரிகள் ஆய்வு செய்து மயானத்திற்கு சுற்றுசுவர் உட்பட அடிப்படை வசதி அமைக்க வேண்டும். இங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • திருப்புல்லாணியில் மீன் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
    • இந்த மீன் மார்க்கெட் திறக்கப்படாததால் திருப்புல்லாணி ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சியில் மீன் மார்க்கெட் இல்லாமல் மீனவர்கள் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகள், பொதுமக்கள் புதிய மீன் மார்க்கெட் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து மீன் மார்க்கெட் கட்டப்பட்டது. கடைகள் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக திருப்புல்லாணி பகுதியில் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுகிறது.

    குறிப்பாக திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில் மீன்களை விற்பனை செய்வதால் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.

    இது குறித்து எஸ்.டி.பி.ஐ. முன்னாள் மாவட்ட தலைவர் அப்துல் வகாப் கூறியதாவது:-

    பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட மீன் மார்க்கெட் திறக்கப்படாததால் திருப்புல்லாணி ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களில் விற்பனை மீன்களை செய்வதை தடுத்து நிறுத்தினால் மீனவர்கள் மீன் மார்க்கெட்டின் உள்ளே விற்பனை செய்யும் நிலை உருவாகும்.

    இது குறித்து அதிகாரி களுக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது புரியாத புதிராக உள்ளது. மேலும் திருப்புல்லாணி பஸ் நிறுத்தத்திற்கு முன் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சிறுவர் பூங்கா சேதமடைந்தது கருவேல மரங்கள் நிறைந்த காடாக உள்ளது.

    அந்த இடத்திற்கு ஒரு தீர்வு வேண்டும்.குடிநீர் திட்டத்திற்காக முஸ்லிம் தெருவில் உடைக்கப்பட்ட சாலைகள் இன்னும் சரி செய்யாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர் என்றார்.

    • ஹரிபிரசாத் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து செல்வராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
    • ஹரிபிரசாத், செல்வராணி மற்றும் ஒரு குழந்தையுடன் ராமேசுவரத்திற்கு சென்று விட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பெரியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஹரிபிரசாத் (வயது 29). கட்டிட தொழிலாளியான இவர் சில ஆண்டுகள் மதுரையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    அப்போது இவருக்கும், கணவரை இழந்த பெண்ணான ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த செல்வ ராணி (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. செல்வராணிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இரு குடும்பத்தினரின் சம்மதத்தின் பேரில் ஹரி பிரசாத், செல்வராணியுடன் தனி குடித்தனம் நடத்தி வந்தார்.

    ஹரிபிரசாத் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து செல்வராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஹரிபிரசாத், செல்வராணி மற்றும் ஒரு குழந்தையுடன் ராமேசுவரத்திற்கு சென்று விட்டனர். அங்கும் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் செல்வராணியின் நடத்தையில் ஹரிபிரசாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று மதுகுடித்துவிட்டு வந்த ஹரிபிரசாத், அவரிடம் அதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஹரிபிரசாத், செல்வராணியை சரமாரியாக அடித்து உதைத்தார். அதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பெண் அடித்துக்கொல்லப்பட்டது குறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வராணியை அடித்துக் கொன்ற ஹரிபிரசாத்தை கைது செய்தனர்.

    பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அபிராமம் அருகே சிமெண்டு சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சாலைகள் மண் சாலைகளாக உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம். அபிராமம் அருகே உள்ள உடையநாதபுரம், பள்ளபச்சேரி, அம்பேத்கார் நகர், ஏ. புதூர், அருந்ததியர் காலனி உள்ளிட்ட பகுதிகள் உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு சுமார் 140-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சாலைகள் மண் சாலைகளாக உள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    இதுகுறித்து அம்பேத்கார் நகர் பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலைகளை சிமெண்டு சாலையாக மாற்றித் தர வேண்டும். தெருவிளக்குகள் கூடுதலாக அமைத்து தர வேண்டும். 2015-16-ம் நிதியாண்டில் கட்டப்பட்ட கழிவறை சேதமடைந்து செயல்படாமல் உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேலுவிடம் கேட்ட போது, இந்த பணிகளுக்கு ஏ.எஸ். கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என்றார்.

    • ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் திறப்பு விழாவில் அல்பரிதா குரூப் நிறுவனங்களின் சேர்மன் அபுல்கலாம் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
    • ஜாமியா மஸ்ஜித் விழா கமிட்டி மேலாளர் சகுபர் அலி நன்றி கூறினார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் பிரமாண்டமாக கட்டப்ப ட்டுள்ளது. இந்த இறையில்ல கட்டுமான பணிக்கு பெரும் முயற்சி மேற்கொண்ட முன்னாள் ஜமாத் தலை வர்கள், அல்பரிதா குரூப் நிறுவனங்களின் நிறுவனம் ஹாக்கி ஜமால் முகமது, முன்னாள் ஜமாத் தலைவர் துல்கருணை சேட், முன்னாள் பொருளாளர் அபு ஹனிபா வழுதூர், முன்னாள் இமாம் அப்துல் காதர் ஆலி, முன்னாள் ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம் மற்றும் வழுதூர் குலாம் முகமது ஆகியோர் முன்னோர்களின் துவா பரக்கத்தாலும் இறைவனின் நாட்டப்படி இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    வழுதூர் கிராம மக்களின் முயற்சியால் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டு மாலை 2 மணி வரை சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு உலக நாடுகளில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அல்பரிதா அல்நஜ்மா குரூப் நிறுவனங்களின் சேர்மன் அபுல்கலாம், அவரது சகோதரர்கள் பகுருதீன் ஹாஜா ஜமால் நசுருதீன் ஆகியோர் நிர்வாக கமிட்டியினருடன் இணைந்து பள்ளிவாசல் திறப்பு விழாவுக்காக ஒரு மாதமாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து சிறப்பு அழைப்பிதழ் வழங்கி விழாவில் கலந்து கொள்ள அழைத்தனர்.

    அதன்படி மாவட்ட த்தில் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    முன்னதாக திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவருக்கும் அல் நஜ்மா அல்பரிதா குழுமத்தின் சார்பிலும், வழுதூர் கிராம மக்கள் வழுதூர் இளைஞர் சங்கத்தினர் சார்பிலும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    நேற்று இரவு பள்ளி வாசல் முழுவதும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு திறப்பு விழாவை காண ஏற்பாடுகளை வழுதூர் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜமாத் தலைவர் கமாலுதீன், தற்பொழுது நிர்வாகத்தில் உள்ள ஜமாத் நிர்வாகிகள், இளைஞர் சங்கத்தினர் விழா கமிட்டியினர் ஏற்பாட்டில் இணைந்து இதற்கான திறப்பு விழா ஏற்பாடுகளை செய்தனர்.

    திறப்பு விழாவுக்கு வழு தூர் ஜமாத் தலைவர் முகம்மது மன்சூர் தலைமை தாங்கினார். வழுதூர் ஜமாத் செயலாளர் அப்துல் ஹக்கீம், மலேசியா ஜமாத் தலைவர் லியாக்கத் அலி, மலேசியா ஜமாத் செயலாளர் சிராஜூதீன், துபாய் ஜமாத் தலைவர் சேகு ஜெய்னுலாப்தீன், துபாய் ஜமாத் செயலாளர் தாவுத் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். விழா கமிட்டி செயலாளர் முஸ்தபா கமால் வரவேற்றார். தலைமை இமாம் ரஹ்மத்துல்லா மிஸ்பாகி கிராஅத் ஓதினார்.

    வி.எஸ்.எம். அமானுல்லா, ஓ.எம்.எஸ்.அன்சாரி, அபுஹனி, சீனி அகமது, ஆகியோர் பள்ளிவாசலை திறந்துவைத்தனர்.

    முகம்மது ஹாருன், முகம்மது சஜருதீன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    இறை இல்லத்தைக் கட்டிக் கொடுத்த வசந்தா கன்ஸ்ட்ரக்சன்ஸ் தலைமைப் பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இல்ல வடிவமைப்பாளர் ரத்னா பில்டர்ஸ் தலைமைப் பொறியாளர் பால்பாண்டி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    ஜாமியா மஸ்ஜித் விழா கமிட்டி மேலாளர் சகுபர் அலி நன்றி கூறினார்.

    அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், நாசர், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஆளூர் ஷா நவாஸ், பரமக்குடி முருகேசன், திருவாடனை கரு.மாணிக்கம், ஐ.யு.எம்.எல். மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபூபக்கர், மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, மனித நேய ஜன நாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் புகழ்பெற்ற வல்லபை அய்யப்பன் கோவில் உள்ளது. எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டு விழாவும் ஆண்டு தோறும் இங்கு விமரிசையாக நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் வல்லபை அய்யப்பன் கோவிலில் இன்று காலை மண்டல பூஜை கொடியேற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    முன்னதாக தலைமை குருக்கள் மோகன் சாமி தலைமையில் கோவிலில் கணபதி ஹோமமும், அஷ்டா பிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு அய்யப்பன் சன்னதிக்கு எதிரே உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று பக்திபரவசத்துடன் முழக்கமிட்டனர். வல்லபை அய்யப்பா சேவை நிலையம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.மோகன் சுவாமி கூறியதாவது:-

    ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை யானது சபரிமலையில் நடைபெறுவது போன்றே ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    தினசரி காலை மற்றும் மாலை இருவேளையும் சுவாமி நகர்வலம் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்று பின்னர் பூதபலி பூஜை நடைபெறும். வரும் 26-ந்தேதி மாலை பள்ளி வேட்டை புறப்பாடு (நகர் ஊர்வலம்) நடைபெறும். அப்போது கோவில் நடைசாத்தப்பட்டு இருக்கும். 27-ந்தேதி காலை 8மணிக்கு மண்டல பூஜையன்று பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடைபெறும். காலை 10 மணிக்கு சன்னிதானத்தின் முன்புறம் கொடியிறக்கம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனையும், மகா அன்னதானமும் நடைபெறும். 31-ந்தேதி காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை இருமுடி கட்டுதல் நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு இரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ×