என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • பனைக்குளத்தில் கால்நடை சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.
    • முகாமில் கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, உள்ளிட்ட சிகிச்ைச மேற்கொள்ளப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளத்தில் பனைக்கும் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்கம், தமிழ்நாடு அரசு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் ஜெய்னுல் அஸ்ஸலாம், முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, ஊராட்சி தலைவர் பவுசியா பானு, ஜமாஅத் செயலாளர்கள் முகமது ரோஸ் சுல்த்தான், சாகுல் ஹமீது, பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் செய்குல் அக்பர், துணைத் தலைவர் முகமது களஞ்சியம், ஒருங்கினைப்பாளர் அபு முகம்மது, உதவி செயலாளர் பாலமுருகன், பொருளாளர் முகம்மது ஹசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

    இம்முகாமில் கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் சிகிச்ைச மேற்கொள்ளப்பட்டது மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகளும் வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவி பவுசியாபானு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அசோலா பாசி வளர்ப்பிற்கான படுக்கைகள் வழங்கப்பட்டது.

    இதில் ராமநாதபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன், உதவி மருத்துவர்கள் நிஜாமுதீன், டாப்னி, ஆய்வாளர் பூங்கோதை, பராமரிப்பு உதவியாளர் கண்ணகி ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் 80 பயனாளிகளின் 146 மாடுகள், 365 வெள்ளாடுகள், 85 செம்மறியாடுகள், 175 கோழிகள், 8 நாய்கள் பயன் பெற்றன. முடிவில் சமூக ஆர்வலர் சிராஜ் மைதீன் நன்றி கூறினார்.

    • ராமேசுவரம் அருகே இளம்பெண் ஒருவர் தோழியின் பேச்சை கேட்டு ரூ.2 லட்சத்தை இழந்தார்.
    • இதுகுறித்து அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் விஷ்ணு பிரியா (வயது 25). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டிருந்த போது தனது தோழியின் பெயரில் வந்த ஐ.டி.யில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் லாபம் பெற்றதாக தகவல் வந்தது. இதுகுறித்து அவர், தனது தோழியிடம் கேட்டதற்கு அவரும் அந்த தகவல் உண்மைதான் என்று கூறி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து தனது தோழியைபோல் பணம் முதலீடு செய்து லாபம் ஈட்ட முடிவு செய்த விஷ்ணு பிரியா, தனது வங்கி கணக்கில் இருந்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ.2 லட்சம் வரை குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

    பின்னர் அந்த தொகைக்கு லாபம் வந்துள்ளதா? என அந்த நிறுவனத்திடம் கேட்ட போது, எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது தோழியை அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தனது இன்ஸ்டாகிராமை பிளாக் செய்து விட்டது தெரியவந்தது.

    இதனால் தோழி கூறியதை நம்பி பணத்தை இழந்து விட்டதை அறிந்த விஷ்ணு பிரியா, இதுபற்றி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1.88 கோடி கையாடல் செய்த கரூவூல கணக்கருக்கு உடந்தையாக இருந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • தனது மகளின் மருத்துவ செலவுக்காக கையாடல் செய்தது தெரியவந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி(வயது 45). இவர் முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராக வேலைபார்த்தபோது கருவூல அலுவலகத்தில் ஓய்வூதிய கணக்கில் இருந்து ரூ.1 கோடியே 88 லட்சம் வரை மோசடி செய்தது தணிக்கையில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.

    இந்தநிலையில் முனியசாமி கடந்த 9-ந்தேதி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை ராமநாதபுரம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் முனியசாமி மகள் மகாமதிக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்ததும், மகளின் மருத்துவ செலவுக்காக ரூ.1.88 கோடி அரசு கரூவூல பணத்தில் இருந்து கையாடல் செய்தது தெரியவந்தது.

    அதற்கு அவரது மனைவியும், முன்னாள் படைவீரர் நல அலுவலக ஊழியரான கண்ணகி, முனியசாமியின் தங்கை கணவர் கண்ணன், நண்பர் எஸ்.வி.மங்கலம் ஜீவா ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கையாடல் செய்த பணத்தை வைத்து மகளின் மருத்துவ சிகிச்சையை முடித்த முனியசாமி, மீதம் உள்ள பணத்தில் சொத்துக்கள் வாங்கியதோடு வீடும் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    முனியசாமியின் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த உறவினர் பாலமுருகன், வென்னீர் வாய்க்கால் ஆனந்தவள்ளி, முனியசாமியின் அண்ணன் சித்ரவேலு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
    • இதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிற 5-வது முகவை சங்கமம் புத்தக திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இதில் 114 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இங்கு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அரங்கு மற்றும் பல்வேறு துறைகள் மூலம் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட சாதனை விளக்க அரங்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ- மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வந்தனர்.

    நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் முத்தான திட்டங்கள் குறித்த 'ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளில் செயல்படு த்தப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்ப ட்டது. இதனை பொதுமக்கள் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் தொடர்ந்து 12 நாட்கள் இடம் பெற்றது.

    அரங்கில் நாள்தோறும் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டு 12 நாட்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெற இந்த கண்காட்சி அரங்குகள் பயனுள்ளதாக அமைந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து தமிழக அரசின் சாதனைகள் குறித்த கையேடு மற்றும் மடிப்பு கையேட்டினை வெளியிட்டு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியில் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் மன்சூர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் ரேஸ் போட்டிகளில் சாதனை படைத்தனர்.
    • மெனு ஸ்போர்ட்ஸ் அகாடமி நாமக்கலுக்கு அழைத்துச் சென்று போட்டியில் பங்கேற்க செய்தனர்.

    கீழக்கரை

    தமிழ்நாடு ரோலர் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் மற்றும் நவோதயா அகாடமி இணைந்து நாமக்கல் நவோதயா அகடாமி மைதானத்தில் தேசிய அளவிலான போட்டிக்கான தேர்வு செய்வதற்கான ஸ்கேட்டிங் ரேஸ் போட்டி நடந்தது.

    முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து ஸ்கேட்டிங் ரேஸ் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசாக தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கீழக்கரையில் இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி உள்பட 3 பள்ளி மாணவர்களில் தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து ராமநாதபுரம் மெனு ஸ்போர்ட்ஸ் அகாடமி நாமக்கலுக்கு அழைத்துச் சென்று போட்டியில் பங்கேற்க செய்தனர்.

    பல்வேறு பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் கீழக்கரை இஸ்லாமிய பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் முஹம்மது பஹத் (9-ம் வகுப்பு), முஹம்மது முஆத் (5-ம் வகுப்பு) ஆகியோர் 2-வது இடமும், முஹம்மது அஹ்ஷன் (9-ம் வகுப்பு) 3-வது மற்றும் 5-வது இடமும், மோஹித் ராஜ் (2-ம் வகுப்பு) முதல் மற்றும் 2-வது இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

    அவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், கல்விக்குழு நிர்வாகிகள், முதல்வர் மேபல் ஜஸ்டஸ், மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரி கால்பந்து அணி மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.
    • 24, 25 ஆகிய தேதிகளில் திருச்செங்கோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    கீழக்கரை

    மதுரை மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகள் அளவிலான கால்பந்து போட்டி விருதுநகரில் நடந்தது. இதில் மண்டல அளவில் 10 கல்லூரிகளை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இறுதி ஆட்டத்தில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் அணியும், அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. இதில் பெனால்டி கிக்கில் 3-2 என்ற கோல் கணக்கில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் திருச்செங்கோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், உடற்கல்வி இயக்குநர் மருதாசல மூர்த்தி மற்றும் பயிற்றுநரை, கல்லூரி சேர்மன் யூசுப் சாகிப், இயக்குநர் ஹமீது இபுராஹிம், முதல்வர் அலாவுதீன், துணை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    முதுகுளத்தூர்

    அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை பாதியாக குறைத்ததை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

    யூனியன் ஆணையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேவ பிரியதர்ஷினி ஆகிேயார் நேரில் வந்து, நீங்கள் அளித்த கோரிக்கை சரியானது. இதை விரைவில் சரி செய்து தருவதாக உறுதி அளித்ததின் பெயரில் இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    தாலுகா தலைவர் முனியசாமி, துணைத் தலைவர் முத்து கண்ணன், இணை செயலாளர் மயில்சாமி, உறுப்பினர்கள் வில்வதுரை, ராமர் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி முருகன், அங்குதன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • நயினார் கோவிலில் படித்துறை கட்ட பூமி பூஜை நடந்தது.
    • இதில் ஒன்றிய செயலாளர் சக்தி, முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் மருதவனம் அம்மன் கோவில் குளத்தில் பக்தர்கள் தண்ணீரை பயன்படுத்துவதற்கு படித்துறை இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் அம்மன் கோவில் குளத்திற்கு படித்துறை கட்டி தர வேண்டும் என்று எம்.எல்.ஏ முருகேசனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பரமக்குடி சட்டமன்ற தொகுதி ேமம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடந்தது.

    தி.மு.க மாநில தீர்மானக் குழு துணை தலைவர் சுப.த.திவாகரன் தலைமை தாங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் சக்தி, முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் அரண்மனை, அச்சுந்தன் வயல் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் நகர் பிரிவு மின்சார உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் பிரிவு மின்சார உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன் 2, மற்றும் டவுன் 3 பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையர்வலசை, அல்லி கண்மாய், சிவன் கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே.கே.நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதி, எட்டிவயல், ஆகிய பகுதிகளில் நாளை (22-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்த வழிகாட்டிக் கருத்தரங்கம் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமையில் நடந்தது. முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமெரிக்காவில் உள்ள வீ செர்வ் பவுண்டேசன் நிறுவனர் டாக்டர். எம்.எஸ்.விஜி கலந்து கொண்டு பேசுகையில், அப்துல்கலாம் போன்று வாழ்வில் முன்னேற நீங்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும்.

    இன்று அறிவியல் சார்ந்த ஆராய்ச்சித் துறையில் மாணவ, மாணவிகளின் பங்களிப்பும், ஆர்வமும் அதிகரித்து வருவது மகிழ்சியாக உள்ளது. அதுமட்டுமின்றி சமூக நலனிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கல்விப்பணியோ அல்லது மற்ற துறைகளிலோ முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தால் மட்டுமே சிறப்பானதொரு இடத்தை அடைய முடியும். எழுதப்படிக்க தெரியாத ஒரு 10 பேருக்காவது நம்மால் முடிந்த அளவு கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார். செயற்கை நுண்ணறிவுத்துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • ரூ.52 லட்சத்தில் சுற்றுச்சுவர், விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படும் என நகராட்சி தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
    • இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் சேதுபதி நகர், தங்கப்பா நகர், கோட்டைமேடு தெரு மற்றும் புதிய பஸ் நிலையம் அருகில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    முதியவர்கள், குழந்தைகள், அந்த பகுதி பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தினர். பல ஆண்டுகளாக இந்த பூங்காக்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகி உள்ளன. புதர் மண்டியும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும் சேதமடைந்துள்ளன.

    புதிய பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் அருகில் அமைந்துள்ள பூங்கா பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. இங்கு திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது, குப்பை கொட்டுவது, மது அருந்தும் இடமாக மாறி உள்ளது.

    இது குறித்து நகராட்சி தலைவர் கார்மேகம் கூறுகையில், ராமநாதபுரம் நகரில் உள்ள பூங்காக்கள், ஊரணிகளை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, வேலிகள் அமைக்கப்படுகிறது. பசுமையாக்கல் திட்டத்தில் இங்கு 25 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிட்டு தற்போது 15 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்த்துள்ளோம்.

    ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் நகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை பராமரித்து பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரது முயற்சியில் தங்கப்பாநகர், மகர்நோன்பு பொட்டல் பூங்காவில் ரூ.36 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள், மரக்கன்றுகள், பூச்செடிகள் வைக்க உள்ளோம்.

    இதே போல புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.எஸ்.கே. பூங்காவும் ரூ.16 லட்சத்தில் சுற்றுச்சுவருடன் முழுமையாக புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    • சிந்துஜன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
    • வவுனியா நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றபோது சிந்துஜன் தப்பி வந்ததும், அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

    பனைக்குளம்:

    இலங்கை மன்னார் மாவட்டம் தோட்டவெளி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து ஒரு படகில் தனது மகன் சிந்துஜன்(22) உடன் புறப்பட்டு தனுஷ்கோடி முகுந்தராயம் சத்திரம் வந்தனர். இதைத்தொடர்ந்து செல்வராஜ் ராமேசுவரம் டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு அவரை மண்டபம் முகாமில் தங்கவைத்தனர்.

    இந்த நிலையில் சிந்துஜன் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் தங்களது உறவினர்களை சந்திக்க சென்றுள்ளார். அங்கு தங்க அனுமதி கிடைக்காததால் இன்று காலை மண்டபம் முகாமில் தங்குவதற்காக வந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடலோர பாதுகாப்பு போலீசார் சிந்துஜனிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    சிந்துஜன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும், அவரை வவுனியா நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றபோது தப்பி வந்ததும், அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×