என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் விழாவில் யூ.கே.ஜி. முடித்த 180 குழந்தைகளுக்கு பட்டம் கொடுத்தனர்.
    • இதில் 150-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் யூ.கே.ஜி. வகுப்பு முடித்து முதலாம் வகுப்பு செல்லும் குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் 44-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள எம்.எம்.கே. அரங்கத்தில் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் தலைமையில் நடந்தது.

    அவர் பேசுகையில், மகான், மேதை, கல்வி யாளர்கள் வாழ்ந்து முக்கியத்துவம் பெற்ற கீழக்கரையில் சொல்ல முடியாத அளவிற்கு இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது வருத்தமளிக்கிறது. உங்கள் குழந்தைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளை தாலாட்ட கூட நேரமில்லாத நிலையில் பெண்கள் இருந்து வருவது வேதனைக்குரியது. தாய், தந்தையரின் உறவே குழந்தைகளுக்கு கிடைக்காமல் கேள்விக்குறியாகி வருகிறது என்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் கலந்துகொண்டு மாணவ குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    8-ம் வகுப்பு மாணவிகள் பாத்திமா நப்ஹா, ஜென்னத் ரிலா, பரிஹா சுமையா ஆகியோர் கிராஅத் ஓதினர். யூ.கே.ஜி. மாணவி அஷ்பஹ் வரவேற்றார். மாணவ குழந்தைகள் ஆங்கிலத்தில் பட்டமளிப்பு விழா உரையாற்றினர். 180 மாணவ குழந்தைகளுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் சுந்தரம், கீழக்கரை ரோட்டரி சங்க சட்ட ஆலோசகர்-வக்கீல் கேசவன், சமூக ஆர்வலர் நஜீம் மரைக்கா உட்பட பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    அப்துல் பத்ஹா நன்றி கூறினார். குழந்தைகள் பட்டம் பெறுவதை காண்பதற்கு பெற்றோர்கள் திரண்டு வந்தனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

    விழா ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம் ஆலோசனையின் பேரில் முதல்வர் மேபல் ஜஸ்டஸ், தலைமையில் துணை முதல்வர்கள் லினி, ராமர் தலைமை ஆசிரியர்கள் முகம்மது முஸ்தபா, ரவி, தனலட்சுமி, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.

    முன்னதாக காலையில் நடந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம் தொடங்கி வைத்தார். திட்ட இயக்குநர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அறிவியல், என்ஜினீயர், மெக்கானிக், சட்டம் குறித்த தகவல்களையும், எதிர்காலத்தில் மாணவ-மாணவிகளுக்கு உள்ள வேலை வாய்ப்பு நிலவரங்களையும் எடுத்துரைத்தார்.

    மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். இதில் 150-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • சமையல் எரிவாயு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • இதில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(27-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இடைத்தரகர்களை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் முதற்கட்டமாக 50 மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் தொடங்கப்பட்ட ஒரு வார காலத்தில் இதுவரை 759 மெட்ரிக்டன் நெல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டு ள்ளது.

    இதுவரை 126 விவசாயிகள் நேரடியாக அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெற்று உள்ளனர். இதேபோல் மற்ற விவசாயிகளும் விளைநிலத்தில் விளைந்த நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து உரிய லாபத்தை பெற்று பயன்பெற வேண்டும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

    அரசு நேரடி கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கா கவே செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் விவசாயிகள் நேரடியாக வந்து நெல் விற்பனை செய்து அதற்குறிய பணத்தை வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொண்டு செல்லலாம்.

    கொள்முதல் நிலை யத்தில் எந்த வகை கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கொண்டது.
    • ராமநாதபுரம் முண்டு மிளகாய் வர்த்தக சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் முண்டு மிளகாய் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதற்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. இலங்கை, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் இந்த முண்டு மிளகாய் ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.

    இதன் மகத்துவம் உணர்ந்து ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய்க்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்க தலைவர் மங்களசாமி கூறி யதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலை பயிர்களில் 'முண்டு மிளகாய்' ரகமும் ஒன்று என்பதால், அதற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று ராமநா தபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்கம் சார்பில் 2013-ம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது புவிசார் குறியீடு கிடைத்து இருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த பெரும் வரப் பிரசாதம்.

    இதன் மூலம் முண்டு மிளகாய் விலை அதிகரித்து விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர்கள் மத்தியில் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசுக்கு ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்கம் சார்பாக நன்றியை தெரி வித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புத்துணர்வு கிடைப்பதால் ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • 12 ஜோதிர் லிங்கங்களில் ஒரு லிங்கம் ராமேசுவரம் கோவிலில் மூலவர் சன்னதிக்கு அருகில் உள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து கோவில்களில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் முக்கியமானதாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் அதிகளவில் வருகை தருவார்கள்.

    தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியும், கோவிலில் அமைந்துள்ள தீர்த்த கிணறுகளில் நீராடியும் சாமி தரிசனம் செய்கின்றனர். இதன் மூலம் புத்துணர்வு கிடைப்பதால் ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    மேலும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காகவும், பல்வேறு தோஷ நிவர்த்திக்காக பரிகார பூஜைகள் செய்யவும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.

    இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ராமநாதசுவாமி கோவிலில் ஒவ்வொரு சன்னதியாக சென்று தரிசனம் செய்தனர்.

    12 ஜோதிர் லிங்கங்களில் ஒரு லிங்கம் ராமேசுவரம் கோவிலில் மூலவர் சன்னதிக்கு அருகில் உள்ளது. இந்த ஜோதிர் லிங்கத்தை வழிபட பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இதே போல் நடராஜர் சன்னதியில் பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சம் மூலம் சுவாமியை சுற்றி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நடராஜரை வழிபட்டால் பாவம் தீரும் என்று கூறப்படுவதால் அங்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வெளிநாட்டு பக்தர்கள் சிலரும் சாமி தரிசனம் செய்தனர். சிலர் கோவிலில் விற்பனை செய்யப்படும் தீர்த்தங்களை வாங்கி சென்றனர்.

    இதனால் ராமேசுவரம் இன்று திருவிழா கோலம் பூண்டு இருந்தது. கோவில் பகுதியில் உள்ள கடைகளில் கடல் சார்ந்த பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்தது. பாசி மாலை, சங்கு உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    • நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சாயல்குடி காவல்துறை ஆய்வாளர் ஜெய்சித்ரா பரிசு வழங்கினார்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே உள்ள மலட்டாறு விலக்கு ரோட்டில் உள்ள வி.வி.எஸ். எம். நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் விழா நடந்தது. பள்ளி நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். முதல்வர் அங்காள ஈஸ்வரி வரவேற்றார்.

    தாளாளர் சந்திரா சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். குண்டு எறிதல், தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சாயல்குடி காவல்துறை ஆய்வாளர் ஜெய்சித்ரா பரிசு வழங்கினார்.

    உடற்கல்வி ஆசிரியர் திருமணி செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை உடற்கல்வி ஆசிரியர் கணேஷ் ஒருங்கிணைத்தார். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    • அபிராமம் பகுதியில் உலர்களம் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள தரைக்குடி, வல்லகுளம் தேவநேரி அச்சங்குளம் உள்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயிகள் சிறுதானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மிளகாய் பயிரிட்டனர்.

    இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லததால் விவசாயிகள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டனர். போர்வெல் அமைத்து தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்தனர். இதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் போதிய மழை யின்றி செடியிலேயே மிளகாய் சோடையாகி போனது. இதனால் விவசாயிகள் கூலி ஆட்களை வைத்து மிளகாய் பறித்து உலரவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிராமங்களில் உலர்களங்கள் வசதி இல்லாததால் விவசாயிகள் நிலம், சாலையோரம் கால்வாய் புறம்போக்கு வாய்க்கால்புறம்போக்கு போன்ற இடங்களில் மிளகாய் மற்றும் சிறுதானியங்களை உலர வைக்கின்றனர். உலர்களம் இல்லாமல் மண் தரையில் உளர வைப்பதால் மிளகாயின் தரம் குறைவதால் மிளகாய் விலை குறையும் நிலை உள்ளது.

    இதனால் அபிராமத்திற்கு உள்பட்ட கிராமங்களில் உலர் களங்கள் அமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மரக்கன்று வளர்ப்பு திட்டப்பணிகள் மந்தம் தண்ணீர் ஊற்றாததால் கருகி வருகின்றன
    • 100 நாள் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உள்பட்ட அபிராமம் பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் மூலம் மரக்கன்று வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டபோதி லும், சில நூறு மரக்கன்றுகள் கூட இப்போது இல்லை. இதனால் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கபடுகின்றனவா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், ஒடைகள், வரத்துக்கால்வாய்கள், நீர்பிடிப்பு பகுதிகளில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வாங்கப்பட்டு நடப்படுகின்றன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் (100 நாள் வேலைத்திட்டம்) பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் பசுமை பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஊரகப்பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக மரக்கன்றுகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இவற்றில் வேம்பு, அரசு மா, பலா, புளி, தேக்கு புங்கன் போன்ற 15-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.

    மொத்தமாக மரக்கன்று கள் நடப்பட்டுள்ள இடங்களில் தண்ணீர் ஊற்றுவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர்தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டாலும் சில 100 குழிகளில் மட்டுமே மரக்கன்றுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை வைத்து பெயரளவில் தண்ணீர் ஊற்றும் பணி நடந்து வருகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறும்போது, மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பல குழிகளில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. ஆனாலும் அதிகாரிகள் உத்தரவின்படி 100 நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. மேலும் பல கிராமங்களில் 100 நாள் திட்டம் மூலம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதாக கணக்கு எழுதப்படுகிறது. ஆனால் எங்குமே மரக்கன்றுகள் இல்லை.

    பணியாளர்கள் எண் ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டவுடன் ஒருசில குழிகளில் மட்டுமே தண்ணீர் ஊற்றப்படுகிறது. பிறகு பணியாளர்கள் ஓய்வு எடுக்க சென்று விடுகின்றனர். தண்ணீர் ஊற்றியும் மரக்கன்றுகள் வளராததற்கு என்ன காரணம்? என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.

    எனவே அரசு மரக்கன்று கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் தண்ணீர் ஊற்றுவது பெயரளவில் மட்டுமே நடக்கிறது. இதனால் முறையாக மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றவும் 100 நாள் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதுபற்றி 100 நாள் வேலைத்திட்டத்தை கண்காணிக்கும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறும்போது, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கொண்டு வரப் பட்ட திட்டம் தான் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் அரசு நிலங்கள், சாலையோரங்கள், கண்மாய், குளம், ஊரணி கரைகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களில் மட்டும் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் அக்டோ பர் மாதம் முதல் டிசம்பர் வரை மட்டும் தான் பரவ லாக மழை இருக்கிறது. மற்ற 9 மாதங்களில் 55 சதவீத தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலன கிராமங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை யில், மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்றுவது சிரம மாக உள்ளது.

    இருந்தபோதிலும் ஊராட்சிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் இருப்பு உள்ள இடங்களில் அடி பம்பு பொருத்தி தண்ணீர் எடுத்து மரக்கன்றுகளுக்கு தண்ணிர் ஊற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • வருமான வரி தாக்கல் செய்ததில் முறைகேடு செய்த நல்லாசிரியர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    • மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி காவல் நிலைய சரகம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் கே.ராமச்சந்திரன்(38) என்பவருக்கு கடந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

    இவரது சகோதரர் பஞ்சாட்சரம் என்பவர் வருமான வரி தொடர்பான நிறுவனத்தை மதுரை, ராமநாத புரம் ஆகிய இடங்க ளில் நடத்தி வருகிறார்.

    இதன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் போது அதிகமான நபர்களுக்கு குறைவாக கணக்கு காண்பித்து பணம் திரும்ப பெற்று கொடுத்துள்ளார்.

    இது சம்பந்தமாக ரூ. 2 கோடியே 84 லட்சம் திரும்ப பெற்றுக் கொடுத்ததாக வருமான வரித்துறையினர் புகாரின் பேரில் சி.பி.ஐ. கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து 2022ம் ஆண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி பிணையில் வந்துள்ளார்.

    இந்த நிலையில் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு அவரது சகோதரர் ரூ. 12 லட்சம் வங்கி மூலம் பணம் அனுப்பி உள்ளார். மேலும் இருவருக்கும் வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை இருப்பதால் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆசிரியர் ராமச்சந்திரனை கைது செய்து மதுரை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். பின்னர் மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    • கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது.
    • முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தி யப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது இந்த பகுதியில் பிரசித்திபெற்ற கோவில் ஆகும். இங்கு பங்குனி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோவிலின் வடக்கு வாசல் முன்பு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. மேளதாளம், வான வேடிக்கையுடன் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்பலகாரர் சக்திவேல், மாத முறைகாரர் சின்னமணி மற்றும் உறவின் முறை டிரஸ்டிகள், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அக்னிச்சட்டி, பூக்குழி இறங்குதல், உடல் முழுவதும் சேறு பூசும் நேர்த்திகடன் உட்பட பல்வேறு நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் நேற்று முதல் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டு, விரதம் கடைபிடித்தனர்.அடுத்த மாதம் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, ரிஷபம், பூதம், காமதேனு, யானை, வெள்ளிக்குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர்வலம் வரும். ஏப்ரல் 4-ந்தேதி கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும். 5-ந் தேதி அக்னிச்சட்டி திருவிழா நடைபெறும்.

    இதில் தமிழகத்தில் எங்குமில்லாத விநோத வழிபாடான பக்தர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் உடல் முழுவதும் களிமண் சேறுபூசி, கோவிலை வலம் வருவார்கள். 7-ந்தேதி 2007 திருவிளக்கு பூஜை, 8-ந் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் திருவிழா நிறைவுபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.

    • ஏர்வாடி, சிக்கல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரத்துறை இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று தெளிப்பான்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் நடைபெற்று வரும் மலேரியா, டெங்கு ஒழிப்பு பணிகளை பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் இயக்குநர் செல்வவிநாயகம் ஆய்வு செய்தார். கடலோர கிராம பகுதிகளில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று தெளிப்பான்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

    கிணறுகளில் வளரும் கொசு புழுக்களை சாப்பிடும் கம்பூசியா என்ற ஒரு வகை மீன்களும், வீடுகள் மற்றும் பொதுக்கிணறுகளில் சுகாதாரத் துறை பணியாளர்களால் விடப்படுகிறது. இந்த பணிகள் நடைபெற்ற சின்ன ஏர்வாடி பகுதிகளில் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் ஏர்வாடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ ஆய்வகங்கள், பிரசவ அறை, பிரசவத்திற்கு பின்கவனிப்பு அறை, உள்நோயாளிகள் வார்டு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு மருத்துவ பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் தரமான சிகிச்சை கிடைக்கிறதா? என்றும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் அரவிந்தராஜ், இளையராஜா, வினோத்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், விருதுநகர் மண்டல பூச்சியியல் அலுவலர் கல்விக்கரசன், இளநிலை பூச்சியியல் வவ்லுநர்கள் கண்ணன், பாலசுப்பிரமணியன், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், பகுதி சுகாதார செவிலியர் கலா, சுகாதார ஆய்வாளர்கள் செல்ல துரை, சுப்பிரமணியன், கோவிந்தகுமார், இஜாஜ் அகமது, ஹரி கிருஷ்ணா, மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் வளர்மதி, முனியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு 72 படகுகளில் 2,400 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இங்கு வருடந்தோறும் இந்திய-இலங்கை நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு திருப்பலி விழா நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் அருகே இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு வருடந்தோறும் இந்திய-இலங்கை நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு திருப்பலி விழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா மார்ச் 3 மற்றும் 4-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழா குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கடற்படை கமாண்டர் முகமதுஷானவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி பேசியதாவது:-

    வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவுக்கு ராமேசு வரத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 2,400பேர் 60 விசைப்ப டகுகள், 12 நாட்டுப்படகுகளில் சென்று வருவதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட பொதுமக்கள் காவல்துறை, கடற்படை அலுவலர்களின் பரிசோதனைக்கு உட்பட்டு அனுப்பப்படுவார்கள். இப்பயணத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களும் அரசு வழிகாட்டுதலை கடைபிடித்து பாதுகாப்பாக சென்று வர வேண்டும்.

    இவ்விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட காவல் துறை, கடற்படை மற்றும் மீன்வளத்துறை உரிய பணிகளை திட்டமிட்டு செயல்பட்டு பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண், துணை காவல் கண்காணிப் பாளர் உமாதேவி, ராமநாதபுரம் வருவாய் கோட்டா ட்சியர் கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×