என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிந்துஜன்
இலங்கையில் இருந்து தப்பி வந்த கைதி ராமேசுவரத்தில் தஞ்சம்- கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர விசாரணை
- சிந்துஜன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
- வவுனியா நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றபோது சிந்துஜன் தப்பி வந்ததும், அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
பனைக்குளம்:
இலங்கை மன்னார் மாவட்டம் தோட்டவெளி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து ஒரு படகில் தனது மகன் சிந்துஜன்(22) உடன் புறப்பட்டு தனுஷ்கோடி முகுந்தராயம் சத்திரம் வந்தனர். இதைத்தொடர்ந்து செல்வராஜ் ராமேசுவரம் டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு அவரை மண்டபம் முகாமில் தங்கவைத்தனர்.
இந்த நிலையில் சிந்துஜன் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் தங்களது உறவினர்களை சந்திக்க சென்றுள்ளார். அங்கு தங்க அனுமதி கிடைக்காததால் இன்று காலை மண்டபம் முகாமில் தங்குவதற்காக வந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடலோர பாதுகாப்பு போலீசார் சிந்துஜனிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
சிந்துஜன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததும், அவரை வவுனியா நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றபோது தப்பி வந்ததும், அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






