என் மலர்
ராமநாதபுரம்
- இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் பங்கேற்று இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்று சென்றனர்.
கீழக்கரை
கீழக்கரையில் தனியார் மருத்துவமனை எமர்ஜென்சி கேர் எக்ஸ்பேர்ட்ஸ் மற்றும் முகமது சதக் கல்வி குழுமம் மற்றும் அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து இலவச இருதயம், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை மனநல மருத்துவம் மற்றும் பொது மருத்துவ முகாமை கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் நடத்தியது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.
ரத்த அழுத்தம், சர்க்கரை, மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. இருதய சிகிச்சை டாக்டர் நிஜாமுதீன்,காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் பெர்னீஷ் ஸ்டெல்லா, பொது மருத்துவர் ராஜா,மனநல டாக்டர் அஸ்மா பாட்ஷா, எலும்பு முறிவு சிறப்பு டாக்டர் பிரபாகரன் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். முகமது சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மை இயக்குநர் பி.ஆர்.எல். ஹாமிது இப்ராஹிம், தொழிலதிபர் பி.ஆர்.எல் சதக் அப்துல் காதர் ஏற்பாட்டில் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு செயலாளர் மற்றும் நகராட்சி கவுன்சிலர் சேக் உசைன், கூட்டமைப்பு துணைச் செயலாளர் சீனி இப்ராகிம், அனைத்து சமுதாய கூட்டமைப்பு பொருளாளர் பேராசிரியர் ஆசிப், நடுத்தெரு சுபைர், புதுத்தெரு சுபைர், வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன், அப்பா மெடிக்கல் சுந்தர், சதக் ஜாரியா பள்ளி தாளாளர் முகமது ஜகரியா, நுகர்வோர் செயலாளர் செய்யது இப்ராஹிம், ஓ.எஸ்.அபுதாகீர் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் பங்கேற்று இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்று சென்றனர்.
- ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் பொன்னியின் செல்வன் பிரமாண்ட பொருட்காட்சியை எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.
- 8-வது வார்டு கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கேற்றுகிறார்.
கீழக்கரை
ராமநாதபுரம்-கேணிக்கரை ரோடு மகர்நோன்பு பொட்டல் அருகே உள்ள நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் பிரமாண்டமாக பொன்னியின் செல்வன் பொருட்காட்சி இன்று மாலை 5.30 மணியளவில் தொடங்க உள்ளது.இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.
ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலை வகிக்கிறார்.நகர்மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் வரவேற்கிறார். 8-வது வார்டு கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கேற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டெயின்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதயகுமார் செய்து வருகிறார்.
- போகலூர் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
- முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தில் 3 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சிவசாமி வரவேற்றார். கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், கொடிக்குளம், உரத்தூர்,கோரை குளம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீரை முறையாக விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். அதிகாரிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றார். துணைத் தலைவர் பூமிநாதன் பேசுகையில், அரியக்குடி, முத்துச்செல்லாபுரம், அ.புத்தூர், முஸ்லிம் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டுக் குழு நீர் வரவில்லை என்றார்.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர்: சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. கோடையை காலம் என்பதால் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. விரைவில் சரி செய்யப்படும் என்றார். தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி போகலூர் யனியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தில் 3 சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும். தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு மழை காலத்திற்குள் அனைத்து சாலைகளும் அமைக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள பழுதடைந்த சாலைகள் பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழை காலத்திற்கு முன்பாக அனைத்து அத்தியாவாசிய தேவைகளுக்கான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதில் கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேசுவரி, காளீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.
- தி.மு.க. சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- இந்த பந்தயத்தில் சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடு முதல் பரிசு பெற்றது.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கடலாடி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மாய கிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த பந்தயத்தில் சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடு முதல் பரிசு பெற்றது.
2-வது பரிசை வள்ளியூர் முத்தையா ஆனந்த் என்பவரது மாடும், 3-வது பரிசை மேல செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின், 4-வது பரிசை ஏனாதி பூங்குளத்தான் என்பவரது மாடும் பெற்றன.
சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடு பெற்றது. 2-வது பரிசை பூலாங்கால் சிக்கந்தர் பாட்சா என்பவரது மாடும், 3-வது பரிசை சிங்கிலி பட்டி முகுந்தன் என்பவரது மாடும், 4-வது பரிசை பூலாங்கால் அனுசுயா என்பவரது மாடும் பெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை கடலாடி தி.மு.க. தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் செய்திருந்தனர்.
- அபிராமம் பகுதியில் பருத்தி சாகுபாடி செய்யப்பட்டுள்ளது.
- பருத்தி செடியில் இலை சுருட்டல், காய்புழு போன்ற நோய் தாக்குதலால் பருத்தி விவசாயமும் பாதிக்கப்படுகிறது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய், குளம், ஊரணிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி நடவு செய்துள்ளனர். பருத்தி செடியை பொறுத்தவரை லேசான ஈரப்பதத்திலும், கடும் வறட்சி நிலையிலும் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இருந்தபோதிலும் இந்த ஆண்டு தொடர் மழையால் பருத்தி விவசாயம் பாதிப்படைந்து உள்ளது.
இதுபற்றி அபிராமம் பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பின் கோடை காலங்களில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பருத்தி விவசாயத்தை செய்து வந்த நிலையில், இந்தப்பகுதியில் இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது பருத்தி சாகுபடி செய்துள்ளோம். பருத்தி செடியில் இலை சுருட்டல், காய்புழு போன்ற நோய் தாக்குதலால் பருத்தி விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மிகவும் பொருளதார நஷ்டம் ஏற்படுவதுடன் மன உளைச்சலும் ஏற்படுகிறது என்றனர்.
- மீன்பிடி தடை காலத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
- ராமேசுவரம், பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம்:
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தையொட்டி உள்ள கடல் பகுதிகளில் 60 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக பகுதிகளில் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மீன்பிடி தடை காலத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் திசைமாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. மேலும் ராமேசுவரத்தையொட்டி உள்ள மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
எனவே ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் நெடுஞ் சாலைத்துறை யின் மூலம் புதிய சாலைகள் மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ் சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இடை வெளி தடத்திலிருந்து இருவழிச்சாலை அகலப் படுத்தும் பணி நடை பெறுவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வை யிட்டார். அப்போது பணிகளை காலதாமதமின்றி முடித்திட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத் தில் 2022-23-ம் ஆண்டிற்கு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 28பணிகள் தேர்வு செய்யப்பட்டு 60.300 கிலோ மீட்டர் தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் இருவழிச் சாலைகளாக அகலப் படுத்தும் பணி மற்றும் புதிய பாலங்கள் அமைக்கும் பணி, விபத்துக்கள் நடை பெறும் பகுதியை கண்ட றிந்து சாலைகளை ேமம்படுத்தும் பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 19 பணிகள் 49.470 கி.மீ. தூரம் சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சாலை பணிகளை சீரமைப்பதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பயனுள்ளதாக இருப்பதுடன் அதிகமாக விபத்துக்கள் நடை பெறக் கூடிய பகுதிகளை கண்ட றிந்து தொழில்நுட்ப முறையுடன் வடிவமைக்கப் பட்டவுடன் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. இதுவும் வாகன ஓட்டி களுக்கு பாது காப்பாக இருக்கும்.
இதே போல் நடப்பாண்டிற்கு பொது மக்களின் தேவையை அறிந்து கூடுதலாக சாலை அமைத்தல், சாலைகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.
- டாஸ்மாக் கடைகள் 1-ந் தேதி அடைக்கப்படுகிறது.
- விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மே தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களும், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுபான விற்பனைக் கூடங்கள் ஆகியவற்றில் மதுபான விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யும் வகையில் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று முழுமையாக மூடி வைக்க ஆணையிடப்படுகிறது. மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
- தரமான பைப்புகளை வாங்கி குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஷாஜகான் தலைமையில், உதவி சேர்மன் வயணப்பெருமாள் முன்னிலையில் நடந்தது. செயல் அலுவலர் மாலதி வரவேற்றார். மொத்தம் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மோகன்தாஸ்
(7-வது வார்டு தி.மு.க.): 2023-24 சொத்துவரி செலுத்துபவர்களுக்கு அெஜண்டாவில் உள்ளபடி ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சேர்மன், சொத்துவரி 2023-24-க்கு முழுமையாக கட்டினால் 5 சதவீத ஊக்கத்தொகை கழித்தே பெற்றுக்கொள்ளப்படும் என்றார். சேகர் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்): முதுகுளத்தூரில் மட்டுமே டெண்டரில் குறைத்து போடப்படுகிறது. சமரசம் பேச வேண்டும் என்றார். சேர்மன்: எல்லா இடத்திலும் அப்படித்தான் நடக்கிறது. காண்ட்ராக்டர்கள் ஒத்துழைத்தால் போகலாம். கவுன்சிலர் மோகன்தாஸ்: தரமான பைப்புகளை வாங்கி குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும். சேர்மன்: அரசு விதிமுறைப்படிதான் வாங்க முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.
- பஸ் மோதி பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். கூலிதொழிலாளி. இவரது மகன் அபிஷேக். இவர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை அபிஷேக், கல்லூரியை முடித்துவிட்டு நண்பர் செந்திலேஸ் பாபுவுடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கழுகூரணி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அபிசேக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். படுகாயமடைந்த மாணவர் செந்திலேசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தொழிலாளர் தின கிராமசபை கூட்டங்கள் நடக்கிறது.
- கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரியிருப்ப தாவது:-
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினத்தன்று கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப் பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (1-ந் தேதி) காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமரின் ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதமரின் கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதிக்க அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இலங்கையில் இருந்து கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடி வந்தனர்.
- தனுஷ்கோடி அருகே உள்ள 5-வது மணல் திட்டையில் இன்று காலை 7 பேர் தவித்தபடி நின்றதை கடலுக்கு சென்ற மீனவர்கள் பார்த்தனர்.
ராமேசுவரம்:
இலங்கையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
இதன் காரணமாக அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் பலர் உயிர் பிழைத்தால் போதும் என்று குடும்பம் குடும்பமாக தமிழகத்துக்கு அகதிகளாக வரத்தொடங்கினர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை 240-க்கும் மேற்பட்டவர்கள் கடல் வழியாக படகுகள் மூலம் அகதிகளாக தனுஷ்கோடி மற்றும் ராமேசுவரத்திற்கு வந்தனர். கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதியாக வந்ததாக தெரிவித்த அவர்கள் அனைவரும், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் இருந்து கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடி வந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு படை போலீசார் மீட்டு மண்டபம் முகாமில் தங்க வைத்தனர். இதற்கிடையே தனுஷ்கோடி அருகே உள்ள 5-வது மணல் திட்டையில் இன்று காலை 7 பேர் தவித்தபடி நின்றதை கடலுக்கு சென்ற மீனவர்கள் பார்த்தனர்.
இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2-வது மணல் திட்டைக்கு விரைந்து சென்று, அங்கு நின்று கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 7 பேரையும் மீட்டனர்.
விசாரணையில், அவர்கள் இலங்கை முல்லைத்தீவு, தீர்த்தக்கரை பகுதியை சேர்ந்த ஜோப்ரி மகன் நியூட்டன் வில்லியம்(வயது43), அவரது மனைவி வனிதா(38), மகன்கள் விசால்(15), தோணி(10), ஜோன்(8), அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மகள் ஷாலினி(17), அவரது மகன் ஆதீஸ்(15) என தெரியவந்தது.
இவர்கள் கடந்த 27ந்தேதி இரவு 7 மணியளவில் இலங்கை முல்லைத்தீவில் இருந்து புறப்பட்டு படகு மூலம் இன்று அதிகாலை ஒரு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை 2-ம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்டுள்ளனர். அவர்கள் ரூ.4 லட்சம் இலங்கை பணம் கொடுத்து வந்ததாகவும், தங்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு ராமேசுவரம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே வாழ வழியின்றி இங்கு வர நேரிட்டது என்று தெரிவித்தனர்.






