என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • அரிமளம் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் உறவினர் ஒருவர் புகார் கொடுத்தார்.

    புதுக்கோட்டை :

    அரிமளம் அருகே கல்லுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மதி (வயது 47). இவர், 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து அரிமளம் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் உறவினர் ஒருவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    புதுக்கோட்டை :

    விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் மதுவிற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான போலீசார் ராஜாளிப்பட்டி பகுதியில் ரோந்்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜாளிப்பட்டியை சேர்ந்த கலையரசன் மனைவி முத்துலெட்சுமி (வயது 49) என்பவர் அவரது வீட்டின் அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் விராலிமலை தாலுகா செட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த துரைராஜ் (53) என்பவர் அவரது வீட்டின் அருகேயும், கலிங்கிகாட்டை சேர்ந்த நாகராஜ் (37) என்பவர் அவரது ஓட்டல் பின்புறமும் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்வதை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • புதுக்கோட்டையில் வருகிற 24-ந் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது
    • இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 24-ந் தேதி புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது.

    இம்முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ பிரிவுகளும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரி க்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளும் கலந்து கொள்ள திட்டமிடபட்டுள்ளது. இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது. இம்முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் வழங்கப்படவுள்ளது. எனவே இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கறம்பக்குடியில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது
    • பொதுமக்களிடமிருந்து 900 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் 1432 ம் பசலி ஆண்டுக்கான தீர்வாய கணக்கு ஜமாபந்தி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலராக புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆணையர் (கலால்) மாரி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கோட்ட கலால் அலுவலர் ஜெயபாரதி, கலால் அலுவலக மேலாளர் கலைமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நாள் மலையூர் சரகத்திற்கு உட்பட்ட வட்டங்களுக்கும், இரண்டாம் நாள் கறம்பக்குடி சரகத்திற்கு உட்பட்ட வட்டங்களுக்கும் நடைபெற்றது.

    அப்போது பொது மக்களிடமிருந்து 900 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஜமாபந்தி அலுவலர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ஜமாபந்தி நிறைவு நாளான குடிகள் மாநாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 72 பேருக்கு பட்டாக்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 12 பேருக்கு இ பட்டா மற்றும் 2 பேருக்கு புலப்பட நகல் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டாட்சிய ராமசாமி, வருவாய் ஆய்வாளர்கள் ரவிக்குமார், துணை வட்டாட்சியர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அரசியல் ஜல்லிக்கட்டில் பின்வாசல் வழியாக வர பாசிச கட்சி முயற்சி செய்கிறது.
    • வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை விரட்டியடிப்போம் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

    புதுக்கோட்டை:

    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தமிழக அரசின் வக்கீல்கள் மூலம் வாதாடி பெற்று தந்தமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஜல்லிக்கட்டு பேரவைகளின் சாா்பில் புதுக்கோட்டையில் சிப்காட் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜல்லிக்கட்டினை நடத்த விடாமல் ஒரு கும்பல் போராடியது. ஆனால் தமிழர்களின் அடையாளம் ஜல்லிக்கட்டு என்பதற்கு நீங்கள் நடத்திய போராட்டம் தான் காரணம் என அனைவரும் அறிவார்கள். தமிழகத்தில் பாசிச கட்சி அரசியலில் ஜல்லிக்கட்டை புதிதாக தொடங்கியிருக்கிறார்கள். அந்த ஆட்டத்தை கூட அவர்களால் நேர்மையாக ஆடமுடியவில்லை. பின்வாசல் வழியாக வருகின்றனர். ஜல்லிக்கட்டை பொறுத்தவரை வாடிவாசல் வழியாக தான் காளைகள் வரும். ஆனால் பாசிச கட்சி புறவாசல் வழியாக தான் வருகின்றனர். அதனை தமிழக மக்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

    தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக போராடியதற்கு கிடைத்த வெற்றி. ஜல்லிக்கட்டுக்கான தடை விதிக்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் தான். மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியது அ.தி.மு.க. அரசு.

    ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் நுழைய பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. பா.ஜ.க.வின் கிளை கழகமாக அ.தி.மு.க. மாறிவிட்டது. மத்திய அரசின் அடக்குமுறையை கண்டு தி.மு.க. என்றும் பயந்தது கிடையாது.

    எத்தனை மோடி, அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தை ஒன்றும் செய்யமுடியாது. பா.ஜ.க.வின் தொண்டர் படை வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ. தான். 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு அமலாக்கத்துறை 121 அரசியல் தலைவர்களை விசாரித்துள்ளது. இதில் 115 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். இதேபோல தான் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 18 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    மோடியிடம் நெருக்கமாக உள்ள அதானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவில்லை. நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், இ.டி.க்கும் பயப்படமாட்டோம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாசிச கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும். 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிப்போம் என தெரிவித்தார்.

    • பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரத்தில் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சென்னை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம் 24-ந் தேதி நடக்கிறது
    • மருத்துவ முகாம்கள் வருகிற 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது.

    புதுக்கோட்டை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி. புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது.

    இம்முகாம்களில் சிறப்பு மருத்துவ பிரிவுகளும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளும் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது. இத்துடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மருத்துவர்களும் கலந்து கொள்வார்கள். நோய் கண்டறியப்பட்ட நபர்களுக்கு உரிய தொடர் சிகிச்சைகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு பதிவு பெற்ற முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் செயல்படும் மருத்துவமனைகள் மூலமாகவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • பள்ளத்தில் சிக்கிய பசு உயிருடன் மீட்கப்பட்டது.
    • தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து பசுவை உயிருடன் மீட்டனர்.

    புதுக்கோட்டை:

    அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் சிக்கியது. இதுகுறித்து உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து பள்ளத்தில் சிக்கிய பசுவை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பசுவை உரியவரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.

    • மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை ஒன்றியம், வங்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மாத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே மாத்தூர்-ஆவூர் சாலையை நடந்து கடக்க முயன்றுள்ளார். அப்போது தொண்டைமான் நல்லூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோவிந்தராஜ் (25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக செல்வராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது கர்ப்பிணித்தாய் உயிரிழந்தார்
    • இரட்டை குழந்தை பிறந்தது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இராஜேந்திரபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 22). இவர் கடந்த 2019ம் ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த ஜீவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் ஆனது முதல் இருவரும் விழுப்புரத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன் பின்னர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பிரசவத்திற்காக அவருக்கு, அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சையில் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

    ஆனால் தாய் ஐஸ்வர்யாவிற்கு, திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஐஸ்வர்யாவிற்கு சத்துக்குறை பாடு இருந்ததாலே, உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அறுவை சிகிச்சையில் 2 பெண்குழந்தைகள் பிறந்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் சர்வதேசப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு அனுபவ கற்றல் பயிற்சி
    • 2 நாட்கள் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    மௌண்ட்சீயோன் சர்வதேசப்பள்ளியில் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியர் களுக்கான பயிற்சிமுகாம் இரு தினங்கள் நடைபெற்றது. இதில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்."திறன் மற்றும் அனுபவக் கற்றல்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியகத்தை சிபிஎஸ்இ சென்னை திறன் பயிற்சித் திட்டபொறுப்பாளர்கள் என்.எஸ். தினேஷ் மற்றும் ஜெயப்பிரியா, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் இயக்குநர இந்திரா விஜயகுமார் ஆகியோர் வழி நடத்தினர்.பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி வரவேற்புரை வழங்கினார். அனுபவ கற்றலுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இப்பயிற்சி யகத்தில் ஆசிரியர்களுக்கு கற்பிக்க ப்பட்டது. இறுதியில் இப்பயிற்சியகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சிக் குறித்த மதிப்பீட்டை வழங்கி, பயிற்சிக்கான சான்றிதழைப் பெற்றனர் .இந்தபயிற்சி முகாமில் வெளி மாநில மற்றும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர் கள் கலந்து கொண்டனர் . இறுதியில் நடுநிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுஷ்மிதாடே நன்றி கூற நிகழ்வு சிறப்பாக நிறை வுற்றது.

    • அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க கூடுதல் பணம் கேட்கப்படுவதற்கு கண்டனம்
    • அதிகாரிகள் அறிவிப்பை ரத்து செய்ய கோரி குடியிருப்பு சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குரும்ப க்காடு பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடி யிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 120 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வருகிறது. இதில் கஜாபுயலால் பாதிப்ப டைந்தவர்கள் மற்றும் நகர்புறத்தில் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்ப ட்டு, அதற்கான ஆவண ங்களை வருவாய்து றை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சரிபார்க்கப்பட்டு உரியவர்களுக்கு வீடுகள் வழங்க பரிந்துரைக்க ப்பட்டது.அதனடிப்படையில் கடந்த ஆண்டு 9வது மாதம் 120 பயனாளிகளிடமிருந்து தலா 1 லட்சம் காசோலையாக நிர்வாகம் சார்பில் பெறப்பட்டது. இந்நிலையில் வீடுகள் பூர்த்தியாகி பயனா ளிகளிடம் ஒப்படைக்கும் தருவாயில் மீண்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் கட்ட வேண்டும் என நிர்வாகம் சார்பில் அறிவுறுத்த ப்பட்டுள்ளது.எனவே இதனை ரத்து செய்ய வலியுறுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகள் சங்கத்தினர் அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பயனாளிகள் கூறுகையில் ஏழை எளிய மக்கள் நாங்கள் இருக்க வீடு இன்றி அன்றாடம் காய்சியாக வாழ்ந்து வருகிறோம், எதோ அரசின் சார்பில் இலவச வீடு என்றார்கள், அதனை நம்பி வந்தோம், ஆனால் ரூ 1 லட்சம் பயனாளிகள் கட்ட வேண்டும், மீதி பங்கை அரசு கட்டும் என்று கூறினார்கள், வேறு வழியின்றி விற்காததை விற்று 1 லட்சம் பணத்தை கட்டினோம், ஆனால் தற்போது மீண்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் கட்ட சொல்கிறார்கள், இருக்க வீடு இன்றி வாழும் எங்களால் இவ்வளவு தொகை எப்படி கட்ட முடியும். ஏற்கனவே கட்டிய பணத்திற்கு 8 மாதத்திற்கும் மேலாக வட்டி கட்டிக் கொண்டு வருகிறோம். இந்த நிலையில் இப்படி ஒரு தகவல் பேரிடியாக உள்ளது.எனவே தமிழக அரசு கவனத்தில் கொண்டு அதிகாரிகள் கேட்கும் கூடுதல் தொகையை ரத்து செய்து அதை அரசே செலுத்த வேண்டும், அல்லது ஒன்றிய அரசால் போடப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து அதன் மூலம் வரக்கூடிய ரூ2 லட்சத்தை ஏழை எளிய மக்களுக்காக ஈடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் அரசு உதவிட முன்வரவி ல்லையெனில் அடுத்த கட்ட போராட்டமாக அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். இதில் சிபிஐ மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியச் செய லாளர் ராதாகி ருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×