என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
    • 22 பேரை மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    அறந்தாங்கி:

    தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த வாரம் முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள். 58 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் கடலுக்கு செல்லும் தங்களுக்கு அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்ற அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    நேற்று முன்தினம் ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற விசைப்படகு நெடுந்தீவு அருகே பழுதாகி நடுக்கடலில் நின்றது. உதவிக்கு கூட யாரும் இல்லாமலும், படகை செலுத்த முடியாமல் அவர்கள் தவித்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தத்தளித்த படகில் இருந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைப்பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். படகு பழுதானதால் அவர்களை கோர்ட்டு விடுதலை செய்து படகையும் திரும்ப ஒப்படைத்தது.

    இந்நிலையில் ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவமாக இன்று அதிகாலை மேலும் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட் டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 121 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. அதில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றிருந்தனர். அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை நெடுந்தீவு பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதைப்பார்த்த தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்திய எல்லைக்குள் மீன்பிடித்தாலும், எல்லை தாண்டி வந்ததாக கூறி தாக்குதல் நடத்துவார்களே என்று கருதி கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

    ஆனாலும் 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற காளிமுத்து (45), அர்ச்சுணன் (50), குமார் (42), குருமூர்த்தி (27), அருண் (22), தமிழரசன், பாஸ்கர், அமரன், ஜெகநாதன், ரவீந்திரன், லோகநாதன், வைத்திநாதன், அருள்நாதன், குமரேசன் மற்றும் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த படகில் இருந்த மீனவர்கள் உள்பட மொத் தம் 22 பேரை கைது செய்தனர்.

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறிய இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    தாங்கள் எல்லை தாண்டி வரவில்லை என்று கூறிய மீனவர்களின் விளக்கத்தை கூட ஏற்க மறுத்த சிங்கள கடற்படையினர் 22 பேரையும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அவர்களின் 4 விசைப்படகுகளையும் இழுத்து சென்றனர்.

    இன்று காலை இந்த கைது நடவடிக்கை குறித்த தகவல் அறிந்த சக மீனவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். 58 நாட்கள் வாழ்வாதாரம் இழந்து, ஆங்காங்கே கடன் வாங்கி படகுகள், வலைகளை பழுதுபார்த்து கடலுக்கு சென்றால் இப்படி இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுகிறார்களே என்று கொந்தளித்தனர்.

    காலங்காலமாய் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப் படாததால் மீனவர்கள் மாற்று தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    உடனடியாக தாமதிக்காமல் சிறைபிடிக்கப் பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரை மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வழக்கை கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று வரை தொடர்ந்து 157 நாட்கள், 158 சாட்சிகளில் விசாரணை நடத்தி உள்ளனர்.
    • முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டு அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மர்ம நபர்கள் மனித கழிவை கலந்தனர்.

    தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் 20 நாட்கள் விசாரணை நடத்தினர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதையடுத்து வழக்கை கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று வரை தொடர்ந்து 157 நாட்கள், 158 சாட்சிகளில் விசாரணை நடத்தி உள்ளனர். இருந்தபோதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    அதேவேளையில் மரபணு சோதனை மற்றும் அறிவியல் பூர்வமான சோதனைகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டு அந்த அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மாதம் 6-ந்தேதி வேங்கைவயல் கிராமத்திற்கு நேரில் சென்றார். அப்போது மனித கழிவு கலக்கப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்தநிலையில் இன்று இரண்டாம் கட்டமாக தனிநபர் ஆணைய தலைவர் சத்தியநாராயணன் இன்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    வேங்கைவயல் வழக்கு விவகாரத்தில் தற்போது வரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன, பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள், தற்போது அந்த கிராமத்தில் அமைதி நிலவுகிறதா? உள்ளிட்டவை குறித்து விரிவாக விசாரணை நடத்தினார்.

    வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். தற்போது வரை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    அறிவியல் பூர்வமான சோதனை என்ற அடிப்படையில் அவர்கள் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே இதற்கு கால அவகாசம் நிர்ணயிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்னும் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். வேங்கைவயல் சம்பவம் நடந்து 177 நாட்களை கடந்துவிட்ட நிலையில் விரைவில் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்திற்கு முன்பு நிறுத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் சர்வதேச யோகாதின கொண்டாட்டபட்டது
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை தாங்கினார். ஆத்மா யோகா மையத்தின் நிறுவனர் யோகா பாண்டியன் யோகா பயிற்சிகள் குறித்து விளக்கமளித்தார். அதைதொடர்ந்து கௌரவ விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி துணைஇயக்குனர் டாக்டர் ரமேஷ், சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விமையத்தின் இயக்குனர் டாக்டர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    பின்னர் சர்வதேச மாநில, மாவட்ட அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியர் உதயகுமார் வரவேற்றார். விழாவில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, வரலெட்சுமி, கோமதி, மேலாளர் ராஜா, ராமன், உடற்கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விஷாலி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டர். முடிவில் யோகா புவனேஸ்வரி நன்றி கூறினார்.

    • சமத்துவபுரத்தில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு குடியிருப்பில் புதிதாக 30 தெரு விளக்குகள் ஒதுக்கபட்டுள்ளது
    • நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை சமுத்துவபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில், காலை உணவு வழங்கும் திட்டத்தை, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அவர், அவர்களுடன் அமர்ந்து கிச்சடி சாப்பிட்டார். அதை தொடர்ந்து நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தினமும் காலையில் வாகனம் மூலம் குப்பைகள் சேகரிப்படுகிறதா என்பது குறித்து அங்கு கேட்டறிந்தார்.

    அதன் பின்னர் நமது செய்தியாளரிடம் அவர் கூறும்போது, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் கட்டப்பட்டுள்ள 42 பிளாக்களில் 1920 வீடுகள் உள்ள பகுதிக்கு 30 தெரு விளக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தெரு விளக்குகள் விரைவில் பொருத்தப்படும் என்று அவர் கூறினார். அதன் பின்னர் தைலா நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கவுன்சிலர்கள் மதியழகன், பழனிவேல் உடனிருந்தனர் .

    • கணவர் கள்ளக்காதலை கண்டித்த மனைவியை சரமாரி வெட்டினார்
    • மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்

    கீரனூர்,


    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்துள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 56).் இவரது மனைவி கலாராணி (42). இவர்களுக்கு மகேந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். விசாயியான முருகேசன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற கட்டையன் (55)் மனைவி முத்துலட்சுமி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 4 ஆண்டுகளாக முருகேசன் வீட்டுக்கு வராமல் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனை அவரது மனைவி கலாராணி கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன், முருகேசன் என்ற கட்டையன், முத்துலட்சுமி, இவரது மகன் வினோத் ஆகியோர் அரிவாள் மற்றும் கட்டைகளால் கலாராணி வீட்டிற்குள் புகுந்து கலாராணி, அவரது மருமகள் அனுசியா (22) மற்றும் மகேந்திரன் தாத்தா தீர்த்தப்பன் (76) ஆகியோரை அரிவாள் மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அனுசியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்த தாக்குதலில் கலாராணியின் தலை மற்றும் கைகளில் சரமாரியாக அரிவாளால் வெட்டு விழுந்தது.அனுசியா, தீத்தப்பன் ஆகியோரும் இதில் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரும் கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் இச்சம்பவம் குறித்து முருகேசன் மகன் மகேந்திரன் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் மாயாழகு வழக்கு பதிவு செய்து முருகேசன் மற்றும் முருகேசன் என்ற கட்டையன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் முத்துலட்சுமி மற்றும் வினோத் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கறம்பக்குடி அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்
    • இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அம்பு கோவில் பகுதியை சேர்ந்த சிலர் கறம்பக்குடியில் நடைபெற்ற அவர்களது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு ஆட்டோவில் அம்புக்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அனுமார் கோவில் வளைவில் திரும்பும் போது எதிரே வந்த கந்தர்வகோட்டையில் இருந்து கறம்பக்குடிக்கு வந்து கொண்டிருந்த அரசு டவுண் பஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் ஆட்டோவில் பயணம் செய்த ராணி (வயது 38), சேகர் (40), பாலையா (45), மாரிமுத்து (60) மற்றும் ஆட்டோ டிரைவர் ராஜா (42) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விராலிமலை கூத்தக்குடி சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளபட்டது
    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடிக்கால்பட்டி கூத்தக்குடி செல்லும் சாலையை மேம்படுத்தி கோரை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணியினை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுமார் ரூ.3 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணியினை ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தினார். ஆய்விற்கு வந்த விஜயபாஸ்கரை சந்தித்த, அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றிக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.இந்த ஆய்வின் போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜ், விராலிமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் தீபன் சக்கரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், வேலுமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • விராலிமலை ஒன்றியங்களில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்றது
    • ஊராட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரை வழங்கினார்

    விராலிமலை,

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியங்களில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உறுப்பினர் சேர்க்கை பணிகளை விரைவுபடுத்துவது குறித்து நேற்றைய தினம் ஒவ்வொரு ஊராட்சியை சார்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து , ஏற்கனவே பதிவு செய்துள்ள உறுப்பினர் படிவங்களை பெற்றுக் கொண்டும், புதிதாக உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் விவரித்தார்.கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்த்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அமைப்போம் என்று கழக நிர்வாகிகளிடம் கூறினார். கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜன், கூட்டுறவு சங்கத் தலைவர் அய்யப்பன், விராலிமலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபன் சக்கரவர்த்தி, மாவட்ட வேளாண் விற்பனை குழு துணை தலைவர் வெல்கம் மோகன்,நகர செயலாளர் செந்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் ஐயப்பன், சுப்பிரமணியன், மணிகண்டன்,வசந்தி குணசேகர், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் கூட்டம்
    • பொதுமக்களிடம் இருந்து 284 மனுக்கள் பெறப்பட்டது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 284 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், பார்வைத்திறன் குறைபாடுடைய மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,500 வீதம் ரூ.1,35,000 மதிப்புடைய தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளை, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி ஆகியோர் வழங்கினார்கள்.இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கீரனூரில் ஆர்ப்பாட்டம்
    • போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்பேத்கர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள உப்பிலிக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூக மக்களை, கோயில் திருவிழாவின் போது கொத்தம ங்கலபட்டியை சேர்ந்த மாற்று சமூக இளைஞர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பெண்கள் உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரையில் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என குற்றம் சாட்டியும், தாக்குதல் நடத்திய இளைஞர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தை மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, இளையவயல் எனும் இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசாரரோடு ஆர்ப்பாட்டகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ஜாதிய வன்கொடுமைகளும் தீண்டாமைக் கொடுமையும் அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுக்க காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் தவறிவிட்டதாகவும் கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையின் போது, தாக்கியவர்களை இன்னும் மூன்று தினங்களில் கைது செய்து விடுவோம் உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • ஆதினமிளகி அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது
    • மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிராம மக்கள் வழிபாடு

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோவிலில் புரவி எனப்படும் மண் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது.விழாவின் தொடக்கமாக கடந்த சித்திரை மாதம் பிடிமண் கொடுக்கப்பட்டு ஆவாம்பட்டியில் மண்ணினால் புரவிகள், காளை மற்றும் மதலை சிலைகள் வடிவமைக்கப்பட்டது. சிலைகள் வடிவமைக்கப்பட்ட பின்னர், அலங்கரிக்கப்பட்டு அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்தபடி, மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் எம்.உசிலம்பட்டி, ஆவாம்பட்டி, முள்ளிப்பட்டி, மேலத்தானியம், சூரப்பட்டி, வெள்ளைய க்கவுண்டம்பட்டி, டி.அம்மாபட்டி, வடக்கிபட்டி உள்ளிட்ட எட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறும்போது, ஆண்டுதோறும் நடைபெறும் இந்த புரவி எடுப்பு திருவிழா பல தலைமுறைகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி நடைபெறுவதன் மூலமாக நல்ல மழை,விவசாயம் ,தொழில் முன்னேற்றம், உடல் ஆரோக்கியம் , ஊர் ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை என்று அவர்கள் கூறினர்.

    • திருவரங்குளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    • மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு களித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே வல்லத்திராகோட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். பந்தயத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்பேத்தி, அரிமளம், திருமயம், மதுரை, காரைக்குடி, சிவகங்கை, தஞ்சாவூர், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடு மாடு பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் எல்லையை நோக்கி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு களித்தனர்.

    ×