என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி கூட்டுறவு நகர வங்கியில் வருமான வரித்துறையினர் திடீர் ஆய்வு
- அறந்தாங்கி கூட்டுறவு நகர வங்கியில் வருமான வரித்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்
- ஆய்வு இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நகர வங்கி கடந்த 105 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. அறந்தாங்கி நகரில் 2 கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் பலகோடி ரூபாய் அளவிற்கு வரவுசெலவு செய்யப்படுகிறது. இந்நிலையில் வங்கியில் வருமானவரித்துறை அதிகாரிகள் 11 பேர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. மேலும் வங்கியில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வங்கியின் தலைவர் ஆதிமோகன் (அ.தி.மு.க.) கூறுகையில்: தமிழகத்தில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் கோர் பேங்கிங் செய்யப்பட்டு வங்கிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் நடைபெற்றால் அது வருமான வரித்துறையினருக்கு கணிணி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் கோர் பேங்கிங் செய்யப்படாத சில கூட்டுறவு வங்கிகளில் இன்னும் நோட்டு புத்தக அளவிலேயே வரவு செலவு பதியப்படுகிறது. அறந்தாங்கி வங்கியிலும் நோட்டு புத்தக முறைதான் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு கோர் பேங்கிங் செய்யப்படாத வங்கிகளிலிருந்து வரவு செலவு கணக்குகள் அறியப்படாததையடுத்து வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இங்கு வந்த அதிகாரிகள் அனைத்து கணக்கு வழக்குகளையும் சரிபார்த்து சரியாக உள்ளது என்று கூறினர். மேலும் கூட்டுறவு வங்கிகளை நவீனபடுத்த சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் வங்கிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வசதிகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.






