என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது
    • போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகளை கம்பன் கழகத்தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்தி வழங்கினார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி தனியார் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கம்பராமாயண ஒப்புவித்தல் போட்டி மற்றும் ஒவியப்போட்டிகள் நடைபெற்றது. எல்.கே.ஜி, மற்றும் 1-ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவ, மாணவிகள் வரை கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 50 பேராசிரியர் நடுவர்களாக பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகளை கம்பன் கழகத்தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்தி வழங்கினார்.

    இந்நிகழ்வில் கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார், கம்பன் கழக நிர்வாகி பாரதி, கல்வியாளர்கள் கருப்பையா, பழனிச்சாமி, கோவிந்தராஜன், ராமசாமி, முருகையன், பழனியப்பன், செல்லத்துரை குமார், வள்ளியம்மை, கருணாகரன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கம்பன் பெருவிழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் நகர்மன்றத்தில் 48-வது கம்பன் பெருவிழா அடுத்தமாதம் 10 நாட்கள் நடைபெறுகிறது.

    • விராலிமலை அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு முத்துமாரியம்மன் கோவில் திறக்கப்பட்டது
    • இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மேலபச்சகுடி ஊராட்சி தென்னிலை பட்டியில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வழிபாடு நடத்தி வந்த 3 தரப்பினர்களுக்கு இடையே முதல் மரியாதை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் கோயில் பூட்டப்பட்டது. இதனால் திருவிழா நடத்த முடியாமலும், தினசரி வழிபாடு நடத்த முடியாமலும் பக்தர்கள் மனவேதனை அடைந்து வந்தனர்.

    மேலும் இதுதொடர்பாக தமிழக இந்து சமய அறநிலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புதுகோட்டை மாவட்ட தேவஸ்தான அதிகாரிகள் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட 3 தரப்பினரையும் அழைத்து கோயில் திறக்கப்படுவதாக தெரிவித்ததோடு மேற்படி முதல் மரியாதை தொடர்பாக ஏதேனும் நிவர்த்தி வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடிக்கொள்ளமாறு அறிவுறுத்தினர்.

    அதைதொடர்ந்து திருக்கோயில் தஞ்சாவூர் இணை ஆணையர் ஞானசேகரன், புதுக்கோட்டை உதவி ஆணையர் அனிதா, திருக்கோவில் தக்கார் சந்திரசேகர், குளத்தூர் சரக ஆய்வாளர் யசோதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர், திருக்கோவில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் வழிபாட்டிற்காக கோவில் திறக்கப்பட்டு நித்திய பூஜை நடைபெற்றது. 2 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • திருகோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
    • பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு நுழைவுத் தேர்வு பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில், மேல்நிலை வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் மற்றும் நியூ ஹரிஸோன் அகாடமியுடன் இணைந்து நீட், ஜே.இ.இ பயிற்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. "சேர்ந்தே உயர்த்துவோம்" என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையேற்றார். அவர் பேசும்போது, இன்றைய நிலையில் பள்ளியிறுதி வகுப்புக்குப்பிறகான படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அப்படி எழுதுகின்ற நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுகின்ற மாணவர்கள்தான் நல்ல தரமான கல்லூரிகளில் மேற்படிப்பை தொடர முடியும். அதற்கான பயிற்சிகளைத் தேடி பெருநகரங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. நம்பள்ளியில் இந்த ஆண்டு முதல் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை நியூ ஹரிஸோன் அகாடமியுடன் இணைந்து வழங்குகின்றோம். மேலும் மாணவர்கள் ஆடிட்டர் படிப்பைத் தெரிவு செய்ய சி.ஏ. படிப்புக்கான பயிற்சியை பிரசாத் ஆடிட்டருடன் இணைந்து நம் பள்ளியில் வழங்க உள்ளோம்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இலட்சியங்களைக் கேட்டறிந்து அவர்கள் கடுமையாக உழைக்க உறுதுணையாக இருக்கவேண்டும் என்று பேசினார்.

     தொடர்ந்து நியூ ஹரிஸோன் அகாடமியின் இயக்குநர் டேவிட்ரிச்சர்ட்பார்டன் பேசினார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் அபிராமசுந்தரி வரவேற்க, நிறைவாக துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு நுழைவுத் தேர்வு பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டர். விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, வரலெட்சுமி, கோமதி. மேலாளர் ராஜா, ஆசிரியர் கணியன் செல்வராஜ் நியூ ஹரிஸோன் அமைப்பினைச் சேர்ந்த கண்ணன், கோபு, கலைவாணி, இராஜகோபால் ஆடிட்டர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டர். நிகழ்வை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.

    • புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழா நடைபெற்றது
    • நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு பால், திருமஞ்சனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆலயத்தின் அலங்கார மண்டபத்தில் உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு பால், திருமஞ்சனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் வேதநாயகி அம்பிகை சாந்தநாதசுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

    இவ்விழாவில் உபயதாரர் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், குருக்கள் சிறப்புடன் செய்தனர். புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி சுந்தரம் அடிகளார் இல்லத்தில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து திருமுறைகள், சிவபுராணம், நடராஜப் பத்து முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர். நடராஜ பெருமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆறு நாட்கள் மட்டுமே சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் முக்கிய விசேஷங்கள் ஆகும்.

    • ஆலங்குடியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம் செய்யபடுகிறது
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    ஆலங்குடி,

    வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் நடைபெறும் வடகாடு, புள்ளான்விடுதி, கீழாத்தூர், மாங்காடு, சூரன் விடுதி, கொத்தமங்கலம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று வடகாடு உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, வயலோகம் ஊராட்சியிலுள்ள நடுநிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, எம்.எல்.ஏ., மருத்துவர் முத்துராஜா, புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இம்மருத்துவ முகாமில், சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், ஆஸ்துமா நோய் மற்றும் பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வும், நோய் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்பட்டன. டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் அறிவரசு அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர் யோகேஸ்வரி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.



    • கஞ்சா பறிமுதல் வழக்கில் தப்பியோடிய 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • காய்கறி மூட்டைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 409 கிலோ கஞ்சா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே அம்மாசத்திரம் பகுதியில் கடந்த 13-ந் தேதி இரவு சரக்கு வேனில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காய்கறி மூட்டைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 409 கிலோ கஞ்சா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்த முயன்ற இந்த சம்பவத்தில் சரக்கு வேனில் வந்த 2 பேரும் தப்பியோடிவிட்டனர். போலீசார் விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், சிப்பிக்குளம் கீழ வைப்பாறு ஸ்ரீ வைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 24), தூத்துக்குடி சிப்பிக்குளம் குளத்தூர் கிழக்கு பகுதியை சேர்ந்த ஸ்டார்வின் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்தனர். இதுவரை அவர்கள் பிடிபடவில்லை. அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க சென்றதில் ஒரு தனிப்படையினர் திருப்பி வந்த நிலையில், மற்றொரு தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டத்திற்குள் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


    • அறந்தாங்கியில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    அறந்தாங்கி,

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் மருத்துவம், கர்பிணிப்பெண்களுக்கான மருத்துவம், எழும்பியல், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. விழாவில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், செவித்திறன் கருவி, தொழுநோய்க்கான காலனிகள் உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,மருத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நாவல்ஏரியில் நரிக்குறவ பழங்குடியினத்தை சேர்ந்த 20 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தனர்
    • நாவல் ஏரி அருகே 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டகை அமைத்து குடியிருந்து வருகின்றனர்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டையில் பள்ளி செல்லாமல் இருந்த நரிக்குறவர் பழங்குடியினத்தை சேர்ந்த குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் நாவல் ஏரி அருகே 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டகை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்க்காமல் பெற்றோர்களுடன் வியாபாரம் செய்வதும் குடியிருப்பு பகுதியில் தங்கி இருப்பதுமாக இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் 20 நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளை, சமூகப் பணியாளர் எட்வின், கந்தர்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்க்க முயற்சி எடுத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி அந்த 20 குழந்தைகளையும் அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்த்தார். மேலும் அவர்களுக்கு அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி கூறினார். இந்த பள்ளி சேர்க்கையின் போது, அப்பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடியில் மதுவிற்றவர் கைது செய்யபட்டார்
    • இதுகுறித்துபோலீசார் வேல்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அனுமதியின்றி மதுபானம் விற்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தீதான் விடுதியை சேர்ந்த வேல்சாமி (வயது 54) என்பவர் அன்பு கோவில் முக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மதுபான பாட்டிகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வேல்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புதுக்கோட்டை பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
    • மழலையர்கள் யோகா தின உறுதி மொழி எடுத்துக்கொண்டு யோகா பயிற்சிகள் செய்தனர்.

    புதுக்கோட்டை,

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை திலகர் ஏவிசிசி மழலையர் பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் நிறுவனரும், ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனருமான ஏவிசிசி கணேசன் குத்துவிளக்கேற்றி யோகா தின விழாவை துவக்கி வைத்து யோகா பயிற்சியின் அவசியத்தை விளக்கி பேசினார். அப்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014-ல் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான், கடந்த 9 ஆண்டுகளாக சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவதையும், அமெரிக்கா பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி ஐ.நா. சபையில் யோக தினம் கொண்டாடுவதை பெருமையுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து மழலையர்கள் யோகா தின உறுதி மொழி எடுத்துக்கொண்டு யோகா பயிற்சிகள் செய்தனர். ஏவிசிசி பள்ளி நிர்வாகி மல்லிகா கணேசன் மற்றும் ஆசிரியைகள், பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • கீரனூர் அருகே மின்மாற்றி சீரமைக்கபட்டது
    • கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    கீரனூர்,

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கீரனூர்அருகே உள்ள குளத்தூர் கடை வீதியில் உள்ள மின்மாற்றியில் இடி விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமம் முழுவதும் இருளில்் மூழ்கியது. இதையடுத்து உடனடியாக கீரனூர் கோட்ட மின்வாரிய ஊழியர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்து மின்சப்ளை செய்தனர். மேலும் இடி விழுந்து பழுதான மின்மாற்றியை ஊழியர்கள் சீரமைத்து முழுமையாக மின்சாரம் கிடைக்க செய்தனர்.

    ×