search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேங்கைவயல் விவகாரம்- தனிநபர் ஆணைய அதிகாரி இரண்டாம் கட்ட விசாரணை
    X

    வேங்கைவயல் விவகாரம்- தனிநபர் ஆணைய அதிகாரி இரண்டாம் கட்ட விசாரணை

    • வழக்கை கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று வரை தொடர்ந்து 157 நாட்கள், 158 சாட்சிகளில் விசாரணை நடத்தி உள்ளனர்.
    • முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டு அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மர்ம நபர்கள் மனித கழிவை கலந்தனர்.

    தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் 20 நாட்கள் விசாரணை நடத்தினர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதையடுத்து வழக்கை கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று வரை தொடர்ந்து 157 நாட்கள், 158 சாட்சிகளில் விசாரணை நடத்தி உள்ளனர். இருந்தபோதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    அதேவேளையில் மரபணு சோதனை மற்றும் அறிவியல் பூர்வமான சோதனைகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டு அந்த அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மாதம் 6-ந்தேதி வேங்கைவயல் கிராமத்திற்கு நேரில் சென்றார். அப்போது மனித கழிவு கலக்கப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்தநிலையில் இன்று இரண்டாம் கட்டமாக தனிநபர் ஆணைய தலைவர் சத்தியநாராயணன் இன்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    வேங்கைவயல் வழக்கு விவகாரத்தில் தற்போது வரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன, பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள், தற்போது அந்த கிராமத்தில் அமைதி நிலவுகிறதா? உள்ளிட்டவை குறித்து விரிவாக விசாரணை நடத்தினார்.

    வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். தற்போது வரை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    அறிவியல் பூர்வமான சோதனை என்ற அடிப்படையில் அவர்கள் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே இதற்கு கால அவகாசம் நிர்ணயிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்னும் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். வேங்கைவயல் சம்பவம் நடந்து 177 நாட்களை கடந்துவிட்ட நிலையில் விரைவில் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்திற்கு முன்பு நிறுத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×