என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஆண்டி. இவரது மகன் கவியரசு (வயது 19). இவர் மும்பையில் உள்ள விமானப்படை விமான பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது பயிற்சியில் தடுமாறி விழுந்ததில் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். பின்னர் கவியரசுக்கு மும்பையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பொன்னமராவதிக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில் கவியரசுவை திடீரென காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று வலையப்பட்டி மலையாண்டி கோவில் பின்புறம் பூச்சி மருந்தை குடித்து (விஷம்) கவியரசு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவியரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் விதமாக பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    கீரமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் விதமாக பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னால் பேரூராட்சி தலைவர் துரை முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து அறந்தாங்கி வனத்துறை அதிகாரி ராஜேந்திரன், மரம் தங்க கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு மாணவர் களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். பின்னர் ராஜேந்திரன் பேசுகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுபடுவதை தடுத்து வெப்பத்தை குறைக்க மரக்கன்றுகள் வளர்ப்பது மிகவும் அவசியம். அதனால் ஒவ்வொரு மாணவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஈஷா யோகா பசுமைக்கரங்கள் திட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 
    பொன்னமராவதி கலவர வழக்கு தொடர்பாக கைதான 22 பேரும் திருமயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    பொன்னமராவதி:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வசித்து வரும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், கடந்த மாதம் 19-ந்தேதி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திடீரென போலீஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கலவரம் தொடர்பாக 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்களையும் கைது செய்தனர். அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் சமுதாய வாக்குகளை பெறும் நோக்கத்தில் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பியது தெரியவந்தது.

    இதனிடையே வழக்குப் பதிவு செய்யப்பட்ட 1,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக போலீசார் கைது நடவடிக்கையை ஒத்தி வைத்திருந்தனர். தற்போது தேர்தல் முடிவடைந்துள்ளதால் கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை போலீசார் தொடங்கியுள்ளனர்.

    அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் 22 பேரை போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் வீடு வீடாக புகுந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கைதான 22 பேரும் திருமயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 22 பேரும் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பொன்னமராவதி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    பொன்னமராவதி கலவரம் தொடர்பாக 30 பேரை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.
    பொன்னமராவதி:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதனை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வசித்து வரும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த மாதம் 19-ந்தேதி பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென போலீஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கலவரம் தொடர்பாக 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்களையும் கைது செய்தனர். இதில் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த சிலரை, போலீசார் சொந்த ஊருக்கு வரவழைத்து கைது செய்தனர். பாராளுமன்ற தேர்தலில் சமுதாய வாக்குகளை பெறும் நோக்கத்தில் வாட்ஸ்அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பியது தெரியவந்தது.

    இதனிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட 1,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக போலீசார் கைது நடவடிக்கையை ஒத்தி வைத்திருந்தனர்.

    தற்போது தேர்தல் முடிவடைந்துள்ளதால் கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை போலீசார் தொடங்கியுள்ளனர். அதன் படி நேற்றிரவு வழக்குப்பதிவு செய்யப்பட்ட சிலரை கைது செய்வதற்காக பொன்னமராவதி பகுதியில் உள்ள வீடுகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் குறிப்பிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அறந்தாங்கி அருகே பெற்றோருக்கு சாப்பாடு கொண்டு சென்ற தந்தை-மகன் தனியார் பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் தோப்பு பட்டினச்சேரி பகுதியில் உள்ளது. அங்கு ராஜேந்திரனின் பெற்றோர் தங்கி விவசாயத்தை கவனித்து வருகிறார்கள்.

    தினமும் அவர்களுக்கு ராஜேந்திரன் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பாடு கொண்டு சென்று கொடுத்துவிட்டு  வருவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு உணவு கொடுப்பதற்காக ராஜேந்திரன், தனது மகன் விக்னேஸ்வரன் (22) என்பவருடன் கீழையூரில் இருந்து பட்டினச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே அறந்தாங்கியில் இருந்து பெங்களூர் நோக்கி தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மேட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தந்தை, மகன் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்ததும் அங்கு வந்த அறந்தாங்கி போலீசார் பலியானவர்களின்  உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோருக்கு சாப்பாடு கொண்டு சென்ற தந்தை, மகன் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    என் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பா.ஜனதா அரசு எப்போதும் என்னை மிரட்ட முடியாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் நேற்று புதுக்கோட்டையில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் தி.மு.க., காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிவகங்கை தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் வாங்கி உள்ள ஓட்டுகள் தான் கூட்டணி கட்சி உடைய ஓட்டு வங்கி என்று கருதக்கூடாது. ஓட்டு வங்கி மக்களின் மனநிலையை பொறுத்து மாறும், தற்போது வாங்கி உள்ள வாக்குகளை தக்க வைக்கும் வகையில் கூட்டணி கட்சியினர் செயல்பட வேண்டும்.

    காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளை புறக்கணிப்பு செய்து நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் இயக்கத்திற்கு இளைஞர்கள் வாக்குகளை அளித்து உள்ளனர். அந்த வாக்குகளை உதாசீனமாக எடுத்து விடக் கூடாது.



    என் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பா.ஜனதா அரசு என்னை எப்போதும் மிரட்ட முடியாது. தேர்தல் பிரசாரத்தின்போது கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை அளித்ததால் வாக்குகள் பெற்றும், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவில்லை. சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவை.

    அதை பெறுவதற்கு தொடர்ந்து மத்திய, மாநில அரசிடம் நான் வலியுறுத்துவேன். ராகுல்காந்திதான் என்றைக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பார். ரஜினிகாந்த் கூறிய கருத்து என்ன என்று எனக்கு தெரியவில்லை. வரும் காலங்களில் நோட்டா என்ற ஒன்று இருக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சி அருகே உள்ள விராலிமலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ் டிரைவர் பலியானார். 30 பயணிகள் காயமடைந்தனர்.
    விராலிமலை:

    சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றிரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை நெல்லை சீவலப்பேரியை சேர்ந்த டிரைவர் முருகன் (வயது 36) ஓட்டினார்.

    இன்று அதிகாலை 4 மணியளவில் திருச்சி அருகே உள்ள விராலிமலை குறிச்சிப்பிரிவு நான்குவழிச்சாலை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது, நிலைதடுமாறியதில் லாரியின் பின்பக்கம் வேகமாக பஸ் மோதியது.

    இதில் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் முருகன் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ்சில் இருந்த பயணிகள் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் பலத்த காயமடைந்த நெல்லை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ஜாஸ்மின் (18), விழுப்புரம் மேலபாதி ரெட்டியார் தெருவை சேர்ந்த தாமோதரன் (37), சென்னை ஏரியாறு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (47), அருப்புக்கோட்டையை சேர்ந்த செல்வம் (45) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் சிகிச்சை பெற்று அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    உரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    உரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் எலி மருந்துகள், கரப்பான்பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் கொசு விரட்டி போன்ற வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் பூச்சிமருந்து விற்பனை உரிமம் அவசியம்/ உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பெட்டிக் கடைகள், மளிகை கடைகள், ஷாப்பிங்மால் போன்ற சூப்பர் மார்க்கெட்களில் எலி மருந்துகள், கரப்பான்பூச்சி கொல்லி மருந்துகள், கொசுவர்த்தி சுருள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்துகளை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.

    வீட்டில் பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் கடைகளில் விற்பனை செய்ய உரிமம் பெறுவது அவசியமாகும். இதற்கு தேவையான உரிமத்தினை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பூச்சி மருந்துக்கு ரூ.500 வீதம் அதிகபட்சம் ரூ.7500- செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.

    உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பூச்சிமருந்து சட்டம் 1968ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனவே, அனைத்து பெட்டிக் கடை, மளிகைகடை மற்றும் சூப்பர் மார்க்கெட் விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் . பூச்சி மருந்து சட்டம் 1968ன்படி உரிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்களையும் பராமரிப்பதோடு விற்பனை செய்வதற்கு உரிய பட்டியலையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சி மருந்துகளை உணவு பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்யவேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.

    மேலும் இது குறித்த விபரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர், புதுக்கோட்டை - 6381741240, கந்தர்வகோட்டை 9442275726, திருவரங்குளம் - 8072154306, கறம்பக்குடி - 9443826047, அறந்தாங்கி - 9442634852, ஆவுடையார்கோவில் - 9944669129, மணமேல்குடி - 9865012210, திருமயம் - 9843322167, அரிமளம் - 9486493224, பொன்னமராவதி - 9442684565, அன்னவாசல் - 9629500919, விராலிமலை - 9443839994, குன்றாண்டார்கோவில் - 9442933492 அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் மேற்கு ஆகிய இடங்கள் முந்திரி காடுகள் உள்ள வன பகுதியாகும்.

    இங்கு ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் அங்குள்ள நீர்நிலைகள்வறண்டு விட்டன. எனவே குடிநீருக்காக மான்கள் ஊருக்குள் வருகின்றன. அப்படி அவை வரும் போது நாய்கள் மான்களை துரத்தி கடிக்கின்றன.

    இந்நிலையில் நேற்று தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று வழி தவறி ஊருக்குள் புகுந்து விட்டது. மானை கண்ட நாய்கள் துரத்தி சென்று மானை கடித்தன. இதில் அந்த மான் பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

    சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் பொதுமக்கள் வனப்பகுதியில் வன உயிரினங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள அரசு தண்ணீர் வசதி செய்து தர வேண்டு மென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆலங்குடி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள வம்பன்காலனி பாப்பன் பட்டியைச் சேர்ந்தவர் சிவானந்தன் (வயது 35). இவர் சொந்த வேலை காரணமாக ஆலங்குடிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆலங்குடி- புதுக்கோட்டை சாலையில் ஆலங்குடி அருகே முந்திரி பருப்பு தயாரிக்கும் தொழிற் சாலை அருகே வந்த போது செங்கல்லோடு ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் லாரி டயரில் சிக்கி சிவானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குடி போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். இறந்த சிவனாந்தத்திற்கு மகேஷ்வரி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
    புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட வங்கி ஊழியர் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த மாரிமுத்து, கடந்த 28-ந் தேதி காணவில்லை என்று அவரது மனைவி ராணி போலீசில் புகார் அளித்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாரிமுத்து உடல் அழுகிய நிலையில் கோடியக்கரை கடல் பகுதியில் பிணமாக கிடந்தார்.

    இந்நிலையில் வங்கியின் முதுநிலை மேலாளர் மாரிஸ் கண்ணன், புதுக்கோட்டை டவுன் போலீசில் அளித்த புகாரில், வங்கியில் ரூ.4.84 கோடி மதிப்புள்ள 13¾ கிலோ தங்க நகைகளை காணவில்லை என்று கூறியிருந்தார்.

    இதனையடுத்து இந்த வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மாரிமுத்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை கையாடல் செய்து, கவரிங் நகைகளை வைத்து விட்டு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளதும், அந்த நகைகளை அதிகாரிகள் சோதனை செய்யாமல் பாக்கெட்டை மட்டுமே சரி பார்த்து உள்ளதும் தெரிய வந்தது.

    இதனால் மாரிமுத்து செய்த மோசடி வங்கி அதிகாரிகளுக்கு நீண்ட நாட்களாக தெரியவில்லை. இந்நிலையில் மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனையில், அவரது கழுத்து எலும்பு, விலா எலும்பு ஆகியவை முறிந்த நிலையில் இருந்ததால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இந்தநிலையில் தனிப்படை போலீசார் மணமேல்குடி, கோடியக்கரை உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார், வங்கியில் நகை வைத்திருந்த பெட்டகங்கள், அதன் சாவிகளின் பயன்பாடு குறித்து வங்கியின் கிளை மேலாளர், காசாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் 2013-ம் ஆண்டு முதல் வங்கியில் நகைகள் மாயமானதாக வங்கி நிர்வாகம் புகார் கூறியுள்ளதால் அந்த ஆண்டு முதல் பணியாற்றியவர்கள் விவரங்களை கேட்டறிந்தனர். மேலும் வங்கி கிளை மேலாளர், காசாளர் ஆகியோரிடம் இருக்க வேண்டிய சாவிகள் மாரிமுத்து கைக்கு போனது எப்படி?, அதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை நெருங்கி விட்டதாகவும் தெரிவித்தனர்.

    இருப்பினும் இந்த சம்பவத்தில் பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதால் கொலையாளிகள் யாரென்று கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மாரிமுத்துவின் மனைவி ராணி, தனது கணவர் சாவில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்று கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இதனிடையே நகைகள் கையாடல் செய்யப்பட்டதில் வங்கி அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த நகை முறைகேடு சம்பவத்தை மூடி மறைக்க மர்மமான முறையில் மரண மடைந்த வங்கி ஊழியர் மாரிமுத்து மீது அனைத்து பழிகளையும் சுமத்தி, அவர் நகையை முறைகேடு செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கை திசைமாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், வங்கி ஊழியர் மாரிமுத்து, பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கையாடல் செய்த ரூ.5கோடி மதிப்பிலான நகைகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் அடகு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு புதுக்கோட்டை போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர். விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    திருமயம் ஒன்றியம், பனையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வி.லெட்சுமிபுரத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் நடைபெற்றது.
    திருமயம்:

    திருமயம் ஒன்றியம், பனையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வி.லெட்சுமிபுரத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் நடைபெற்றது. இதற்கு மனோஜ் தலைமை தாங்கினார். பனையப்பட்டி மருத்துவ அலுவலர் நிர்மலாவதனம் முன்னிலை வகித்தார். இதில் முதுநிலை சுகாதார ஆய்வாளர் முருகேசன் கலந்து கொண்டு, டெங்கு காய்ச்சல் எப்படி வருகிறது. இதனை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். இதில் 100 நாள் திட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுராமன் வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலர் வடிவேலு நன்றி கூறினார்.

    இதேபோல் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில், தேசிய டெங்கு ஒழிப்பு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், பொன்னமராவதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராமராஜ், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்து கொண்டனர். 
    ×