என் மலர்
புதுக்கோட்டை
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, மினிக்கியூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் போதுராஜ் (வயது 40). கூலித் தொழிலாளியான இவர், நேற்று வீட்டிலிருந்து சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லஞ்சமேடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக போதுராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த போதிராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட சாத்திவயல் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 44). கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில், கோபாலின் தாய் சின்னப்பிள்ளை (65) மட்டும் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சின்னப்பிள்ளை சென்றிருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோபால், திண்டுக்கல்லில் இருந்து வீடு திரும்பினார். பின்னர் இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் பீரோவில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கங்கானிப்பட்டியை சேர்ந்தவர் காடப்பன் (வயது 66). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த 12-3-2019 அன்று 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தார். அந்த சிறுமி மனவளர்ச்சி குன்றியவர் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திருமயம் அனைத்து மகளிர் போலீசார், காடப்பன் மீது போக்சோ சட்டம் உள்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி காடப்பனுக்கு போக்சோ சட்டத்தில் 2 பிரிவுகளில் தலா 5 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுமி என தெரிந்தும் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், இதனை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.
அதன்படி அவர் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ.2½ லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து காடப்பனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
புதுக்கோட்டை:
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை யாத்திரை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த யாத்திரை புதுக்கோட்டை வந்தது. அப்போது கட்சியின் மாநில தலைவர் வசீகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டசபை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார்.
ஊழலை ஒழிப்பதற்காக யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்கிறோம். தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ள மினி கிளினிக் திட்டத்தை ஏற்கனவே டெல்லியில் கெஜ்ரிவால் தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
தமிழக அரசும் இந்த திட்டத்தை தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் செயல்படாமல் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதி நால் ரோட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எப்.ஐ) சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் விவசாய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.






