என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    காங்கிரஸ் அதிக முறை வெற்றி பெற்ற, விவசாயத்தைத் தவிர வேறு தொழில்கள் இல்லாத புதுக்கோட்டை தொகுதி குறித்து ஓர் பார்வை.
    தமிழகத்தில் பின்தங்கிய, வறட்சியான தொகுதி புதுக்கோட்டை. விவசாயத்தைத் தவிர வேறு தொழில்கள் இல்லை. ஆலங்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் சிறிதளவு முந்திரி விளைகிறது. தொழிற்சாலைகள் அதிகமில்லை. இத்தொகுதியில் தைல மரங்கள் நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள காகித தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாக பயன்படுகிறது. புதுக்கோட்டை தொகுதி 1962-ம் ஆண்டு முதல் பேரவைத் தேர்தலை சந்தித்து வருகிறது.

    புதுக்கோட்டை தொகுதி

    இத்தொகுதியில் முக்குலத்தோர் பெருமளவில் உள்ளனர். அடுத்தப்படியாக ஆதி திராவிடர், முத்தரையர் கணிசமாக உள்ளனர். வெள்ளாளர், கோனார், உடையார், முஸ்லீம்கள், முற்பட்ட சமுதாயத்தினரும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளனர். இத்தொகுதியில் நகர்ப்புற வாக்காளர்களும், கிராமப்புற வாக்காளர்களும் ஏறத்தாழ சமநிலையிலேய உள்ளனர்.

    கிராமப்புற பகுதியில் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகம். நகர்ப்புறத்தில் தி.மு.க. பலமுள்ள கட்சி. ஒருகாலத்தில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. தற்போது அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவால் செல்வாக்கில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை தொகுதி

    புதுக்கோட்டை நகரில் வாரச்சந்தை நடைபெறும் நகராட்சிக்குச் சொந்தமான சுமார் 41 ஏக்கர் நிலப்பரப்பு பல்வேறு ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. அதை மீட்டு ஒருங்கிணைந்த சந்தை வளாகம் அமைத்து அங்கு தினசரி சந்தை அமைப்பது, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வது போன்ற சீரமைப்புப்பணிகளை மேற்கொள்ள கடந்த 2011-ல் மாவட்ட நிர்வாகத்தால் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டது. ஆனால், அது நடைமுறைக்கு வராமல் போனது.

    புதுக்கோட்டை தொகுதி

    மேலும் புதிய பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுப் பகுதியில் ஆம்னி பேருந்துகள் நிற்பதால் அந்த சாலை நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதை தவிர்க்க ஆம்னி பஸ்களுக்கு என்று தனிப்பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதேபோல ஷேர் ஆட்டோக்கள் வட்டப் பேருந்து இயங்குவதற்கும் கடந்த 20 ஆண்டுகளாக முட்டுக்கட்டைகள் நீடித்து வருகிறது. இதை யாருமே கண்டு கொள்ளவில்லை.

    புதுகை நகராட்சியில் தொடங்கப்பட்ட புதை சாக்கடைத்திட்டம் இதுவரை மக்களின் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.

    புதுகை நகராட்சியின் சாலைகளைத் தரமுடன் அமைக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நிழல் தரும் மரங்களை நட வேண்டும். நகரின் சுகாதாரக்கேடுகளைக்களைய வேண்டும். கழிவு நீர்க்கால்வாய்கள் இல்லாத குடியிருப்புகளுக்கு கால்வாய் கட்டித்தர வேண்டும். அரசு சார்பில் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பவை நகரப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    புதுக்கோட்டை தொகுதி

    புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் சுமார் 1.20 லட்சம் வாக்காளர்கள் (50 சதவிகிதம்) உள்ளனர். புதுக்கோட்டை ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளும், தொகுதி சீரமைப்பின் போது ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த கறம்பக்குடி ஒன்றியத்தின் 23 ஊராட்சிகள் புதுக்கோட்டை தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த தொகுதியில் 1962-ம் ஆண்டு முதல் 2016 வரை நடந்த தேர்தல்களில் (2012 -ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தல் உள்பட) 14 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    புதுக்கோட்டை தொகுதி

    தொகுதியில் கணிசமாக உள்ள முத்தரையர் சமூகத்தினருக்கு ஆளும் கட்சியால் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக கடந்த 2016 தேர்தலில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தொகுதி தவிர்த்த 5 தொகுதிகளிலும் சுயேச்சையாகக் களம் இறங்கியதால் 3 தொகுதிகள் (திருமயம், புதுக்கோட்டை, ஆலங்குடி) அ.தி.மு.கவுக்கு பாதகமாகவே அமைந்தது.

    புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம். ஆண்கள் 1,18,944, பெண்கள் 1,24,263, மூன்றாம் பாலினத்தவர்கள் 22 என மொத்தம் 2,43,229 வாக்காளர்கள் உள்ளனர்.


    புதுக்கோட்டை தொகுதியில் இதுவரை வெற்றி நிலவரம்:-

    புதுக்கோட்டை தொகுதி இதுவரை
    புதுக்கோட்டை தொகுதி இதுவரை

    1952 பாலகிருஷ்ணன் (காங்கிரஸ்)
    1962 தியாகராஜன் (தி.மு.க.)
    1967 ஆர்.வீ.தொண்டைமான் (காங்கிரஸ்)
    1971 சத்தியமூர்த்தி (காங்கிரஸ்)
    1977 விஜயரகுநாத தொண்டைமான் (காங்.)
    1980 விஜயரகுநாத தொண்டைமான் (காங்.)
    1984 முகமது கனி (காங்கிரஸ்)
    1989 பெரியண்ணன் (தி.மு.க.)
    1991 சாமிநாதன் (காங்கிரஸ்)
    1997 மாரி அய்யா (தி.மு.க.)
    2001 டாக்டர் விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.)
    2006 நெடுஞ்செழியன் (அ.தி.மு.க.)
    2011 முத்துக்குமரன் (இந்திய கம்யூனிஸ்டு)
    2012 கார்த்திக் தொண்டைமான் (அ.தி.மு.க.)
    2016 பெரியண்ணன் அரசு (தி.மு.க.).
    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கதிர் அறுக்கும் எந்திரம் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கீரனூர்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை சிவகங்கையை சேர்ந்த டிரைவர் விஜயராஜ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பஸ் திருச்சியை அடுத்த புதுக்கோட்டை மாவட்ட தொடக்கமான கீரனூரை அருகேயுள்ள பொம்மாடிமலை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே வந்த கதிர் அறுக்கும் எந்திர வாகனம் மீது ஆம்னி பஸ் உரசியது. இதனால் நிலை குலைந்த பஸ் சாலையின் இருபுறமும் தாறுமாறாக ஓடியது. இதில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் அச்சத்தில் அலறினர். பஸ்சை நிறுத்த டிரைவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இறுதியில் அந்த பஸ் சாலையின் நடுவில் கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் உள்பட அனைவரும் ஐயோ அம்மா என்று இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர்.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாளையங்கோட்டை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் வெங்கடேஷ் (23), ராமநாதபுரத்தை சேர்ந்த அருண்பாண்டியன் மனைவி சரண்யா (26) ஆகியோர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்

    இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். காயம் அடைந்த 29 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான கதிர் அறுக்கும் வாகனத்தை பறிமுதல் செய்து, தலைமறைவான அதன் டிரைவரை தேடி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடத்தை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.
    பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை-பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு கொள்ளுப்பட்டியில் வசித்து வருபவர் பிச்சை (வயது 43). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவரும், இவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். மகள் பள்ளிக்கு சென்றிருந்தார்.

    பின்னர் பள்ளி முடிந்து பிச்சையின் மகள் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்ற பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து பொன்னமராவதி போலீசில் பிச்சை புகார் அளித்தார். அதன்பேரில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அருகிலுள்ள குளத்தூர் நாயக்கர் பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 60). இவர் தனது சொந்த வேலை காரணமாக அருகிலுள்ள தட்டமனை பட்டி கிராமத்திற்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். நடுப்பட்டி கிறிஸ்துராஜா பள்ளி அருகில் வந்த போது, மோட்டார் சைக்கிளை அந்த வழியாக வந்த டிராக்டர் முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் டிராக்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருஷ்ணசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணமேல்குடி அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மணமேல்குடி:

    மணமேல்குடியை அடுத்த விச்சூர் குணபதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி அஞ்சம்மாள் (வயது 60). கருப்பையா ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அஞ்சம்மாள் தனியாக வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் அதே பகுதியில் வசிக்கும் தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ே மற்கூரை (ஓடு) பிரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்த போது, 7 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அஞ்சம்மாள் மணமேல்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி சாலையில் கந்தவர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரி உரிமையாளர் தஞ்சாவூரை சேர்ந்த சதீஷ் (வயது 31), லாரி டிரைவர் மழைராஜ் (34) ஆகிய 2 பேரையும் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகில் உள்ள பாத்தம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர் ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் உள்ள ரோஜா நகரில் கட்டிடத்தில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறுதலாக அவரது கை மின்கம்பியில் பட்டதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகிலுள்ள வாராப்பூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் கூலிவேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து கோழிப்பண்ணையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கணேசன் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை கோழிப்பண்ணையில் கணேசன் இல்லை என்பதை அறிந்து உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது வாராப்பூர் பெரியகுளத்தில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், உறவினர்கள் சென்று பார்த்தனர். அங்கு குளத்தில் இறந்து கிடந்தது கணேசன் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சம்பட்டி விடுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குளத்தில் குளிக்கும் போது கால் தவறி விழுந்து கணேசன் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி காந்திநகர், உசிலங்குளம், அய்யனார்புரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் குடிநீர் சீராக வினியோகிக்கப்படவில்லை எனவும், 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் குடிநீர் வசதி கோரி நேற்று அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்திருந்தனர். சாக்கடை கலந்த கழிவு நீரை சிலர் குடங்களில் பிடித்திருந்தனர்.

    இந்த மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கணேஷ் நகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    இதற்கிடையில் நகராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் இல்லை எனவும், பாதாள சாக்கடை பணி நிறைவு பெறவில்லை எனவும் ஒருவர் பதாகையை தனது ஸ்கூட்டரில் முன்னும், பின்னும் தொங்கவிட்டுள்ளார். அவர் அந்த பதாகையுடன் ஸ்கூட்டரில் நகரப்பகுதியில் வலம் வந்தப்படி உள்ளார்.
    கீரனூர் அருகே குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கீரனூர்:

    கீரனூரை அடுத்த தென்னத்திரையன் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 40). கூலித்தொழிலாளியான இவருக்கு மது அருந்து பழக்கம் இருந்து வந்தது. தொடர்ந்து மது அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததாக தெரிகிறது. இதை அவரது மனைவி இளஞ்சியம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பழனிச்சாமி மதுவுடன் பூச்சி மருந்தை கலந்து குடித்து மயங்கி கிடந்தார். 

    இதை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் தப்பிச்சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    கீரனூர் கள்ளர் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சத்யா (வயது 45). சம்பவத்தன்று இவர் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சத்யா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றனர். அப்போது நந்தகுமார் (46) என்பவர் சிக்கினார். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்றவரை தேடி வந்தனர். மேலும் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் பதுங்கி இருந்த வேலுச்சாமி (40) என்பவனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடமிருந்து 4 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
    கறம்பக்குடி அருகே மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கறம்பக்குடி, முள்ளங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பாண்டியன், சரவணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ×