என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அதிமுக முன்னாள் எல்எல்ஏ எம்.ராஜநாயகமும், காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.டி. ராமச்சந்திரனும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக நகராட்சி பகுதியாக உள்ளது அறந்தாங்கி. இத்தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஆத்ம நாத சுவாமிகோவில் உள்ளது. அதேபோல் தமிழகத்தில் சிறந்த தர்ஹாக்களில் ஒன்றாக கோட்டைப்பட்டினத்தில் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்ஹாவும் உள்ளது.

    அறந்தாங்கி தொகுதி

    கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் விசைப்படகுகள் மூலமும் கட்டுமாவடி, புதுக்குடி, ஆர். புதுப்பட்டினம், கோடியக்கரை, முத்துக்குடா உள்ளிட்ட 32 கிராமங்களில் நாட்டுபடகுகள் மூலம் மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீன் ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவனி கிடைத்து வருகிறது.

    சுமார் 20,000 ஏக்கரில் காவிரி நீர் மூலம் பாசனம் செய்யப்படுகிறது. இதுதவிர, மழை நீரை கண்மாய்களில் தேக்கி சுமார் 1 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    அறந்தாங்கி தொகுதி

    இத்தொகுதியில் முக்குலத்தோர், ஆதிதிராவிடர், முத்தரையர், உடையார், நாடார், யாதவர், வெள்ளாளர், நகரத்தார் போன்ற சமூகத்தினர் வசிக்கின்றனர். இஸ்லாமியர், மீனவர் சமூகத்தினமும் உள்ளனர்.

    அறந்தாங்கி தொகுதியில் இதுவரை நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் 12 முறை முக்குலத்தோரும், ஒருமுறை இஸ்லாமியரும், ஒரு முறை உடையார் சமுதாயத்தினரும், ஒருமுறை முத்தரையர் சமுதாயத்தினரும் வெற்றி பெற்றுள்ளனர். திருநாவுக்கரசர் 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அறந்தாங்கி தொகுதி

    அறந்தாங்கி தொகுதியில் அறந்தாங்கி நகராட்சியின் 27 வார்டுகளும், ஆவுடையார் கோவில், மணமேல்குடி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சிகள் உள்ளன. மேலும், அறந்தாங்கி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும், அரிமளம் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளும் உள்ளன.

    அதில் மணமேல்குடி வட்டம், ஆவுடையார் கோவில் வட்டம், அறந்தாங்கி வட்டம், ஆளப்பிறந்தான், மூக்குடி, ரெத்தினக்கோட்டை, மேமங்களம், கோவில்வயல், மேலப்பட்டு, பள்ளத்திவயல், ஊர்வணி, ஆலங்குடி, இடையார், குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன் வயல், கம்மங்காடு, உலகளந்தான் வயல், வீரமங்கலம் அடங்கும்.

    நிறைவேறாத கோரிக்கைகள்:-

    அறந்தாங்கி நகரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அறந்தாங்கியில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் அங்கமான சத்திரம் நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இவற்றை அறந்தாங்கி நகராட்சியோடு சேர்க்கப்படாததால் அறந்தாங்கி நகரை விரிவாக்கம் செய்வதில் சிக்கலாக உள்ளது. பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படாததால் மக்கள் தினமும் அல்லப்படுகின்றனர்.

    அறந்தாங்கி தொகுதி

    பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம், அரசு நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும். இத்தொகுதி முழுமைக்கும் காவிரி நீர் கிடைக்கச் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காக பல கட்டங்களாக விவசாயிகள் போராடியும் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடலோரப் பகுதிகளில் மீன் கழிவுகளை தீவனமாக்குதல், மீன்பதனக்கிடங்கு அமைக்க வேண்டுமென்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

    அறந்தாங்கி தொகுதி

    அதேபோல், நாட்டுப்படகு மீனவர்களுக்கும், விசைப்படகு மீனவர்களுக்கும் கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டு வரும் மோதல்களை அரசு தீர்க்க வேண்டுமெனவும் போராடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இலங்கை கடற்படையால் ஏற்படும் இன்னல்களில் இருந்தும் காப்பாற்ற இப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

    அதிமுக சார்பில் 2011-ல் வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏ எம்.ராஜநாயகம் களம் இறக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் எஸ்.டி.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    அறந்தாங்கி தொகுதி இதுவரை
    அறந்தாங்கி தொகுதி இதுவரை

    1951- முகமது சாலிகு (காங்கிரஸ்)
    1957- ராமசாமி தேவர் (சுயேட்சை)
    1962- துரையரசன் (தி.மு.க.)
    1967- துரையரசன் (தி.மு.க.)
    1971- ராமநாதன் (தி.மு.க.) 
    1977- திருநாவுக்கரசர் (அ.தி.மு.க.)
    1980- திருநாவுக்கரசர் (அ.தி.மு.க.)
    1984- திருநாவுக்கரசர் (அ.தி.மு.க.)
    1989- திருநாவுக்கரசர் (அ.தி.மு.க.)
    1991- திருநாவுக்கரசர் (தாயக ம.க.)
    1996- திருநாவுக்கரசர் (அ.தி.மு.க.)
    2001- அரசன் (எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.)
    2006- உதயன் சண்முகம் (தி.மு.க.)
    2011- ராஜநாயகம் (அ.தி.மு.க.)
    2016- ரத்தினசபாபதி (அ.தி.மு.க.)
    திமுக சார்பில் ஏற்கனவே 216-ல் வெற்றி பெற்ற ரகுபதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் பி.கே. வைரமுத்து களம் காண்கிறார்.
    திருமயம் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் தலைசிறந்த ஆன்மிக திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. திருமயத்தில் சிவன், பெருமாள் குடைவரை கோவில்கள் உள்ளன. இவ்விரு கோவில்களும் பல்லவ மன்னர்களால் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளன.

    கோவிலில் ஒரே கல்லில் 21 அடி நீள பெருமாள் சிலை அனந்த சயன நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு பிரசித்தி பெற்றது. பிரசித்தி பெற்ற பழமையான கோவில்கள், கட்டிடங்கள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.

    திருமயம் தொகுதி
    திமுக வேட்பாளர் ரகுபதி, அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து

    மேலும் இப்பகுதி சோழ, பாண்டிய நாடுகளை பிரிக்கும் எல்லையாக இருந்து உள்ளது. திருமயத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் ஊமைத்துரை தலைமறைவாக தங்கி இருந்ததால், இக்கோட்டை ஊமைத்துரை கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

    திருமயம் தொகுதி

    திருமயம் முன்னாள் முதல் அமைச்சர் காமராஜரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊராகும். திருமயத்தில் இருந்து 15-வது கிலோ மீட்டர் தூரத்தில் காட்டுபாவா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த தர்காவில் இந்து, முஸ்லீம் என மத பேதமின்றி அனைவரும் வழிபடுகின்றனர். இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    1957-ம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து வரும் இத்தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர் இனத்தவர் அதிகமாக வசித்து வருகிறார்கள். மேலும் ஆதிதிராவிடர், நகரத்தார் உள்பட பல்வேறு இன மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள்.

    திருமயம் தொகுதி

    திருமயம் சட்டமன்ற தொகுதி சிவகங்கை பாராளுமன்ற தொகுதியோடு சேர்ந்தது. திருமயம் தொகுதியில் 2 தாலுகாக்கள், 3 ஒன்றியங்கள், 2 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பொன்னமராவதி ஒன்றியத்தில் 1 தாலுகாவும், 42 ஊராட்சிகளும், 1 பேரூராட்சியும் இருக்கின்றன. அரிமளம் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளும், பேரூராட்சி ஒன்றும் உள்ளன. திருமயம் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள் உள்ளன.

    திருமயம் தொகுதி

    தொகுதியில் கடந்த 1957, 1962, 1977, 1980, 1984, 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1967, 1971, 1989, 2016-ஆம் ஆண்டுகளில் தி.மு.க.வும், 1991, 2001, 2011 தேர்தல்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன.

    2016 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எஸ். ரகுபதி 766 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் மீண்டும் அவரே களமிறங்குகிறார். அ.தி.மு.க. சார்பில் பி.கே. வைரமுத்து போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,10,974 பேர், பெண் வாக்காளர்கள் 1,16,167 பேர், இதரர் 3 என மொத்தம் மொத்த வாக்காளர்கள் 2,27,144 பேர் உள்ளனர்.

    திருமயம் தொகுதி

    இந்த தொகுதியில் முத்தரையர், ஆதிதிராவிடர்கள், முக்குலத்தோர் இன மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். முத்தரையர் இனமக்கள் தங்கள் செல்வாக்கை காண்பிக்கும் வகையில் தேர்தல்களில் தங்கள் இனத்தை சேர்ந்த ஒருவரை சுயேட்சையாக களம் இறக்குவது வழக்கம். இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் முத்தரையர் ஓட்டுகளை பெற கடும் முயற்சி செய்வதும் வழக்கமான நடைமுறையாகும்.

    கோரிக்கைகள்

    திருமயம் சட்டமன்ற தொகுதியில் பிரதான தொழில் விவசயம். இங்குள்ள நிலங்கள் வானம் பார்த்த பூமியாகத்தான் இருந்து வருகிறது. மழை பெய்தால்தான் விவசாயம் நடைபெறும். இதனால் விவசாயம் தொடர்ந்து நடைபெற கொள்ளிடம் காவிரி நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    திருமயம் தொகுதி

    சுதந்திர போராட்ட தியாகி சத்தியமூர்த்திக்கு திருமயத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும். திருமயம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

    திருமயத்தில் சிறுவர்களுக்கு பூங்கா அமைக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    திருமயம் தொகுதி
    திருமயம் தொகுதி

    1952- பழனியப்பன் (காங்கிரஸ்)
    1957- வி.ராமையா (காங்கிரஸ்)
    1962- பொன்னம்பலம் (தி.மு.க.)
    1967- பொன்னம்பலம் (தி.மு.க.)
    1971- தியாகராஜன் (தி.மு.க. 
    1977- சுந்தர்ராஜ் (காங்கிரஸ்)
    1980- சுந்தர்ராஜ் (காங்கிரஸ்)
    1984- புஷ்பராஜ் (காங்கிரஸ்)
    1989- வி.சுப்பையா (தி.மு.க.)
    1991- வி.ரகுபதி (அ.தி.மு.க.)
    1996- வி.சின்னையா (த.மா.கா.)
    2001- ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
    2006- ராம.சுப்புராம் (காங்கிரஸ்)
    2011- பி.கே.வைரமுத்து (அ.தி.மு.க.)
    2016-  ரகுபதி (தி.மு.க.)
    ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    ஆலங்குடி அருகே உள்ள மேலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 21). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராத்திரி விழாவையொட்டி நெடுங்குடி கைலாசநாதர் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மேல்நிலைப்பட்டி அரிமளம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற ஒணாங்குடி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மீது மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே விஷம் குடித்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே தேத்தான்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). விஷம் குடித்த இவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் உறவினர்கள் சேர்த்திருந்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார். அவரது இறப்பிற்கான காரணம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார், பரம்பூர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர். அப்போது தங்களது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற பரம்பூரை சேர்ந்த வாசுதேவன் (வயது 56), முத்தையா (60), கல்லம்பட்டியை சேர்ந்த ராமு (42) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    விராலிமலை தொகுதி முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அன்னவாசல்:

    விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பறக்கும்படை அலுவலர் பூங்காவனம் தலைமையில் வல்லத்திராக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உள்ளிட்ட போலீசார் அன்னவாசலில் இருந்து விராலிமலை செல்லும் சாலையில் காலாடிப்பட்டி சத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ, கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று சோதனை மேற்கொண்டனர். இதேபோன்று விராலிமலை தொகுதி முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நேற்று புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது. 

    கொரோனா சிகிச்சையில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.
    அறந்தாங்கி தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தற்போது அ.தி.மு.க. வசம் உள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.டி.ராமச்சந்திரன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

    இந்த முறையும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானதாக தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் இன்று அறந்தாங்கியில் ஊர்வலமாக சென்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. தொண்டர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இந்த தேர்தலில் அறந்தாங்கி தொகுதி தி.மு.க.விற்கே வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.
    தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு புதிதாக உருவான கந்தர்வக்கோட்டை தொகுதியில் இரண்டு முறையும் அதிமுக-வே வெற்றி பெற்றுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்த்தில் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு புதிதாக கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி உருவான நிலையில் புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி என்ற தகுதியை புதுக்கோட்டை மாவட்டம் இழந்தது.

    கந்தர்வக்கோட்டை தொகுதி

    கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்தபோது நடைபெற்ற தேர்தல் விபரம்:-

    1989- தி.மு.க. வெற்றி
    1991- காங்கிரஸ் வெற்றி
    1996- தி.மு.க. வெற்றி
    1997- இடைத்தேர்தல் தி.மு.க. வெற்றி
    2001- அ.தி.மு.க. வெற்றி
    2006- அ.தி.மு.க. வெற்றி

    கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி (தனி) யான பிறகு நடைபெற்ற 2011 மற்றும் 2016 சட்டமன்ற தொகுதி தேர்தல்களில் அ.தி.மு.க.வே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. 2011 தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்த சுப்பிர மணியன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

    கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, குண்றான்டார் கோவில் ஒன்றியங்கள் உள்ளடங்கிவை ஆகும்.

    கந்தர்வக்கோட்டை தொகுதி

    கடந்த 2019-ம் ஆண்டு கஜா புயல் தாக்கியபோது இந்த தொகுதியே உருக்குலைந்து போனது. பல ஆயிரம் ஏக்கரில் தென்னை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. இந்த தொகுதிக்குள் வந்து சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விரைவில் மக்களுக்கு தீர்வு கிடைக்க முயற்சி மேற்கொள்வேன் என்று கூறிச்சென்றார்.

    கந்தர்வகோட்டை தொகுதியை பொறுத்தவரை ஏராளமான கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவே பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இருந்தபோதிலும் வரும் ஆட்சி தொகுதிக்கு நல்லாட்சியை தரும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    இந்த தொகுதியில் வாக்காளர்கள் விபரம்:-

    ஆண் வாக்காளர்கள் 1,00,810 பேர், பெண் வாக்காளர்கள் 1,00,241 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் என மொத்தம் 2,01,071 பேர் உள்ளனர்.

    கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கந்தர்வக் கோட்டை சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பேருந்து பணிமனை, நீதிமன்றம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பலன்களை தொகுதி மக்கள் பெற்றுள்ளனர்.

    கோரிக்கைகள்

    கந்தர்வக்கோட்டை பகுதியில் அதிகம் விளையும் பணப்பயிரான முந்திரிக்கு அரசு தொழிற்சாலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

    சமீபத்தில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் கந்தர்வக்கோட்டை பகுதிக்கு காவேரி தண்ணீர் கிடைக்குமா, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது பொதுமக்களின் சந்தேகமாக இருந்து வருகிறது.
    விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள கோங்குடிபட்டியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் பாலசுப்பிரமணி (வயது 35). அதே ஊரைச் சேர்ந்த பிச்சை மகன் ராஜேந்திரன்(50). இருவரும் திருச்சி மாவட்டம் பாத்திமா நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் கட்டிட தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலுப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    விராலிமலை அருகே உள்ள மேலபச்சகுடி கலிங்கி பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், கட்டிட தொழிலாளர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்பிரமணி, ராஜேந்திரன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெரால்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணமேல்குடி அருகே மணல் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணமேல்குடி:

    மணமேல்குடியை அடுத்த இடையாத்திமங்கலம் பகுதியில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரியின் டிரைவர் ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை ஊராட்சியை சேர்ந்தது, குளப்பன்பட்டி கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி மட்டுமே உள்ளது. அதுவும் இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. அங்கு சென்றுதான் தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது.

    ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றாலும் அங்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை குளப்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அப்பகுதி பெண்கள், குளப்பன்பட்டியில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு, அதிகாரிகள் தேர்தல் பணியில் இருப்பதால் அவர்களிடம் கலந்து பேசி உங்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி அளித்தார். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×