என் மலர்
புதுக்கோட்டை
- பெண்கள் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
- கல் குவாரியை மூடக்கோரி
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியால் அந்த பகுதியை சுற்றியுள்ள 8-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதால் உடனடியாக அந்த கல் குவாரியை மூட வேண்டும் என்று கூறி கிராம மக்கள் போராடி வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த கல்குவாரி இயங்கி வருவதால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த கிராமத்தின் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று தமிழக முதல்-அமைச்சர் தனி பிரிவிற்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்திலிருந்து பதிவு தபாலில் தமிழக முதல்-அமைச்சருக்கு கல்குவாரியை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்குவாரி இயங்குவதால் ஏற்பட்டுள்ள தீமைகள் குறித்தும் அந்த மனுவில் தெரிவித்து உடனடியாக கல்குவாரியை மூட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர்.
- முதியவரை அரிவாளால் வெட்டிய மகன் கைது செய்யப்பட்டார்.
- சொத்து தகராறில் நடந்த சம்பவம்
புதுக்கோட்டை
வடகாடு அருகே அனவயல் எல்.என்.புரம் ஊராட்சி செங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் பால்சாமி (வயது 65). இவரது தம்பி கந்தையா மகன் சங்கர் (47). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக அவ்வப்போது சங்கர், பால்சாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சங்கர் குடிபோதையில் பால்சாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சங்கர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பால்சாமி தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பால்சாமியை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பால்சாமி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து அறந்தாங்கி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- கிணற்றில் பிணமாக வாலிபர் பிணமாக கிடந்தார்
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராகுல் (வயது 26). இவர் கனடாவில் எம்.பி.ஏ. படித்து வந்தார். இந்நிலையில் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுமுறையில் புதுக்கோட்டைக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஆலங்குடி நகரில் உள்ள அவரது பாட்டி நடேசன் மனைவி மங்களம் வீட்டிற்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தார். பின்னர் வீட்டில் ராகுல் தூங்கினார். இந்நிலையில் நேற்று காலையில் மங்களம் எழுந்து ராகுலை தேடிய போது அவரை காணவில்லை. அப்போது வீட்டில் உள்ள கிணற்றில் பார்த்த போது, ராகுல் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த மங்களம் கதறி அழுதார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் ஆலங்குடி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி ராகுலின் உடலை மீட்டு வெளிேய கொண்டு வந்தனர். பின்னர் பிேரத பரிசோதனைக்காக ராகுல் உடலை போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு மணி நேரம் தாமதமாக டெமு ரெயில் சென்றது
- என்ஜின் கோளாறு காரணமாக
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வழியாக விருதுநகர் செல்லும் பயணிகள் ரெயில் என்ஜின் கோளாறு காரணமாக நேற்று புதுக்கோட்டையில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக விருதுநகருக்கு டெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் புதுக்கோட்டையில் இருந்து தினமும் மாலை 4.50 மணிக்குப் புறப்படும். இந்நிலையில், நேற்று திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த டெமு ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
- பொதுமக்களிடமிருந்து 469 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்
- குறைதீர்நாள் கூட்டம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 469 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியரகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர் நலவிடுதிகளில் 2021-2022 ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ், பரிசுத் தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலரகள் கலந்துகொண்டனர்.
- சாலை விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்
- காய்கறிகள் ஏற்றி வந்த போது விபத்து
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அருகே காய்கறி ஏற்றி வந்த லோடு ஆட்டோ புளிய மரத்தில் மோதியதில் டிரைவர் உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தை சேர்ந்தவர் சின்னய்யா மகன் ராஜீவ் காந்தி (வயது 36). டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் முருகானந்தம் (26).
இவர்கள் இருவரும் இன்று காலை திருச்சியில் இருந்து ஊரணிபுரத்திற்கு காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருதனர். வாகனத்தை ராஜூவ் காந்தி ஒட்டிவந்தார். வாகனம் கந்தர்வகோட்டை அருகே வடுகப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வந்த போது எதிர் பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இதில் ராஜீவ் காந்தி , முருகானந்தம் காயத்துடன் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்த கிராம மக்கள் இருவரையும் மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக இருவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பாக கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இறந்த கணவரின் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவியும் உயிரிழந்தார்.
- இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள துவரவல் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 31). இவரது மனைவி வினிதா(25). 3 ஆண்டுகளுக்க முன் திருமணமான இவர்களுக்கு 2 வயது மகள், 7 மாத மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப த கராறு காரணமாக திருநாவுக்கரசு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருநாவுக்கரசை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்க பிறகு திருநாவுக்கரசு உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஊர் முச்சந்தியில் உடல் இறக்கிவைக்கப்பட்டபோது, அங்கு மனைவி வினிதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது வினிதா திடீரென மயங்கி விழுந்தார்.இதனை அடுத்து கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வினிதா, ஏற்கனே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவரின் உடலை பார்த்த மனைவியும் ம யங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சாலையின் குறுக்கே கம்புகளை ஊன்றி
- பேரூராட்சி வாகனம் சிறைப்பிடிக்கப்பட்டது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனி சாலையானது செரியலூர் இணைப்புச்சாலையாக உள்ளது. இங்கு புதிய சாலை அமைக்க கடந்த ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணிகள் எதுவும் நடைபெறாததால் அப்பகுதியைசேர்ந்த பொது மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்தனர்.
ஆனாலும் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை பர்மா காலனி மக்கள் சாலையின் நடுவில் கற்களை குவித்தும், கம்புகளை ஊன்றியும் அடைப்பு ஏற்படுத்தியதோடு, பேரூராட்சி பணியாளர்களையும், வாகனத்தையும் சிறைப்பிடித்தனர்
பேரூராட்சி பணியாளர்கள் வாகனத்தில் சென்று அப்பகுதியில் உள்ள குப்பைகளை எடுத்து வெளியில் வர முடியாமல் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்
- கீரமங்கலத்தில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 21 கி.மீ. தொலைவிளான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கீரமங்கலம் சிவன் கோவில் அருகே தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார். அங்கிருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், நகரம், குளமங்கலம் வழியாக மீண்டும் கீரமங்கலத்தை அடைந்தது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 8 வயதுக்கும் மேற்பட்ட 400 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- கீரனூர் அருகே செயல்பட்டு வருகிறது
- கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்மாசத்திரம் ஊராட்சி கோப்பிலிக்காட்டில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி, கிரஷர் செயல்பட்டு வருகின்றன. கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்தக் குவாரியில் கற்களை உடைப்பதற்கு வைக்கப்படும் வெடிகளினால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மேலும், நீர்நிலைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் தூசு படிகிறது. குவாரியைச் சுற்றிலும் 7 கிராமங்களில் விவசாயமும் செய்ய முடியவில்லை. குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிகளினால் மக்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது.
எனவே, இந்த கல்குவாாயை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அரசு அலுவலர்களிடம் மனு அளித்து வருகின்றனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் ஊழல் ஒழிப்பு பாசறையின் மாவட்டச் செயலாளர் தலைமையில் அம்மாசத்திரம் விலக்கில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் கீரனூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 2 நாட்களுக்கு தனியார் குவாரி செயல்படாது. அதற்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் குவாரி ஆய்வு செய்யப்படும். அதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 20 பாக்கெட் பறிமுதல் செய்தனர்
புதுக்கோட்டை
விராலிமலை பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் விராலிமலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாமணி தலைமையிலான போலீசார் விராலிமலை அம்மன் கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மளிகை கடையில் குமரன் நகரை சேர்ந்த ஏழுமலை (வயது 62) என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அன்னவாசல் போலீசார் மாங்குடி கடைவீதியில் ரோந்து சென்றனர். அப்போது அம்மாபட்டிணத்தை சேர்ந்த இப்ராகீம் (43) என்பவரிடம் இருந்து 20 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை துணை மின் நிலையத்தை சார்ந்த ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், சார்லஸ் நகர், கே.கே.சி. கல்லூரி, லட்சுமி நகர் 1-ம் வீதி, லட்சுமி நகர் 2-ம் வீதி ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இதேபோல் பாக்குடி துணை மின்நிலையத்தை சார்ந்த புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது என இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து தெரிவித்துள்ளார்."






