என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
- கீரனூர் அருகே செயல்பட்டு வருகிறது
- கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்மாசத்திரம் ஊராட்சி கோப்பிலிக்காட்டில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி, கிரஷர் செயல்பட்டு வருகின்றன. கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்தக் குவாரியில் கற்களை உடைப்பதற்கு வைக்கப்படும் வெடிகளினால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மேலும், நீர்நிலைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் தூசு படிகிறது. குவாரியைச் சுற்றிலும் 7 கிராமங்களில் விவசாயமும் செய்ய முடியவில்லை. குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிகளினால் மக்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது.
எனவே, இந்த கல்குவாாயை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அரசு அலுவலர்களிடம் மனு அளித்து வருகின்றனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் ஊழல் ஒழிப்பு பாசறையின் மாவட்டச் செயலாளர் தலைமையில் அம்மாசத்திரம் விலக்கில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் கீரனூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 2 நாட்களுக்கு தனியார் குவாரி செயல்படாது. அதற்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் குவாரி ஆய்வு செய்யப்படும். அதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






