என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி புதுப்பேட்டையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் ஊராட்சி புதுப்பேட்டை கிராம மக்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்(100 நாள் வேலை) கீழ் நான்கு நாட்கள் வேலை பார்த்ததாகவும், ஆனால் தங்களது வங்கிக் கணக்கில் 2 நாள் வேலைக்கான ஊதியம் மட்டுமே வந்துள்ளது என்றும், மீதி 2 நாள் ஊதியம் வரவில்லை என்றும் கூறினர். மேலும் இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் தங்களை அவமரியாதையாக நடத்தியதாக கூறி புதுப்பேட்டை கிராம மக்கள் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் அகரம் சீகூர் - பெரம்பலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது ஊராட்சி செயலாளரும், துணை வட்டார வளர்ச்சி அதிகாரியும் சேர்ந்து தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர். மறியலால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பின்னலாடை தொழிலுக்கு பருத்தி விளைச்சல், பஞ்சு உற்பத்தி, நூல் தயாரிப்பு ஆகியவை அடிப்படையாகும்.
    திருப்பூர்:

    பருத்தி எடுக்க ஊரக திட்ட பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று சைமா கோரிக்கை விடுத்துள்ளது. 

    இதுகுறித்து சைமா சங்கத்தின் தலைவர் வைகிங் ஈஸ்வரன், தமிழக முதல் - அமைச்சர், விவசாய துறை அமைச்சர், ஊரக வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    பின்னலாடை தொழிலுக்கு பருத்தி விளைச்சல், பஞ்சு உற்பத்தி, நூல் தயாரிப்பு ஆகியவை அடிப்படையாகும். பருத்தி விளைச்சலை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

    பருத்தி உற்பத்தியை பெருக்குவதன் மூலமாக தட்டுப்பாடு நீங்கும். இந்த சூழ்நிலையில் பருத்தி விவசாயிகளின் தகவலின்படி விளைச்சலை அதிகப்படுத்துவது சாத்தியமானாலும் பருத்தி செடியில் இருந்து பஞ்சு எடுப்பதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. 

    தமிழக நிதி அமைச்சர் அறிவிப்பின்படி 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 150 நாட்களாகவும், தினசரி கூலியை உயர்த்தியும் வழங்கப்போவதாக செய்தி உள்ளது. 

    150 நாட்களாக உயர்த்தும்போது பருத்தி சாகுபடிக்கும், பருத்தி எடுப்பதற்கும் தொழிலாளர்களை அனுப்புமாறு விதிகளை மாற்ற வேண்டும். நூல் உற்பத்தி செய்யும் மில்கள் 50 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. ஆனால் நமது தேவைக்கு 5 சதவீதம் கூட பருத்தி விளைவதில்லை. 

    பருத்தி எடுப்பதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
    வேப்பந்தட்டை அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டியில் சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் கள்ளப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது குடிநீர் கிணறு அருகே கள்ளப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 35) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 7 லிட்டர் சாராயம் மற்றும் மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    மாங்காடு அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த நெல்லிதோப்பு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 24), இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கவுசல்யா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தியாகராஜன் வீட்டில் இருந்த அறையில் தூக்கில் தொங்குவதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்துபோன தியாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் தியாகராஜன் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்கியதில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் மாங்காடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இறந்துபோன தியாகராஜனுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாகவும் சமீபகாலமாக இருவரும் பார்க்கும் போதெல்லாம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் இருவரும் எதிரெதிராக வேட்பாளர்களுக்கு வேலை செய்ததாகவும் அதன் காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் ஏற்படுத்திய மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் மாங்காடு போலீசில் புகார் அளிக்க வந்தனர். போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து மாங்காடு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி யுவராணி (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீதர் மேலமாத்தூரில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். யுவராணி பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீதர் பால் வாங்குவதற்காக வெளியே சென்றபோது, யுவராணி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார். பால் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து ஸ்ரீதர், அதைக்கண்டு உடனடியாக யுவராணியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் யுவராணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக யுவராணியின் தந்தை செல்லையா கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில வருடங்களாக யுவராணிக்கு கடுமையான வயிற்று வலி இருந்து வந்ததாகவும், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியடைந்த அவர், அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டதாகவும், விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    தா.பழூர் ஒன்றியம் முழுவதும் சிறுசிறு குளங்கள் மற்றும் ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி அணைக்கு செந்துறை மற்றும் அரியலூர் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் அணையின் மொத்த உயரமான 4.75 மீட்டர் உயரத்தில் 4.47 மீட்டர் உயரத்திற்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் சுத்தமல்லி அணையின் முழு கொள்ளளவான 226.8 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 365 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து ஏற்கனவே ஸ்ரீபுரந்தான் பெரிய ஏரி, கோவை தட்டை ஏரி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஏரிகள் நிறைந்து விட்டன. எனவே உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 175 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக பொன்னார் பிரதான கால்வாயில் இரண்டு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிந்தாமணி ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு வருகிறது. குறிச்சி மதகில் பொன்னர் தண்ணீரும், சிந்தாமணி ஓடை தண்ணீரும் ஒன்றாக கலந்து குறிச்சி கலிங்கு வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு திருப்பி விடப்படுகிறது.

    தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளான காசுடையான் ஏரி, அணைக்குடி ஏரி, சித்தேரி, சுக்கிரன் ஏரி மற்றும் பூவோடை ஆகிய ஏரிகள் அதன் முழு கொள்ளளவில் 85 முதல் 90 சதவீத அளவிற்கு நிரம்பி உபரி நீர் செங்கால் ஓடை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு திருப்பி விடப்படுகிறது.

    தா.பழூர் ஒன்றியம் முழுவதும் சிறுசிறு குளங்கள் மற்றும் ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
    பெரம்பலூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 359 இடங்களிலும் 9-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன. முகாமில் கொரோனா கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. இதுவரை தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்து கொண்டு தவணை நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டு சென்றனர். மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவும், அரியலூர் மாவட்டத்தில் ரமணசரஸ்வதியும் பார்வையிட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 13 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 881 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    ஆலப்புழா அருகே தன்னை தாக்க வந்தவர்களை வீசி கொல்ல முயன்ற போது வெடிகுண்டு வெடித்து ரவுடி பலியானார்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காத்த நாடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(வயது30). பிரபல ரவுடியான இவர் மீது கேரளாவில் உள்ள பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேலும் இவரது தலைமையில் ரவுடி கும்பல் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

    அருண்குமார் தலைமையிலான ரவுடி கும்பலுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. பல தடவை இரு கும்பல்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

    இந்த நிலையில் அருண்குமார் நேற்று மாலை தனது நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர் கோஷ்டியினர் பயங்கர ஆயுதங்களுடன் அருண்குமாரின் வீட்டிற்குள் புகுந்தனர்.

    அவர்கள் நேராக அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியான அருண்குமார் என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த வெடிகுண்டுகளை எடுத்து கொண்டு வெளியில் வந்து எதிர் கோஷ்டியினர் மீது வீச முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு அருண்குமாரின் கையில் இருந்தபோதே வெடித்து விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் அலெக்ஸ் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    வெடிகுண்டு வெடித்ததால் பயந்து போன மற்றொரு ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய அலெக்சை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடிக்கு வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது, என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


    தொடர் மழையின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 40 ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி, கொட்டரை ஆகிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரிநீர் வெளியே செல்கிறது. மருதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், 32 ஏரிகள் நிரம்பிய நிலையில், தற்போது மேலும் வெங்கலம் பெரிய ஏரி, அரணாரை பெரிய ஏரி, செஞ்சேரி ஏரி, தேனூர் ஏரி, பெரம்பலூர் பெரிய ஏரி, பெரம்பலூர் சிறிய ஏரி, சிறுவாச்சூர் ஏரி, கண்ணப்பாடி ஏரி ஆகிய 8 ஏரிகள் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையினால் நிரம்பி, உபரிநீர் மறுகாலில் பாய்ந்து செல்கிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 40 ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் நேற்று காலை ஏரிகளில் சிறப்பு வழிபாடு நடத்தி, தண்ணீரை பூக்கள் தூவி மரியாதை செலுத்தி வரவேற்றனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டும், சிலர் உற்சாக குளியலிட்டும் செல்கின்றனர். மேலும் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும், குளங்களும் நிரம்பி வருவதால் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வயல்களில் விவசாய கூலித்தொழிலாளர்கள் குலவையிட்டு பாட்டு பாடி நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். நிரம்பிய ஏரிகளின் கரையோரத்தில் உள்ள வயல்களிலும், உபரி நீர் செல்லும் ஓடைகளின் ஓரத்தில் உள்ள வயல்களிலும் தண்ணீர் புகுந்ததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதேபோல் நேற்று மாலை நேரத்தில் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- செட்டிகுளம்-64, பாடாலூர்-24, புதுவேட்டக்குடி-2, பெரம்பலூர்-12, கிருஷ்ணாபுரம்-32, தழுதாழை-14, வேப்பந்தட்டை-42.
    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வயிற்று வலி காரணமாக மனவேதனை அடைந்த அரசு பஸ் நடத்துனர் தற்கொலை செய்து கொண்டார்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள கீழகரம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (வயது 46). இவர் நன்னிலம் கிளை தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது.

    இதனால் மனவேதனை அடைந்த மனோகரன் எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் இறந்தார்.

    இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மங்களமேடு அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள வசிஷ்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி அழகம்மாள் (வயது 75). தற்போது இவர்கள் வசிஷ்டபுரம் ஊராட்சியை சேர்ந்த ரெட்டிகுடிக்காடு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை அழகம்மாள், விறகுகள் சேகரிக்க வெள்ளாற்றுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தொழுதூர் அணைக்கட்டில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் அகரம்சிகூர் வெள்ளாற்றின் இரு கரையிலும் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அழகம்மாள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்.

    இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன் ஆகியோர் திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் வசந்தராஜன், சிறப்பு நிலை அலுவலர் நடராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், கலைஅமுது, பாட்ஷா ஜான் ஆகியோர் ஆற்றில் இறங்கி, ரப்பர் டியூப் போன்றவற்றை பயன்படுத்தி நடு ஆற்றில் தவித்த அழகம்மாளை உயிருடன் மீட்டனர்.

    பின்னர் அழகம்மாள் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ஒரே நாளில் 50 ரூபாய் வரை நூல் விலை உயர்ந்து காணப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வரக்கூடிய சூழ்நிலையில் பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக உள்ளது நூல். 

    ஆனால் கடந்த சில மாதங்களாகவே நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 50 ரூபாய் வரை நூல் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே தொழில்துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பருத்தி ஏற்றுமதி செய்வதை நிறுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்தின்போது நூல் விலை உயர்வால் பின்னலாடை உற்பத்தி நின்று போகும் சூழலில் மீண்டும் கற்கால மனிதன் போல இலை தழைகளை ஆடையாக அணியும் சூழல் ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில் இலை, தழைகளை ஆடையாக அணிந்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
    ×