என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ததால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி, பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியதால் தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மருதையாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பகல் நேரத்தில் மழை பெய்யாமல், இரவு நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது.

    இந்நிலையில் நேற்று காலை அவ்வப்போது விட்டு, விட்டு மழையாக தூறிக்கொண்டிருந்தது. மதியம் 1.15 மணிக்கு திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரைமணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.

    இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு மீண்டும் பெய்ய தொடங்கிய பலத்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இரவிலும் மழை பெய்தது. நேற்று பெய்த மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    ஆனைமடுவு அணையின் வலது மற்றும் இடது பாசன வாய்க்காலில் திறந்துவிட்டால், சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கு வழிவகை ஏற்படுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு அணை நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வினாடிக்கு 110 கனஅடி தண்ணீர் முழுவதும் வசிஷ்ட நதியில் உபரி நீராக திறக்கப்பட்டு வருகிறது. இதனால், வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராமங்களில் உள்ள ஏரி, குளம், தடுப்பணைகள் நிரம்பி விட்டதால், வசிஷ்டநதியில் திறக்கப்படும் உபரிநீர் பயன்பாடின்றி பாய்ந்து சென்று கடலில் கலக்கிறது. எனவே, வாழப்பாடி பகுதி விவசாயிகள் நலன் கருதி, உபரி நீரை வசிஷ்டநதியில் திறந்து விடுவதை நிறுத்தி விட்டு, அணையின் வலது மற்றும் இடது பாசன வாய்க்காலில் திறந்துவிட்டால், சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கு வழிவகை ஏற்படுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால், குறிச்சி, கோணஞ்செட்டியூர், ரங்கனூர், நீர்முள்ளிகுட்டை, கோலத்துகோம்பை, சின்னமநாயக்கன்பாளையம், சந்திரப்பிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், உபரிநீர் பாசன வாய்க்காலில் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு அனுமதி பெற்று வாய்க்காலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. 

    2021-2022-ம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    2021-2022-ம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இம்மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 3 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதியும் என ஆக மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    இவ்விடுதிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் வரும் 30-ந் தேதி மாலை 5மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர், மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    ஆற்காடு அருகே பெட்ரோல் பங்க்கில் தகராறு செய்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 55). அதேப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். நேற்று புதுப்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் 500 ரூபாய் கொடுத்து விட்டு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். பின்னர் பாபுவிடம் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு மீதி பணத்தை தனது தம்பி அருண்குமாரிடம் கொடுத்து விடவும் என பாபுவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வந்த அருண்குமார் அவருடைய அண்ணன் விஜயகுமார் 500 ரூபாய் கொடுத்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதாகவும் மீதி 400 ரூபாய் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.

    இதற்கு விஜயக்குமார் 100 ரூபாய் வாங்கிச்சென்று விட்டதாகவும் மீதி 300 ரூபாய்தான் தர வேண்டும் என பாபு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அருண்குமார் அவரது நண்பர் நேதாஜி ஆகிய இருவரும் பாபுவை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாபு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், நேதாஜி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தவர் ரவிச்சந்திரன்(வயது 55). லாடபுரத்தை சேர்ந்த இவர் தற்போது பெரம்பலூரில் வடக்கு மாதவி சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மாலை ரவிச்சந்திரன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான லாடபுரத்திற்கு சென்றார். 

    குரும்பலூரை கடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக ரவிச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் ஒருவர், கடன் பிரச்சனையில் சிக்கி இருக்கிறாராம்.
    தமிழில் இயக்குனராக அறிமுகமானவர், தயாரிப்பாளராக மாறி தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் வந்து கொண்டு இருக்கிறதாம். மேலும் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். 

    இயக்குனர் ஏன் பல படங்களில் நடிக்க கமிட்டாகிறார் என்று விசாரித்தால், அவருக்கு பல கடன் பிரச்சனைகள் இருக்கிறதாம். அந்த கடனை அடைக்கத்தான் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறாராம். சம்பளத்தில் கால் பங்குதான் அவருக்கு கிடைக்கிறதாம். மத்த பணமெல்லாம் கடனுக்கே செல்கிறதாம்.
    பெரம்பலூர் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலை ஒடச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 56). கட்டிட மேஸ்திரியான இவா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் தென்னமநாடு தெற்குதெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி தனகுமாரி (வயது 33). சம்பவத்தன்று இவர் தென்னமநாட்டில் இருந்து தஞ்சைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். தஞ்சை ரெயிலடியில் இறங்கிய தனகுமாரி தான் வைத்திருந்த ஹேண்ட்பைக்கை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த சிறிய பையையும் அதில் இருந்த 5 பவுன் தங்க நகையையும் காணாதது கண்டு திடுக்கிட்டார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் பையை அபேஸ் செய்தது அவருக்கு தெரியவந்தது.

    இது குறித்து தனகுமாரி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு அருகே காதலியுடன் செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலபத்தை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வபசுபதி (வயது19).

    இவர் ஐ.டி.ஐ.படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பசுபதி ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

    இதில் மனமுடைந்த செல்வ பசுபதி நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் அவரை காணாமல் தேடிய பெற்றோர், அவர் கிணற்றில் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 45). இவருக்கு ரூபாதேவி என்ற மனைவியும், ஹரி விக்னேஷ் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். ஆறுமுகமும், ரூபாதேவியும் பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். ஹரி விக்னேஷ் குரும்பலூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், நந்தினி தனியார் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.

    கணவன்-மனைவி இருவரும் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்ற விட்டனர். ஹரி விக்னேஷ் கல்லூரிக்கும், நந்தினி பள்ளிக்கும் சென்று விட்டனர்.

    ஹரி விக்னேஷ் கல்லூரி முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஹரி விக்னேஷ் தனது தாய்க்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில், ரூபாதேவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததும், மேலும் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.7,500 ஆகியவை திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே இன்று காலை மைல் கல் மீது கார் மோதிய விபத்தில் 2 ஐய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதையடுத்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் யாத்திரை சென்று வருகிறார்கள்.

    அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா கொளம்பாக்கம் மற்றும் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் 6 பேர் ஒரு காரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிமலைக்கு புறப்பட்டனர். காரை செய்யூரை சேர்ந்த கணேசன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.

    வழியில் பல்வேறு கோவில்களுக்கு சென்ற அவர்கள் நேற்று ஐய்யப்பனை தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்று மாலை அவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். நள்ளிரவில் திருச்சி வந்தடைந்த அவர்கள் சற்று ஓய்வெடுத்துவிட்டு, இன்று அதிகாலை அங்கிருந்து கிளம்பினர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் பிரிவு பாதை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மைல் கல் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா கொளப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த் (27), சூர்யா (40), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் (50), மதுராந்தகத்தை சேர்ந்த செல்வமணி (25), லட்சுமணன் (30), கார் டிரைவர் கணேசன் (40) ஆகியோர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபரிமலைக்கு சென்று திரும்பிய பக்தர்கள் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.
    பொதுப்பணித்துறையில் சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக் கப்பட்டுள்ளது. இந்த புதிய மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் இடம் பெறுகிறது.

    கோவை பொதுப்பணித்துறை மண்டலத்தில் பணியாற்ற புதிய பணியிடங்களையும் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    ஏற்கனவே சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மண்டலங்கள் உள்ள நிலையில் கோவை மண்டலமும் இப்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த மறு சீரமைப்புக்கு பிறகு பொதுப்பணித்துறையின் கீழ் மொத்தம் 4 மண்டல அலுவலகங்கள், 13 வட்ட அலுவலங்கள், 56 கோட்ட அலுவலகங்கள் மற்றும் அதை சார்ந்த உபகோட்ட அலுவலகங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்கள் இயங்கும்.
    ×