என் மலர்
செய்திகள்

உபரிநீரை பாசன வாய்க்காலில் திறக்கக் கோரி ஆனைமடுவு அணையை முற்றுகையிட்ட விவசாயிகள்
வாழப்பாடி:
சேலம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு அணை நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வினாடிக்கு 110 கனஅடி தண்ணீர் முழுவதும் வசிஷ்ட நதியில் உபரி நீராக திறக்கப்பட்டு வருகிறது. இதனால், வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராமங்களில் உள்ள ஏரி, குளம், தடுப்பணைகள் நிரம்பி விட்டதால், வசிஷ்டநதியில் திறக்கப்படும் உபரிநீர் பயன்பாடின்றி பாய்ந்து சென்று கடலில் கலக்கிறது. எனவே, வாழப்பாடி பகுதி விவசாயிகள் நலன் கருதி, உபரி நீரை வசிஷ்டநதியில் திறந்து விடுவதை நிறுத்தி விட்டு, அணையின் வலது மற்றும் இடது பாசன வாய்க்காலில் திறந்துவிட்டால், சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கு வழிவகை ஏற்படுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால், குறிச்சி, கோணஞ்செட்டியூர், ரங்கனூர், நீர்முள்ளிகுட்டை, கோலத்துகோம்பை, சின்னமநாயக்கன்பாளையம், சந்திரப்பிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், உபரிநீர் பாசன வாய்க்காலில் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு அனுமதி பெற்று வாய்க்காலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.






