search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய காரை படத்தில் காணலாம்.
    X
    விபத்தில் சிக்கிய காரை படத்தில் காணலாம்.

    பெரம்பலூர் அருகே விபத்து- மைல் கல் மீது கார் மோதி 2 ஐய்யப்ப பக்தர்கள் பலி

    பெரம்பலூர் அருகே இன்று காலை மைல் கல் மீது கார் மோதிய விபத்தில் 2 ஐய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதையடுத்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் யாத்திரை சென்று வருகிறார்கள்.

    அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா கொளம்பாக்கம் மற்றும் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள் 6 பேர் ஒரு காரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிமலைக்கு புறப்பட்டனர். காரை செய்யூரை சேர்ந்த கணேசன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.

    வழியில் பல்வேறு கோவில்களுக்கு சென்ற அவர்கள் நேற்று ஐய்யப்பனை தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்று மாலை அவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். நள்ளிரவில் திருச்சி வந்தடைந்த அவர்கள் சற்று ஓய்வெடுத்துவிட்டு, இன்று அதிகாலை அங்கிருந்து கிளம்பினர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் பிரிவு பாதை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மைல் கல் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா கொளப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த் (27), சூர்யா (40), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் (50), மதுராந்தகத்தை சேர்ந்த செல்வமணி (25), லட்சுமணன் (30), கார் டிரைவர் கணேசன் (40) ஆகியோர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபரிமலைக்கு சென்று திரும்பிய பக்தர்கள் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×