என் மலர்
பெரம்பலூர்
- மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய பணிகள்
பெரம்பலூர்:
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் நலன்காக்கும் மகத்தான அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு திகழ்கின்றது. மக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து அவற்றிற்கு தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் தனிக்கவனம் செலுத்தி செயல்படவேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் பெரம்பலுார் மாவட்டத்தில் மக்களின் தேவை அறிந்து அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.1.13 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முடிவுற்ற பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், பெரம்பலுார் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிகுழு துணைத்தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கருணாநிதி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னப்பையன், செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமாந்துறை ஒன்றிய குழு உறுப்பினர் பெரு. கருப்பையா , ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு, கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், அசூர் செல்வி முருகேசன்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது
- கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களிலும் பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடையோர், மனவளர்ச்சி குன்றியோர், உடல் இயக்க குறைபாடுடையோர் மற்றும் பல்வேறு குறைபாடுகளை உடையோர்களுக்கான அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், யூ.டி.ஐ.டி. அட்டை பதிவு செய்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கென பிரத்யேகமாக சிறப்பு மருத்துவமுகாம் எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கி நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், முடநீக்கியல் வல்லுனர் ஜெயராமன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் இன்றும் (புதன்கிழமை), மலையாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளையும் (வியாழக்கிழமை), பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வருகிற 18-ந் தேதியும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-ந் தேதியும், பாண்டகப்பாடி மானிய தொடக்கப்பள்ளியில் 23-ந்தேதியும், அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24-ந் தேதியும், கீழமாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25-ந்தேதியும், இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29-ந்தேதியும், காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 30-ந்தேதியும் நடக்கிறது. மேலும் டிசம்பர் மாதத்திலும் சிறப்பு மருத்துவமுகாம்கள் தொடர்ந்து நடக்கிறது. குறிப்பிட்ட நாட்களில் மாற்றுத்திறனாளிகள் தங்களது போட்டோ-6 மற்றும் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று தங்கள் அருகாமையில் நடைபெறும் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் நல அலுவலர் ராமு, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, குழந்தைகள் நல அறக்கட்டளையை சேர்ந்த முரளீஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் இம்மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
- சுங்கச்சாவடி ஊழியர்கள் கையில் தீச்சட்டி ஏந்தி போராட்டம் நடைபெற்றது
- 46-வது நாளான தொடர்ந்து நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 46-வது நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கையில் தீச்சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்."
- கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்
- மகன் வீட்டிலேயே தங்கி வசித்துவந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த எசனை தெற்குத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா(வயது 70). இவரது மனைவி சின்னம்மாள் இறந்துவிட்டதால், தனது மகன் செல்வகுமாரின் வீட்டிலேயே தங்கி வசித்துவந்தார். இந்த நிலையில் சுப்பையா சம்பவத்தன்று இரவு வீடுதிரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் காட்டுமாரியம்மன் கோவில் அருகே உள்ள சுந்தரம் என்பவருக்கு சொந்தமான வயல்காட்டில் உள்ள கிணற்று மேட்டில் சுப்பையாவின் காலணிகள் இருந்ததை, நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்வகுமாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனே பெரம்பலூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சுப்பையா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது.
- பெரம்பலூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
- பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை இருக்காது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (17ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை மற்றும் கிராமிய பகுதிகளான ஆலம்பாடி, அருமடல், எளம்பலூர் இந்திரா நகர், தண்ணீர்பந்தல், காவலர் குடியிருப்பு, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (17ம்தேதி) காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
- தார் சாலை அமைக்க கோரி மனு அளிக்கப்பட்டது.
- மண் பாதை சேதமடைந்து மோசமாக காட்சியளிக்கிறது.
பெரம்பலூர்
வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை கிராம ஊராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட புதுப்பட்டி காட்டுக்கொட்டைகையை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், புதுப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயிகளில் 60 பேர் தங்களது விவசாய நிலங்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நாங்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் தொண்டமாந்துறை-விஜயபுரம் சாலையின் அருகே உள்ள அரசமர பிரிவு சாலையில் இருந்து பச்சைமலை நோக்கி செல்லும் பெரியசாமி கோவில் வரை 2 கிலோ மீட்டர் தூரமுள்ள மண் பாதை சேதமடைந்து மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
- கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- வகுப்புகளுக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பு
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களாக 28 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 24 பேர் நேற்று காலை கல்லூரியில் வகுப்புகளுக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், அரசாணை எண் 246, 247 மற்றும் 248 ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் காலை முதல் வகுப்பறைக்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே ஒரே இடத்தில் அமர்ந்து பணி புறக்கணிப்பு செய்தனர்.
- மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.4500 போதுமானதல்ல. எனவே பணி நிரந்தரம் செய்து, குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்பு, பயணப்படி வழங்க வேண்டும். பணிச் சுமையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முடிவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாவை சந்தித்து மனு அளித்தனர்.
- சுய வேலை வாய்ப்பு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
- 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் இலவசமாக கட்டிட வண்ணப்பூச்சு பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மைய இயக்குநர் ஆனந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் இலவசமாக கட்டிட வண்ணப்பூச்சு பயிற்சி வரும் 21 -ந் தேதி முதல் அளிக்கப்படவுள்ளது.
பயிற்சியில் பெயின்டிங் பற்றிய ஒரு அறிமுகம் ,பெயின்டிங் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் அதன் முக்கியத்துவம்,அதன் வகைகள் ,கட்டிடம் மரம் மற்றும் உலோகம் ஆகியவற்றில் பெயிண்டிங்கிற்கு முன் செய்யப்பட வேண்டிய வேலைகள், மேற்பரப்பை தயார் செய்யும் முறைகள், ப்ரைமர், எனாமல் புட்டி மற்றும் சிமெண்ட் புட்டி ஆகியவற்றை பூசும் முறைகள், பெயின்டிங் செய்யும் பரப்பை கணக்கிட்டு அதற்கு ஆகும் செலவுகளை நிர்ணயிப்பது ஆகியன பற்றி துறை சார்ந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.
பயிற்சியின் கால அளவு 10 நாட்களாகும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ள ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல் மற்றும் 3 போஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் வரும் 18ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,பாடாலூர் அருகே உள்ளது கூத்தனூர் கிராமம்.இந்த கிராமத்தில் உள்ள சங்கிலியாண்டவர் சுவாமி கோயிலில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டி கெடா வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.அதன்படி நடப்பாண்டு கூத்தனூர் காட்டுப்பகுதியில் உள்ள சங்கிலியாண்டவர் சுவாமி கோயிலுக்கு பொங்கல் வைத்தும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு செய்தனர்.
முன்னதாக நாட்டா ர்மங்கலம் முத்தையா கோயில் செல்லும் சாலையில் உள்ள வெள்ளிமலை கிழக்கே உள்ள பாறையில் குடி அழைப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கூத்தனூர் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- சுங்கச்சாவடி ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்
- அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாகத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் நேற்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் நிற்கிறோம். மீண்டும் பணியில் அமர்த்தும்வரை போராடுவோம் என்று கூறினர்.






