என் மலர்tooltip icon

    நீலகிரி

    • மைதானம் தற்போது மாவட்ட விளையாட்டுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
    • பொதுமக்களும் இந்த மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள மவுண்ட் பிளசண்ட பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான சுமாா் ஒரு ஏக்கா் நிலம் இருந்தது. அதனை அங்கு உள்ள தனியாா் டென்னிஸ் கிளப் நிா்வாகம் ஆக்கிரமித்து விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இதைத் தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி தலைமையில் வருவாய்த் துறையினா் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் விளையாட்டு மைதானத்துக்காக ஆக்கிரமித்து வைத்திருந்த 1 ஏக்கா் நிலத்தை மீட்டனா். அதன் தற்போதைய மதிப்பு ரூ.9 கோடியாகும்.

    இந்த மைதானம் தற்போது மாவட்ட விளையாட்டுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் பொதுமக்களும் இந்த மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்
    • தமிழ்நாடு முழுவதும் 5,000 பவா் டில்லா்கள், விசைகளையெடுப்பான் கருவிகள் வழங்கியதாக பேட்டி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் வட்டம், இளித்தொரை கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 11 விவசாயிகளுக்கு ரூ.11.61 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பவா் டில்லா், பவா் வீடா்கள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சா் ராமசந்திரன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) கீா்த்தி பிரியதா்சினி முன்னிலை வகித்தாா். குன்னூா் வருவாய் கோட்டாட்சியா் பூஷ்ணகுமாா், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளா் பாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    பின்னர் அமைச்சா் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக விவசாயத் துறைக்காக தனி பட்ஜெட் அறிவித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்வதால் விளைபொருட்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது.

    விவசாயத்தை பெருக்க வேண்டும் என்றால் எந்திரங்கள் பயன்பாடு அவசியம். எனவே தமிழ்நாடு முழுவதும் 5,000 பவா் டில்லா்கள், விசைகளையெடுப்பான் கருவிகள் ஆகியவை ரூ.41.23 கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

    மேலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சிறு-குறு விவசாயிகளுக்கு, விசை களையெடுப்பான் கருவிகள் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள மானியத்துடன் கூடுதலாக 20 சதவீதம் அதிகமாக வழங்கப்படுகின்றன. குன்னூா் வட்டத்தில், 8 விவசாயிகளுக்கு பவா் டில்லா்கள், 3 பேருக்கு பவா் வீடா்கள் என மொத்தம் ரூ.11.61 லட்சம் மதிப்பில் மானியத்துடன் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

    • கோத்தகிரியை சேர்ந்த இளம்பெண் ஜெயஸ்ரீ என்பவர் தென்னாப்பிரிக்காவில் விமானப்பயிற்சி முடித்து தற்போது அங்கேயே விமானியாகி உள்ளார்.
    • மலைவாழ் மக்களான படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் விமான பைலட்டாகி சாதனை படைத்துள்ளது அந்த சமுதாய மக்களை பெருமை அடையச் செய்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள மலையோர கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களின் குடும்பத்தில் பலர் கடந்த சில ஆண்டுகளாக மேற்படிப்பு முடித்து, மத்திய-மாநில அரசுகளில் பெரிய, பெரிய பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.

    இந்த வகையில் கோத்தகிரியை சேர்ந்த இளம்பெண் ஜெயஸ்ரீ என்பவர் தென்னாப்பிரிக்காவில் விமானப்பயிற்சி முடித்து தற்போது அங்கேயே விமானியாகி உள்ளார். மலைவாழ் மக்களான படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் விமான பைலட்டாகி சாதனை படைத்துள்ளது அந்த சமுதாய மக்களை பெருமை அடையச் செய்துள்ளது.

    சாதனை படைத்த ஜெயஸ்ரீ கூறியதாவது:-

    படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த நான் கோத்தகிரி பகுதியில் உள்ள நெடுகுளாகுருக்கத்தி கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். என் தந்தை மணி கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். தாய் மீரா இசை ஆசிரியை.

    நான் கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். அப்போது எதிர்காலத்தில் விமானியாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனை நான் என் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர்.

    எங்கள் சமுதாயத்தில் பெரும்பாலான இளம்பெண்கள் வெளியூர் சென்று தங்கி பட்டப்படிப்பு முடிப்பது இல்லை. எனவே உறவினர்கள் பலரும் நான் வெளியூர் சென்று தங்கி மேல்படிப்பு முடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எங்களுக்கு ஜெயஸ்ரீயின் எதிர்கால கனவுதான் முக்கியம் என பெற்றோர் உறுதியாக இருந்தனர்.

    இதனை தொடர்ந்து நான் கோவை பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். ஆனால் எனக்கு அந்த கல்லூரியில் ஏரோநாட்டிகல் பிரிவு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் நான் மனதை திடப்படுத்தி கொண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். இரவும் பகலும் கஷ்டப்பட்டு படிப்பை முடித்தேன்.

    எனக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. அதன்பிறகு நான் கிட்டத்தட்ட பைலட் கனவை மறந்து விட்டேன். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே நான் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தேன்.

    அப்போது தான் எனக்குள் இருந்த பைலட் கனவு மீண்டும் துளிர்விட்டது. இதுகுறித்து நான் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் நான் பைலட் படிப்பு படிக்க சம்மதம் தெரிவித்தனர்.

    எனவே நான் உடனடியாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்று அங்கு உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பைலட் பட்டயப்படிப்பு முடித்தேன். இதன் பயனாக நான் தற்போது விமானியாக வேலைபார்த்து வருகிறேன். தற்போது என்னிடம் பிரைவேட் பைலட் லைசென்ஸ் சான்றிதழ் உள்ளது. அடுத்தபடியாக வர்த்தக பைலட் லைசென்ஸ் படிப்புக்கு தயாராக வேண்டும்.

    நீலகிரியில் படுகர் சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த நான் இன்றைக்கு உலகளவில் சாதனை படைத்து உள்ளேன் என்றால் அதற்கு என் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கம்தான் காரணம்.

    நான் பெண்களுக்கு கூறும் அறிவுரை என்னவென்றால் நீங்கள் படிக்கும்போதே எதிர்காலத்தில் என்னவாக போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதன்படி உங்கள் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் பயணியுங்கள். அப்படி செய்தால் உங்களின் எதிர்கால கனவு நிச்சயம் வசப்படும். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயஸ்ரீ, படுகர் சமுதாயத்தில் விமான பைலட்டாகும் முதல் பெண் என்ற சாதனையையும் படைத்து இருக்கிறார். அவருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    • தேயிலை கொழுந்து இலைகளை காதில் வைத்தும், கைகளை ஏந்தியும் ஆவேச முழக்கம்
    • குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவிப்பு

    ஊட்டி,

    நீலகிரி கோத்தகிரி பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.33 நிர்ணயம் செய்ய கோரியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கோரியும் கடந்த 1-ந் தேதி முதல் நாக்குபெட்டா சீமை படுகர் நலச்சங்கம் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 5-வது நாளான நேற்று உண்ணாவிரத போராட்டத்தை பெத்தளா ஊர் தலைவர் கிருஷ்ணன், 6 ஊர்த்தலைவர் முருகன், பையங்கி தலைவர் மனோகரன், குன்னியட்டி தலைவர் ராஜூ, அட்டவளை தலைவர் ஆண்டி, நாரகிரி சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்ற விவசாயிகள் தேயிலை கொழுந்து இலைகளை காதில் வைத்தும், கைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நீலகிரியில் சிறு, குறு தேயிலை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி இருந்தனர். இதில் பெண்களும் கலந்துகொண்டனர். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல ஊட்டி பகுதியில் உள்ள சோலூர், கள்ளக்கொரை கிராமங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கோத்தகிரி அருகே பெத்தளா, பையங்கி, குன்னியட்டி, அட்டவளை, நாரகிரி கிராமங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • போலீஸ் டி.எஸ்.பி யசோதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • ஊட்டி அரசு கல்லூரியில் இருந்து 200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி ஊட்டி ஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியை ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து தொடங்கி சேரிங்கிராஸ் காந்தி சிலை பகுதி வரை சென்றது. ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். முன்னதாக சாலை பாதுகாப்வை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மசீலன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தேயிலை இலைகளை காதில் தொங்க விட்டு நூதன போராட்டம்
    • ஊட்டியில் உள்ள சோலூர் கள்ளக்கொரை பகுதியிலும் உண்ணாவிரதம் நடக்கிறது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க கோரி அங்கு உள்ள விவசாயிகள் கோத்தகிரியில் நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந்தேதி முதல் உண்ணாவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இங்கு தற்போது 6-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

    கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நேற்று 5-ம்நாள் போராட்டம் நடந்தது. பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பெத்தளா ஊர்தலைவர் கிருஷ்ணன், ஆரூர் தலைவர் முருகன், பையங்கி தலைவர் மனோகரன், குன்னியட்டி தலைவர் ராஜூ, அட்டவளை தலைவர் ஆண்டி, நரிகிரி சந்திரன் ஆகிபோர் தொடங்கி வைத்தனர்.

    5-வது நாள் உண்ணா விரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தேயிலை தழைகளை காதில் மாட்டிக் கொண்டும், கைகளை ஏந்தியும் போராட்ட பந்தலில் அமர்ந்து இருந்தனர்.

    ஊட்டி பகுதியில் உள்ள சோலூர் கள்ளக்கொரை பகுதியிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பெத்தளா, பையங்கி, குன்னியட்டி, அட்டவளை, நரிகிரி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் தோட்டத்தில் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • டேன்டீ தொழிற்சாலையில் தேயிலை கொள்முதல், தரம் பிரித்தல், பேக்கிங், ஏற்றுமதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டனர்
    • ரூ.3.20 கோடி மதிப்பில் மரவீடு உணவக கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க உத்தரவு

    ஊட்டி,

    தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமையில் உறுப்பினர்கள் அப்துல்ச மது, ஆனந்தன், உடுமலை ராதாகிருஷ்ணன், கிரி, கோவிந்தசாமி, பிரகாஷ், பூண்டி கலைவாணன் ஆகியோர்நீலகிரி மாவட்ட த்தில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் குன்னூர் டைகர்ஹில் பகுதியில் உள்ள டேன்டீ தேயிலை தொழிற்சாலைக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் தேயிலை கொள்முதல், உற்பத்தி, தரம் பிரித்தல், பேக்கிங், ஏற்றுமதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் ஊட்டி படகு இல்லத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு ரூ.3.20 கோடி மதிப்பில் மரவீடு உணவக கட்டுமான பணிகளை பார்வையிட்டு, விரைவில் பணிகளை முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினர்.

    பின்னர் சிங்காராவில் 150 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பைக்காரா இறுதிநிலை நீர் மின்நிலையத்திலும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    நீலகிரியில் தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு நடத்தியபோது மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, முதுமலை புலிகள் காப்பக களஇயக்கு நர் வெங்கடேஷ், சட்டசபை பொது நிறுவனங்கள் குழு இணை செயலாளர் பாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் பூஷணகுமார் (குன்னூர்), மகாராஜ் (ஊட்டி), கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், தாசில்தார்கள் கனிசுந்தரம் (குன்னூர்), சரவணக்குமார் (ஊட்டி), டேன்டீ கோட்ட மேலாளர் பினோ, ஊட்டி படகு இல்ல மேலாளர் ஜோசப் வில்லியம்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • குன்னூர் மலைப்பாதையில் மந்தடா என்ற இடத்தில் டிப்பர் லாரி மோதி விபத்து
    • ராஜாவும், 15 வயது சிவசங்கரியும் பலியாயினர். ஓட்டல் உரிமையாளர் மனைவி கைக்குழந்தையுடன் உயிர்தப்பினார்

    ஊட்டி,

    கோவை ஒண்டிபுதூரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அங்குள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் இன்று காலை தான் பணியாற்றும் ஓட்டல் உரிமையாளரின் மனைவி, 15 வயது மகள் சிவசங்கரி, ஒரு மகன் ஆகியோருடன் ஒரு மொபட்டில் ஊட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

    குன்னூர்- ஊட்டி மலைப்பாதையில் மந்தடா என்ற இடத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று மொபட் மீது மோதியது.

    இதில் மொபட் லாரியின் அடியில் சிக்கியது. இந்த விபத்தில் ராஜாவும், 15 வயதான சிவசங்கரியும் பலியானார்கள். ஓட்டல் உரிமையாளரின் மனைவி மற்றும் கைக்குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ஓட்டல் உரிமையாளரின் குடும்பத்தினர் எதற்காக ஊட்டி சென்றனர் என்று தெரியவில்லை. டிப்பர் லாரி வேகமாக வந்ததால் விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25.20 லட்சம் மதிப்பில் 45 பேருக்கும் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
    • மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 55 பேருக்கு ரூ.3.76 லட்சம் மதிப்பிலும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளி யிட்டு உள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்தி றனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகள் நலத்துறை மூலம் கடந்த 7. 5.2021 முதல் 24. 8.2023-ம்ஆண்டுவரை மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.9.38 கோடி மதிப்பில் 1,676 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகையும், கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5.54 கோடி மதிப்பில் 990 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையும், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25.20 லட்சம் மதிப்பில் 45 பேருக்கும் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

    அதேபோல கூடுதல் நிதி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 81 பேருக்கு ரூ.22.68 லட்சம் மதிப்பிலும், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு உள்ள 27 பேருக்கு ரூ.6.48 லட்சம் மதிப்பில் பராமரிப்பு உதவித்தொகை யும், சுயதொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் ரூ.9.13 லட்சம் மதிப்பில் 38 பேருக்கு வங்கிக் கடன் மானிய உதவியும், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 7 பேருக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலும், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.8.68 லட்சம் மதிப்பிலும், மின்களம் ரூ.10 லட்சம் மதிப்பில் 10 பேருக்கு சக்கர நாற்காலியும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் திட்டத்தின்கீழ் 37 பேருக்கு ரூ.29.17 லட்சம் மதிப்பிலும், மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 55 பேருக்கு ரூ.3.76 லட்சம் மதிப்பிலும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3,225 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஜே.பி.காா்டன் குடியிருப்பு பகுதியில் நகராட்சி சாா்பில் 400 மீட்டா் தூரத்துக்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
    • புதிய சாலையை நகா்மன்றத் தலைவா் பரிமளா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா்.

    ஊட்டி,

    கூடலூா் நகராட்சி, 20-வது வாா்டுக்கு உள்பட்ட ஜே.பி.காா்டன் பகுதியில் சாலை வசதி செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கடந்த 12 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனா்.

    இந்த நிலையில் அந்த சாலைக்கான இடம் பதிவு செய்யப்பட்டு நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஜே.பி.காா்டன் குடியிருப்பு பகுதியில் நகராட்சி சாா்பில் 400 மீட்டா் தூரத்துக்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த புதிய சாலையை நகா்மன்றத் தலைவா் பரிமளா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் லீலா வாசு, ஜே.பி.காா்டன் குடியிருப்போா் சங்கத் தலைவா் சிங்காரம், செயலாளா் வினோத்குமாா் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

    பஜாா் அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்தில் படுக தேச கட்சி சாா்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    ஊட்டி,

    ஊட்டி அருகே பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட தேவா்சோலை பஜாா் அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்தில் படுக தேச கட்சி சாா்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    படுக தேச கட்சி நிறுவனத் தலைவரும், பாலகொலா ஊராட்சி துணைத் தலைவருமான மஞ்சை வி.மோகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா்.

    ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் சுகந்தி, தேவா்சோலை அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியா் பிராங்கிளின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முகாமுக்கான ஏற்பாடுகளை பூபதி உள்ளிட்ட தன்னாா்வலா்கள் செய்திருந்தனா்.

    இதற்கான அறிவிப்பை மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் பிரேம் அறிவித்து உள்ளார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், பா.ஜ.க.வின் இளைஞர் அணி மாவட்ட பொதுசெயலாளராக அறிவிக்கபட்டு உள்ளார்

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதல்படி, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆலோசனைபடி இதற்கான அறிவிப்பை மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் பிரேம் அறிவித்து உள்ளார்.

    பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி மாவட்டபொது செயலாளராக பொறுப்பேற்று உள்ள காட்டேரி பிரகாஷ்சுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ×