என் மலர்tooltip icon

    நீலகிரி

    • 2-ம் சீசனின் போது குறைந்த அளவிலான மலர் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்படும்.
    • சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    ஊட்டியில் ஆண்டுதோறும் 2-ம் கட்ட சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி 2 மாதங்கள் நடக்கும்.

    2-ம் சீசனின் போது வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோறும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    முதல் சீசனின்போது, 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் தொட்டிகள் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். 2-ம் சீசனின் போது குறைந்த அளவிலான மலர் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்படும்.

    இந்த முறை 21 ஆயிரத்து 500 தொட்டிகளில் டேலியா, சால்வியா, இன்காமேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், சைக்ளமன், ஜெரேனியம், டெல்பினியம், கொச்சியா, ஆந்தூரியம் போன்ற 70 வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர பல்வேறு அலங்கார செடிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் தொட்டிகள் மாடங்களில் அடுக்கி வைக்கப்படும்.

    பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். இந்த முறை கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்ததால் மலர் பூப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக மாடத்தில் தொட்டிகள் அடுக்கும் பணிகள் கடந்த ஒருவாரமாக மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை கண்டு ரசிப்பதற்காக திறந்து வைக்கப்பட்டது.

    இதனை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கலெக்டர் அருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் அடுக்கி வைக்கப்பட்டு மலர்களை கண்டு ரசித்தும், மலர் அலங்காரங்களையும் பார்வையிட்டனர்.

    குறிப்பாக பல வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த சந்திரயான்-3 விண்கலம் மற்றும் மறுசுழற்சி ஸ்மைலி போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுத்தது.

    சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து, அதன் முன்பு நின்று புகைப் படமும் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தற்போது ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அத்துடன் சீதோஷ்ண நிலையும் இதமாக காணப்படுகிறது. இதனை ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணி கள் மிகவும் அனுபவித்து ரசித்து வருகின்றனர்.

    • அதிரடிப்படையினர் மற்றும் போலீசார், வனத்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • வனத்தையொட்டிய தோட்டங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பாட்டவயல் அருகே கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் உள்ளது.

    இங்கு கம்பலை எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் மலையாளிகள் மட்டுமின்றி, தமிழர்களும் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அங்கு இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சம்பவத்தன்று, இரவு இந்த பகுதிக்கு மாவோயிஸ்டுகள் 6 பேர் சென்றனர். அவர்கள் அங்குள்ள அரசு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    பின்னர் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த பொருட்களையும் சூறையாடி உள்ளனர். அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    பின்னர் வெளியில் செல்லும் போது, அலுவலகத்தின் சுவர் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். கம்பலை தோட்டம், ஆதிவாசிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சொந்தம் என்பன உள்பட பல தகவல்கள் தமிழ் மற்றும் மலையாள மொழி கலந்து எழுதப்பட்டு இருந்தது. மேலும் வந்தவர்கள் மாவோயிஸ்ட் கபினி கொரில்லா குழு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும், கேரள மாநில தண்டர்போல்டு அதிரடிப்படையினர் மற்றும் போலீசார், வனத்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கேரளாவில் அரசு அலுவலகம் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலை அடுத்து அதனையொட்டி உள்ள தமிழக எல்லையான நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லையான கக்குச்சி, நாடுகாணி உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இதுதவிர அதிரடிப்படை போலீசார் தமிழக எல்லைப்பகுதிகளிலும், வனத்தையொட்டிய தோட்டங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
    • சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்ைக விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கேத்தி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லநள்ளி பஜார் பகுதியில் உள்ள கடைகளில் பேருராட்சி செயல் அலுவலர் நடராஜன் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ஒருசில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    கேத்தி பகுதியில் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தினால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கபடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்திற்குள்ளும் வனவிலங்குகள் இரவும் பகலும் தொடர்ந்து நடமாடி வருகின்றன
    • சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடப்பட்டும் எவ்வித பலனும் இல்லை.

     அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 1100 குடியிருப்புகளும் உள்ளன.

    இதுமட்டுல்லாமல் இந்த தொழிற்சாலையின் கட்டுப்பாட்டின் கீழ் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக வெடி மருந்து தொழிற்சாலை வளாகத்திற்குள்ளும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் காட்டெருமைகள், கரடி, சிறுத்தை ஆகிய வனவிலங்குகள் இரவும் பகலும் தொடர்ந்து நடமாடி வருகின்றன

    இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை விடப்பட்டும் எவ்வித பலனும் இல்லை.

    எனவே தாங்கள் இம்மனுவை பரிசீலனை செய்து 2 ஆயிரம் தொழிலாளிகள் மற்றும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அருவங்காடு வெடிமருந்து தொழில் ஒருங்கிணைந்த ஊழியர் நலச்சங்க பொதுச் செயலாளர் அசோகன் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளார். 

    • நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் நுழையும் யானைகளை விரட்ட கும்கி யானைகள் பயன்படுத்தப்படும்.
    • வனநிலங்களில் உள்ள சாலையோர புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் மனித - விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் வனத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை ஆகிய துறைகளின் முன்னிலையில் பொதுமக்கள் மனித- விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருணா பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் நுழையும் யானைகளை விரட்ட கும்கி யானைகள் பயன்படுத்தப்படும். மேலும் யானைகளை விரட்ட கூடுதல் தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவார்கள். வனநிலங்களில் உள்ள சாலையோர புதர் களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிக மனித விலங்கு மோதல்கள் ஏற்படும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். தனியார் எஸ்டேட்களின் உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களுக்கு அருகில் உள்ள சாலையோரம் உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.

    மேலும் தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில் தெரு விளக்குகள் உடனடியாக அமைக்க உள்ளாட்சிததுறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக சுற்றுலா தினம் செப்டம்பா் 27-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மலைரயில் அறக்கட்டளை தலைவா் நட்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ஊட்டி,

    உலக சுற்றுலா தினம் செப்டம்பா் 27-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் மலை ரயிலில் வந்திருந்த 140 பயணிகளுக்கு மாவட்ட சுற்றுலாத்துறை சாா்பில் ரோஜா மலா் கொடுத்தும், சுற்றுலா கையேடுகள் மற்றும் இனிப்பு வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடா்ந்து மலைரயில் பாதுகாப்புஇயக்கம் சாா்பில், ஊட்டியில் இருந்து குன்னூர் வரை பள்ளி மாணவ-மாணவிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனா். நிகழ்ச்சியில் மலைரயில் அறக்கட்டளை தலைவா் நட்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் திரளாக வந்து வழிபாடு

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள சக்திமலை முருகன் கோவிலில் பிரதோஷ நாளான நேற்று லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து பூஜை மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. மேலும் சிவபெருமானின் வாகனமான நந்திதேவருக்கும் எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோத்தகிரி கடை வீதி மாரியம்மன் கோவிலில் உள்ள லிங்கேஸ்வரருக்கும் பிரதோஷ சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    • கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சி மாதாந்திரக்கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சத்தியவாணி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் நேரு வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது பேரூ ராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இதுகுறித்து விவாதம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரம் வருமாறு:

    கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட கண்டிமட்டம் பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதற்காக அந்த பகுதியில் புதிய குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து, அம்மக்கல் தடுப்பணையில் இருந்து கண்டிமட்டம் வரை குடிநீர் குழாய்கள் பதித்து பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    காந்திபுரம், பூதியாடா கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால், அங்கு புதிய குழாய்கள் அமைக்கப்படும்.

    மட்டகண்டி பகுதியில் சட்டவிதிகளை மீறி கட்டிய கட்டிடத்திற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர். ஆனால் அங்கு தற்போது மீண்டும் கட்டுமான பணிகள் நடக்கிறது.

    மேலும் சட்டவிதிகளைமீறி மின் இணைப்பும் வழங்கப்பட்டு உள்ளது. அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடத்தை, அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

    மஞ்சூர் சுற்றுவட்டார வியாபாரிகளின் கோரி க்கையை ஏற்று கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 30 கிராமங்கள் மற்றும் குந்தா, பிக்கட்டி, எடக்காடு, எமரால்டு, கிண்ணக்கொரை, அப்பர்ப வானி, பெங்கால்மட்டம், மஞ்சகம்பை, கெத்தை போன்ற சுற்றுலா பகுதிகளை காண கேரளாவில் இருந்துவரும் பயணிகளை, முள்ளி சோதனைச்சாவடியில் தடுக்காமல், அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் கவுன்சிலர் மாடக்கன்னு நன்றி கூறினார்.

    • ஜூனியர்களுக்கான போட்டியில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    அருவங்காடு,

    குன்னூர் புனித ஜோசப் கான்வென்ட் பள்ளியில் கராத்தே போட்டி நடைபெற்றது. ராஜேந்திரன் சஞ்சய் தலைமை வகித்தார். மூர்த்தி சஞ்சய், சுப்பிரமணி சஞ்சய் முன்னிலை வகித்தனர்.

    ஜூனியர்களுக்கான போட்டியில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    பிளாக்பெல்ட் பிரசுதா, பிரியன், ரித்திக், கிருஷ்ணபிரியா, சாய்மணி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். அடுத்த மாதம் 20-ந்தேதி மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெறும் என மாஸ்டர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

    • நகரமன்ற துணைத்தலைவருமான பா.மு.வாசிம்ராஜா கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    குன்னூர் மவுண்ட்பிளசண்ட் 2-வது வார்டு பகுதியில் நீலகிரி எம்.பி ராசாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில், ரேஷன் கடை அமைப்பதற்காக பூமிபூஜை நடந்தது.

    நகர செயலாளரும், 2-வது வார்டு நகரமன்ற உறுப்பினருமான ராமசாமி தலைமை தாங்கினார்.மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளரும், நகரமன்ற துணைத்தலைவருமான பா.மு.வாசிம்ராஜா கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில்நகர துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் ஜெகநாத்ராவ், மாவட்டபிரதிநிதி மணிகண்டன், குன்னூர் எம்.எல்.ஏ தொகுதி ஒருங்கிணைப்பாளரும், கிளை கழக செயலாளருமான அல்போன்ஸ்மணி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சையத்மன்சூர், ராமன், கோவர்த்தனன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி தலைவராக ஜாகிர் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி தலைவராக தலைமை கழக பேச்சாளரும், நகரமன்ற உறுப்பினருமான ஜாகிர் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

    இவருடன் துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் மாவட்டசெயலாளர் பா.மு.முபாரக்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் ரவிக்குமார், செயற்குழு உறுப்பினர் முஸ்தபா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்

    • பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
    • விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் 2023-24-ம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் முடிந்தது.

    இதில் முதல்கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவு கிடைக்காதபோது, முதலில் கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர்.

    இதன் பின்னர் அடுத்தடுத்த கலந்தாய்வுகளின்போது அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் காலியிடம் இருந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு அந்த பாடப்பிரிவிற்கு மாறி உள்ளனர்.

    இவ்வாறு ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறுவதற்காக தாவரவியல் துறை பேராசிரியர் ரவி, மாணவர்களிடம் கூகுள்பே மூலமும், ரொக்கமாகவும் பணம் வாங்கியதாக கடந்த 14-ந்தேதி குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத் தொடர்ந்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய செல்போன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழக டி.ஜி.பி ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் புகார் பதிவு செய்து உள்ளனர்.

    மேலும் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதையடுத்து கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் கலைச்செல்வி கடந்த வாரம் ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு நேரில் வந்து 30 மாணவ-மாணவிகள், 4 பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி முதல்வரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    இதன்பின்னர் விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையே ஊட்டி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதியில் இடம் கிடைக்க கல்லூரி முதல்வர் பணம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனியிடம் ஒரு மாணவர் பிரவுன் கவரை வழங்குகிறார். அந்த கவரில் ரூ.10 ஆயிரம் பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. மாணவரை பார்த்து சீக்கிரம் கொடுத்து விடுங்கள். அப்போது தான் இடம் கிடைக்கும் என கல்லூரி முதல்வர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி ஆகிய 2 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கான நடவடிக்கையை உயர்கல்வித்துறை எடுத்துள்ளது.

    ×