search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Botanic Gardens"

    • 2-ம் சீசனின் போது குறைந்த அளவிலான மலர் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்படும்.
    • சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    ஊட்டியில் ஆண்டுதோறும் 2-ம் கட்ட சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி 2 மாதங்கள் நடக்கும்.

    2-ம் சீசனின் போது வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோறும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    முதல் சீசனின்போது, 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் தொட்டிகள் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். 2-ம் சீசனின் போது குறைந்த அளவிலான மலர் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்படும்.

    இந்த முறை 21 ஆயிரத்து 500 தொட்டிகளில் டேலியா, சால்வியா, இன்காமேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், சைக்ளமன், ஜெரேனியம், டெல்பினியம், கொச்சியா, ஆந்தூரியம் போன்ற 70 வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர பல்வேறு அலங்கார செடிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் தொட்டிகள் மாடங்களில் அடுக்கி வைக்கப்படும்.

    பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். இந்த முறை கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்ததால் மலர் பூப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக மாடத்தில் தொட்டிகள் அடுக்கும் பணிகள் கடந்த ஒருவாரமாக மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை கண்டு ரசிப்பதற்காக திறந்து வைக்கப்பட்டது.

    இதனை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கலெக்டர் அருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் அடுக்கி வைக்கப்பட்டு மலர்களை கண்டு ரசித்தும், மலர் அலங்காரங்களையும் பார்வையிட்டனர்.

    குறிப்பாக பல வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த சந்திரயான்-3 விண்கலம் மற்றும் மறுசுழற்சி ஸ்மைலி போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுத்தது.

    சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து, அதன் முன்பு நின்று புகைப் படமும் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தற்போது ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அத்துடன் சீதோஷ்ண நிலையும் இதமாக காணப்படுகிறது. இதனை ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணி கள் மிகவும் அனுபவித்து ரசித்து வருகின்றனர்.

    ×