என் மலர்tooltip icon

    நீலகிரி

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கன மழையால் காலம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 30 பேர் மீட்கப்பட்டனர்.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கன மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக கூடலூரில் உள்ள காலாம்புழா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

    காலாம்புழா ஆற்றில் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கால் புறமணவயல் கிராமம் முற்றிலுமாக நீரில் மூழ்கின. வெள்ளத்தில் தவித்த சுமார் 30 பேரை மாவட்ட வருவாய்த்துறையினர் மீட்டனர்.
    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 812 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 812 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது மதுரை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த குருத்துக்குளியை 17 ஆண்கள், 4 பெண்கள், ஒரநள்ளி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரின் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த கடநாட்டை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி எச்.எம்.டி. பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளரின் தொடர்பில் பிக்கட்டியை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகை தந்த டிரைவரின் தொடர்பில் இருந்த ஜக்கலோரையை சேர்ந்த 2 ஆண்கள், ஒரு பெண், ஓரநள்ளியை சேர்ந்த ஒரு ஆண், கோவை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த ஊட்டி லிபர்டி தியேட்டர் பகுதியை சேர்ந்த ஒரு ஆண், குன்னூர் மார்க்கெட் பகுதிக்கு வருகை தந்த வெளிமாவட்ட டிரைவரின் தொடர்பில் இருந்த குன்னூர் கிளிஞ்சடாவை சேர்ந்த ஒரு பெண், ராஜாஜி நகரை சேர்ந்த ஒரு ஆண், கரன்சியை சேர்ந்த ஒரு சிறுவன், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வெலிங்டனுக்கு வருகை தந்த ஒரு ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    கோவை சென்று வந்தவருடன் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த ஊட்டி கிராண்ட் லைனை சேர்ந்த ஒரு ஆண், கோவை மாவட்டத்திலிருந்து வருகை புரிந்தவருடன் மூன்றாம் நிலை தொடர்பில் இருந்த குன்னூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி எச்.பி.எப். பகுதியை சேர்ந்த ஒரு பெண், கேரள மாநிலத்திலிருந்து சேரங்கோடு ஊராட்சி காளியோடு பகுதிக்கு வருகை தந்த ஒரு பெண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 849 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 700 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 147 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி அருகே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய 3 லட்சம் மூலிகை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சின்கோனா கிராமத்தில் மூலிகை தாவரங்கள் வளர்ப்பகம் வனத்துறையின் கூட்டு வன மேலாண்மை சார்பில் செயல்பட்டு வருகிறது. கடந்த 1995-ம் ஆண்டு வளங்குன்றிய மலைப்பகுதியில் மூலிகை தாவரங்களை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்டது. இதன் மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. 

    இங்கு 15 ஏக்கர் நிலத்தில் மூலிகை தாவரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்படும் மூலிகை தாவரங்கள் அங்கேயே தைலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் உற்பத்தி செய்யப்பட்ட தைலங்கள் தேக்கம் அடைந்து உள்ளது.

    அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய மூலிகை நாற்றுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்காக முதலில் தாய் நாற்றுகள் ஒரு இடத்தில் நடவு செய்யப்படுகிறது. அதில் நன்றாக வேர் வளர்ந்தவுடன் தனித்தனியாக எடுத்து இயற்கை உரம் கலந்த மண்ணை நாற்றின் வேர்ப்பகுதியில் வைத்து கட்டி வைக்கின்றனர். பின்னர் அதிலிருந்து வேர் புதிதாக முளைக்க தொடங்கியவுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மூலிகை தாவரங்கள் வளர்ப்பக மேலாளர் உதயகுமார் கூறியதாவது:-

    தைம், ரோஸ்மேரி, லெமன்கிராஸ், சிட்ரநெல்லோ, ஜெரேனியம், பார்சிலி, சேஜ் உள்பட 13 வகையான மூலிகை தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த தாவரங்கள் 5 முதல் 8 ஆண்டுகள் வரை வளர்வதுடன், நீண்ட கால பயிராக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், நடுவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் மூலிகை நாற்றுகள் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக இங்கு மூலிகை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாற்று ரூ.4-க்கு விற்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். முதலில் அறுவடை செய்ய ஆறு மாத காலம் ஆகும். அதன் பின்னர் ஒரு ஆண்டுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 3 அறுவடைகளை மேற்கொள்ளலாம்.

    மூலிகை தாவரங்களை வளர்க்க உற்பத்தி செலவு குறைவு. மேலும் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாவரங்களை சாப்பிடாது. தற்போது ரோஸ்மேரி, தைம், உள்பட 3 லட்சம் மூலிகை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மூலிகை தாவர வளர்ப்பகம் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் அறுவடை செய்யும் மூலிகை தாவரங்களை தனியார் நிறுவனங்கள், சோப்பு, ஷாம்பு தயாரிக்கும் இடங்களுக்கு விற்பனை செய்ய சந்தைப்படுத்தி கொடுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் லாபம் பெறலாம். தொடர்ந்து 5 முதல் 8 ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம். மூலிகை தாவரங்களில் மருத்துவ குணங்கள் உள்ளது. உணவு பொருட்களில் இயற்கை மணமூட்டவும் பயன்படுகிறது. உணவு பொருட்களை பதப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வாசனை திரவியம் ஆகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மூலிகை நாற்றுகள் மலைப் பிரதேசத்தை விட வெப்பமான பகுதிகளில் நன்றாக வளரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கூடலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது/ ஆற்றின் கரையோர தடுப்புச்சுவரும் உடைந்தது. மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று மாலை 4 மணிக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கூடலூரில் இருந்து ஓவேலிக்கு செல்லும் சாலையில் கெவிப்பாரா என்ற இடத்தில் ராட்சத மரம் சரிந்து விழுந்தது. தொடர்ந்து அதே பகுதியில் நின்றிருந்த மற்றொரு சிறிய மரமும் விழுந்தது.

    எனவே அப்பகுதியில் உள்ள மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக கூடலூர் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொட்டும் மழையில் மின்வாள்கள் மூலம் அந்த மரங்களை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்து அறுந்து கிடந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பலத்த மழை பெய்ததால், சாலையில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற முடியவில்லை. பின்னர் மாலை 5.30 மணிக்கு அந்த மரங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. தொடர்ந்து மின்கம்பிகளும் சீரமைக்கப்பட்டு மாலை 6 மணிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மழைக்காரணமாக பாண்டியாறு, மாயார், பொன்னானி, தேவாலா, சோலாடி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தேவாலா அருகே சோழவயல் என்ற இடத்தில் தேவாலா ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டு இருந்த தடுப்பு சுவரின் ஒரு பகுதி உடைந்தது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது. மலர்களை கண்டு ரசிக்க ஆளில்லாமல் தொடர் மழையால் அழுகி வருகின்றன.
    ஊட்டி:

    மலைகளின் அரசியான ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். 100-வது மலர் கண்காட்சியையொட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. இந்த அழகிய பூங்காவில் 4,202 ரகங்களை சேர்ந்த 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மலைச்சரிவில் அடுக்கடுக்கான இடங்களில் ஒருபுறம் ரோஜா செடிகள், அலங்கார செடிகள் வைக்கப்பட்டு உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் பூங்காவை ரசிக்க நிலா மாடம், நிழற்குடைகள், இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசிப்பதோடு, அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். நடப்பாண்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது.

    இருப்பினும் ஊட்டி ரோஜா பூங்காவை 2-வது சீசனுக்கு தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது பூங்காவின் கீழ்ப்பகுதியில் மலைச்சரிவில் வளர்ந்துள்ள களைச் செடிகளை பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழையை பொருட்படுத்தாமல் அவர்கள் சமூக இடைவெளி விட்டும், முககவசம் அணிந்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ரோஜா பூக்களில் தண்ணீரிர் நின்று அழுக தொடங்கி உள்ளன. மலர்களின் இதழ்கள் உதிர்ந்து கீழே விழுந்து வருகின்றன. பூங்காவில் பல செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கி வந்தாலும், தொடர் மழையால் அழுகி வருகின்றன.

    வழக்கமாக சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்து செல்வதும், தொடர் மழையின் போது மலர்கள் அழுகுவதும் காணப்படும். ஆனால், நடப்பாண்டில் ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா பயணிகள் வரவில்லை. இதனால் மலர்களை கண்டு ரசிக்க ஆளில்லாமல் தொடர் மழையால் அழுகி வருகின்றன. இதனை செடிகளிலிருந்து வெட்டி அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பூங்காவின் ஒரு பகுதியில் புதிதாக நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
    நீலகிரியில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் பாதிப்பு 802 ஆக உயர்ந்துள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 36 பேருக்கு கொரோனா உறுதியானது. அதாவது ஒரநள்ளி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரின் மூன்றாம் நிலை தொடர்பில் இருந்த அதிகரட்டியை சேர்ந்த 2 ஆண்கள், ஒரு பெண், அட்டணையை சேர்ந்த 2 பெண்கள், ஒரு ஆண், குளிச்சோலையை சேர்ந்த ஒரு மூதாட்டி, கடநாட்டை சேர்ந்த ஒரு பெண், மதுரை சென்று வந்தவருடன் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த சோலூரை சேர்ந்த ஒரு பெண், ஒரு ஆண், குருத்துகுளியை சேர்ந்த 2 ஆண்கள், 2 பெண்கள் ஆகியோருக்கு வைரஸ் உறுதியானது.

    கோவையில் இருந்து ஊட்டிக்கு வந்த மகளுடன் தொடர்பில் இருந்த வில்லோ பாண்ட் பகுதியை சேர்ந்த ஒரு பெண், கோவை சென்று வந்தவருடன் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த ஊட்டி அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த ஒரு ஆண், வெளி மாவட்டங்களுக்கு சென்றுவந்த கொல்லிமலையை சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண், அருவங்காட்டை சேர்ந்த ஒரு ஆண், மாவனல்லாவை சேர்ந்த ஒரு பெண், குன்னூர் சந்திரா காலனியை சேர்ந்த ஒரு பெண், குன்னூர் மார்க்கெட் பகுதிக்கு சென்று வந்த ராஜாஜி நகரை சேர்ந்த ஒரு பெண், கரன்சியை சேர்ந்த ஒரு ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

    மேட்டுப்பாளையத்துக்கு காய்கறி ஏற்றி சென்று வந்த ஜக்கனாரையை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி மஞ்சனக்கொரையை சேர்ந்த ஒரு ஆண், சேரம்பாடியை சேர்ந்த 2 பெண்கள் கூடலூரில் தடை செய்யப்பட்ட பகுதியில் வசித்து வந்த சளி வயல் பகுதியை சேர்ந்த ஒரு பெண், பெங்களூரில் இருந்து வருகை தந்த குன்னுரை சேர்ந்த ஒரு ஆண், மஞ்சூரில் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்த தொட்டக்கம்பையை சேர்ந்த ஒரு பெண், ஊட்டி எச்.பி.எப்.பகுதியை சேர்ந்த ஒரு ஆண், ராணுவ பயிற்சிக்காக வெளி மாவட்டத்தில் இருந்து வெலிங்டனுக்கு வருகை புரிந்த ஒரு ஆண், கேரளாவிலிருந்து வெலிங்டனுக்கு வந்த ஒரு ஆண், ஒரு பெண், ஒரு ஆண், மேல்கவ்வட்டியில் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்த ஒரு பெண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நீலகிரியில் கொரோனா பாதிப்பு 802 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 650 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 150 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
    குன்னூர் அருகே ரூ.47 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணிகளை சாந்திராமு எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
    குன்னூர்:

    குன்னூர் அருகே சானிடோரியம், கம்பி சோலை, போன்ற குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்தகுடியிருப்பு பகுதிகள் பேரட்டி ஊராட்சிக்குட்பட்டதாகும். இந்த பகுதிகளில் இருந்து தங்கள் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பேரட்டி, சின்ன வண்டி சோலை ஆகிய கிராமங்களின் வழியாக செல்லும் சாலையை பயன்படுத்தி எம்.ஆர்.சி. ராணுவ முகாம் வழியாக குன்னூர் மற்றும் ஊட்டிக்கு வாகனங்கள் மூலம் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் சானிடோரியத்தில் இருந்து சின்ன வண்டி சோலைவரை சாலை நீண்டகாலமாக குண்டும், குழியுமாக இருந்தது. வாகனங்கள் செல்லவோ, பொதுமக்கள் நடந்து செல்லவோ முடியாத சாலையாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் வாகனங்களில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனை தொடர்ந்து பொது மக்களின் நலன் கருதி சானிடோரியம் முதல் சின்னவண்டி சோலை வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் சாலையை சீரமைக்க ரூ.47 லட்சம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    குன்னூர் சாந்திராமு எம்.எல்.ஏ, பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குன்னூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பேரட்டி ராஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    கோத்தகிரியில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் கோத்தகிரியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பஜாரில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த பிலவேந்திரன் (வயது 46) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கேரள மாநில லாட்டரி சீட்டுகள், ரொக்கம் ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    முதுமலையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்த முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் 3 பேரை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    கூடலூர்:

    முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட (வெளிமண்டலம்) மசினகுடி வனப்பகுதியில் வனச்சரகர் மாரியப்பன் தலைமையிலான வனத்துறையினர் கடந்த 27-ந் தேதி ரோந்து சென்றனர். அப்போது வனத்தில் நின்றிருந்த சந்தன மரத்தை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொண்டிருந்தது. இதைக்கண்ட வனத்துறையினர் ஓடி சென்று அவர்களை பிடிக்க முயன்றனர். 

    இதில் மசினகுடியை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 32), கேத்தன் (48) ஆகிய 2 பேர் பிடிபட்டனர். மீதமுள்ளவர்கள் தப்பி ஓடினர். தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் இருந்து 27 கிலோ சந்தன மரக்கட்டைகள், கோடாரிகள், அரிவாள்களை 
    வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

    பின்னர் தொடர் விசாரணை நடத்திய போது கர்நாடகா மாநிலம் குண்டல்பேட் பகுதியை சேர்ந்த கரியன் (30) மசினகுடியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கரியனை வனத்துறையினர் பிடித்தனர். இது குறித்து 
    மசினகுடி வனத்துறையினர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் பிடிபட்ட மகேஷ்குமார், கேத்தன், கரியன் ஆகிய 3 பேரை கைது செய்து கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனிடையே சந்தனமரங்களை வெட்டி கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக உள்ள கர்நாடகா மாநிலம் குண்டல்பேட் மங்களாவை சேர்ந்த நாகேந்திரன், பாலன், மசினகுடி மாறன் ஆகிய 3 பேரை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக கர்நாடகா மாநில வனத்துறையினரிடம் ஆலோசித்து வருகின்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, சந்தனமரம் கடத்த முயன்ற வழக்கில் தொடர்புடையவர்கள் கடந்த காலங்களில் வனத்துக்குள் கைவரிசை காட்டி உள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கடத்தல் கும்பலுக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் கர்நாடகா வனத்துறையினருடன் இணைந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் உயர் அலுவலர்கள் தொழில் சம்பந்தமாக வெளியிடங்களுக்கு சென்று வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிறப்பு அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விழிப்பு குழு கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். இன்கோசர்வ் தலைமை செயல் அதிகாரியும், மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியுமான சுப்ரியா சாகு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்து கிராம மக்களையும் சென்றடைய கிராம ஊராட்சி அளவிலான சமூக விழிப்புணர்வு குழுக்களை அமைத்து, நீலகிரியில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விழிப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது. நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தவும், மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கிராம அளவிலான இளைஞர் குழு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகள், அனைத்து வணிகர் சங்கங்கள் மற்றும் ஊராட்சித் தலைவர் போன்ற குழுக்களை கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது கொரோனா தொற்று ஏற்படாத வகையில் தேயிலை தொழிலாளர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஆலோசனைகள், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நெறிமுறைகளை உற்பத்தியாளர்கள் விளக்கிக் கூற வேண்டும். முக்கியமாக தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் உயர் அலுவலர்கள், தொழில் சம்பந்தமாக வெளியிடங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் பயணம் முடிந்து திரும்பும்போது, தொழிற்சாலைகளில் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமலிருக்க தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயணம் சென்ற வருபவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் பிறருக்கு தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.

    மேலும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கு வரும் போது அவர்களது உடல் வெப்ப நிலையை பரிசோதித்து கிருமிநாசினி பயன்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கட்டாயம் முககவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தொழிலாளர்கள் பயன்படுத்த கிருமிநாசினி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்யும்போது ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், டேன்டீநிர்வாக இயக்குனர் சீனிவாச ரெட்டி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, இன்கோசர்வ் தலைவர் சிவகுமார் மற்றும் தேயிலை தொழிற்சாலை உற்பத்தியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    அய்யன்கொல்லி பதப்படுத்தும் கிடங்கில் இருந்து 40 டன் வாழைத்தார்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 டன் அளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் ஆண்டு முழுவதும் நேந்திரன்வாழைகள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. அண்டை மாநில கேரளாவில் நேந்திரன் வாழைக்காய் சிப்ஸ் தயாரிப்பதற்காக அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. 

    இந்த நிலையில் விளைச்சல் அதிகமாக உள்ள காலக்கட்டங்களில் விவசாயிகளுக்கு போதிய விலையும் கிடைப்பது இல்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். மேலும் அறுவடை செய்த விளைபொருட்களை பதப்படுத்தி சேமித்து வைத்து விலை கிடைக்கும் நாட்களில் விற்பனை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் கூடலூர் வேளாண் விற்பனை வணிகத்துறை ரூ.6 கோடி நிதி ஒதுக்கியது. தொடர்ந்து அய்யன்கொல்லி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு வேளாண் விளைபொருட்களை பதப்படுத்தும் கிடங்கு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 

    பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக கிடங்கு திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. தொடர்ந்து மாங்கோடு உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதியில் இருந்து இதுவரை 100 டன் காய்கறிகள் வரவழைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து வேளாண் துணை இயக்குனர் வடிவேல், வேளாண் அலுவலர் கலைவாணி, உதவி அலுவலர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் நேந்திரன் வாழைத்தார்கள் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவலால் இயல்பு நிலை திரும்பாததால் விளைபொருட்களை விவசாயிகள் சேமித்து வருகின்றனர். இதுவரை 40 டன் வாழைத்தார்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டுள்ளது. 

    இதில் 5 டன் வாழைத்தார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தைகள் போக மீதமுள்ள வாழைத்தார்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணியில் வேளாண் விற்பனை வணிகத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து வேளாண் விற்பனைத்துறையினர் கூறியதாவது:- அய்யன்கொல்லியில் ரூ.6 கோடி செலவில் கட்டி செயல்பட்டு வந்துள்ள பதப்படுத்தும் கிடங்கில் காய்கறிகள், வாழைத்தார்கள் சேமித்து வைக்கப்படுகிறது. 

    சந்தை நிலவரப்படி சரியான நேரத்தில் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை விற்பனை செய்வதால் வெளிமார்க்கெட் விலையை விட விவசாயிகளுக்கு கூடுதலாக விலை கிடைக்கிறது. இதனால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை 40 டன் வாழைத்தார்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் 5 டன் வாழைத்தார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்களது விளைபொருட்களை பதப்படுத்தும் கிடங்கில் சேமித்து வைத்து பயன் அடையும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
    நீலகிரியில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரின் பெயர்கள் வெளிமாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு திருத்திய பட்டியல் 724 ஆக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரின் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த ஊட்டி அருகே கல்லட்டியை சேர்ந்த ஒரு பெண், கோவை சென்று வந்தவர்களின் தொடர்பில் இருந்த மஞ்சகொம்பையை சேர்ந்த 4 பெண்கள், ஒரு ஆண், கோவைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்று வந்தவர்களின் தொடர்பில் இருந்த கடநாட்டைசேர்ந்த ஒரு ஆண், கோத்தகிரி அருகே மரலக்கம்பையை சேர்ந்த ஒரு பெண், அதிகரட்டியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நெடுகுளாவை சேர்ந்த ஒரு பெண், கோவை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த நெடுகுளாவை சேர்ந்த ஒரு ஆண், சேலம் சென்று திரும்பிய கோத்தகிரி கோட்டஹால் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

    இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு 735 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 581 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 152 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ×