search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் சிறப்பு அதிகாரி பேசியபோது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் சிறப்பு அதிகாரி பேசியபோது எடுத்த படம்.

    வெளியிடங்களுக்கு சென்று வந்தால் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்- சிறப்பு அதிகாரி அறிவுறுத்தல்

    தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் உயர் அலுவலர்கள் தொழில் சம்பந்தமாக வெளியிடங்களுக்கு சென்று வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிறப்பு அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விழிப்பு குழு கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். இன்கோசர்வ் தலைமை செயல் அதிகாரியும், மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியுமான சுப்ரியா சாகு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்து கிராம மக்களையும் சென்றடைய கிராம ஊராட்சி அளவிலான சமூக விழிப்புணர்வு குழுக்களை அமைத்து, நீலகிரியில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விழிப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது. நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தவும், மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கிராம அளவிலான இளைஞர் குழு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகள், அனைத்து வணிகர் சங்கங்கள் மற்றும் ஊராட்சித் தலைவர் போன்ற குழுக்களை கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது கொரோனா தொற்று ஏற்படாத வகையில் தேயிலை தொழிலாளர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஆலோசனைகள், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நெறிமுறைகளை உற்பத்தியாளர்கள் விளக்கிக் கூற வேண்டும். முக்கியமாக தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் உயர் அலுவலர்கள், தொழில் சம்பந்தமாக வெளியிடங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் பயணம் முடிந்து திரும்பும்போது, தொழிற்சாலைகளில் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமலிருக்க தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயணம் சென்ற வருபவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் பிறருக்கு தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.

    மேலும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கு வரும் போது அவர்களது உடல் வெப்ப நிலையை பரிசோதித்து கிருமிநாசினி பயன்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கட்டாயம் முககவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தொழிலாளர்கள் பயன்படுத்த கிருமிநாசினி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்யும்போது ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், டேன்டீநிர்வாக இயக்குனர் சீனிவாச ரெட்டி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, இன்கோசர்வ் தலைவர் சிவகுமார் மற்றும் தேயிலை தொழிற்சாலை உற்பத்தியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×