search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஸ்மேரி நாற்றுகளை தொழிலாளர்கள் இயற்கை உரம் கலந்த மண்ணுடன் கட்டும் பணியில் ஈடுபட்ட காட்சி
    X
    ரோஸ்மேரி நாற்றுகளை தொழிலாளர்கள் இயற்கை உரம் கலந்த மண்ணுடன் கட்டும் பணியில் ஈடுபட்ட காட்சி

    ஊட்டி அருகே 3 லட்சம் மூலிகை நாற்றுகள் உற்பத்தி

    ஊட்டி அருகே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய 3 லட்சம் மூலிகை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சின்கோனா கிராமத்தில் மூலிகை தாவரங்கள் வளர்ப்பகம் வனத்துறையின் கூட்டு வன மேலாண்மை சார்பில் செயல்பட்டு வருகிறது. கடந்த 1995-ம் ஆண்டு வளங்குன்றிய மலைப்பகுதியில் மூலிகை தாவரங்களை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்டது. இதன் மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. 

    இங்கு 15 ஏக்கர் நிலத்தில் மூலிகை தாவரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்படும் மூலிகை தாவரங்கள் அங்கேயே தைலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் உற்பத்தி செய்யப்பட்ட தைலங்கள் தேக்கம் அடைந்து உள்ளது.

    அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய மூலிகை நாற்றுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்காக முதலில் தாய் நாற்றுகள் ஒரு இடத்தில் நடவு செய்யப்படுகிறது. அதில் நன்றாக வேர் வளர்ந்தவுடன் தனித்தனியாக எடுத்து இயற்கை உரம் கலந்த மண்ணை நாற்றின் வேர்ப்பகுதியில் வைத்து கட்டி வைக்கின்றனர். பின்னர் அதிலிருந்து வேர் புதிதாக முளைக்க தொடங்கியவுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மூலிகை தாவரங்கள் வளர்ப்பக மேலாளர் உதயகுமார் கூறியதாவது:-

    தைம், ரோஸ்மேரி, லெமன்கிராஸ், சிட்ரநெல்லோ, ஜெரேனியம், பார்சிலி, சேஜ் உள்பட 13 வகையான மூலிகை தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த தாவரங்கள் 5 முதல் 8 ஆண்டுகள் வரை வளர்வதுடன், நீண்ட கால பயிராக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், நடுவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் மூலிகை நாற்றுகள் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக இங்கு மூலிகை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாற்று ரூ.4-க்கு விற்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். முதலில் அறுவடை செய்ய ஆறு மாத காலம் ஆகும். அதன் பின்னர் ஒரு ஆண்டுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 3 அறுவடைகளை மேற்கொள்ளலாம்.

    மூலிகை தாவரங்களை வளர்க்க உற்பத்தி செலவு குறைவு. மேலும் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாவரங்களை சாப்பிடாது. தற்போது ரோஸ்மேரி, தைம், உள்பட 3 லட்சம் மூலிகை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மூலிகை தாவர வளர்ப்பகம் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் அறுவடை செய்யும் மூலிகை தாவரங்களை தனியார் நிறுவனங்கள், சோப்பு, ஷாம்பு தயாரிக்கும் இடங்களுக்கு விற்பனை செய்ய சந்தைப்படுத்தி கொடுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் லாபம் பெறலாம். தொடர்ந்து 5 முதல் 8 ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம். மூலிகை தாவரங்களில் மருத்துவ குணங்கள் உள்ளது. உணவு பொருட்களில் இயற்கை மணமூட்டவும் பயன்படுகிறது. உணவு பொருட்களை பதப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வாசனை திரவியம் ஆகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மூலிகை நாற்றுகள் மலைப் பிரதேசத்தை விட வெப்பமான பகுதிகளில் நன்றாக வளரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×