search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி ரோஜா பூங்காவில் பணியாளர்கள் அழுகிய மலர்களை அகற்றியதை படத்தில் காணலாம்.
    X
    ஊட்டி ரோஜா பூங்காவில் பணியாளர்கள் அழுகிய மலர்களை அகற்றியதை படத்தில் காணலாம்.

    சுற்றுலா தலங்கள் 4 மாதங்களாக மூடல்- அழகிய பூங்காவில் அழுகும் ரோஜாக்கள்

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது. மலர்களை கண்டு ரசிக்க ஆளில்லாமல் தொடர் மழையால் அழுகி வருகின்றன.
    ஊட்டி:

    மலைகளின் அரசியான ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். 100-வது மலர் கண்காட்சியையொட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. இந்த அழகிய பூங்காவில் 4,202 ரகங்களை சேர்ந்த 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மலைச்சரிவில் அடுக்கடுக்கான இடங்களில் ஒருபுறம் ரோஜா செடிகள், அலங்கார செடிகள் வைக்கப்பட்டு உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் பூங்காவை ரசிக்க நிலா மாடம், நிழற்குடைகள், இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசிப்பதோடு, அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். நடப்பாண்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது.

    இருப்பினும் ஊட்டி ரோஜா பூங்காவை 2-வது சீசனுக்கு தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது பூங்காவின் கீழ்ப்பகுதியில் மலைச்சரிவில் வளர்ந்துள்ள களைச் செடிகளை பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழையை பொருட்படுத்தாமல் அவர்கள் சமூக இடைவெளி விட்டும், முககவசம் அணிந்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ரோஜா பூக்களில் தண்ணீரிர் நின்று அழுக தொடங்கி உள்ளன. மலர்களின் இதழ்கள் உதிர்ந்து கீழே விழுந்து வருகின்றன. பூங்காவில் பல செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கி வந்தாலும், தொடர் மழையால் அழுகி வருகின்றன.

    வழக்கமாக சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்து செல்வதும், தொடர் மழையின் போது மலர்கள் அழுகுவதும் காணப்படும். ஆனால், நடப்பாண்டில் ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா பயணிகள் வரவில்லை. இதனால் மலர்களை கண்டு ரசிக்க ஆளில்லாமல் தொடர் மழையால் அழுகி வருகின்றன. இதனை செடிகளிலிருந்து வெட்டி அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பூங்காவின் ஒரு பகுதியில் புதிதாக நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×