என் மலர்tooltip icon

    நீலகிரி

    எருமாடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பந்தலூர்:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பகுதி செயலாளர் ராஜன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட கமிட்டி உறுப்பினர் அமீது, விவசாயிகள் சங்க மாவட்டசெயலாளர் யோகண்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தா, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அனிபா உள்பட 65 பேரை கைது செய்தனர்.

    கூடலூர் அருகே அரசு நிலத்தில் கட்டிய வீட்டை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்வயல் பகுதியை சேர்ந்தவர் மாமச்சன். இவர் தனது வீட்டின் அருகில் மற்றொரு வீடு கட்டி வந்தார். அந்த வீடு அரசு நிலத்தில் கட்டப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். அப்போது வனத்துறைக்கு அல்லது வருவாய்த்துறைக்கு என முடிவு செய்யப்படாத 53-வது பிரிவுக்கு உட்பட்ட அரசு நிலத்தில் வீடு கட்டப்படுவது தெரியவந்தது.

    இதையடுத்து வீடு கட்டும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த வீட்டை இடிக்கும் பணி நேற்று நடந்தது. இதை அறிந்த ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில், துணைத்தலைவர் ரெஜி மேத்யூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சி.கே.மணி மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்தனர்.

    பின்னர் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதில், மறு உத்தரவு வரும் வரை அந்த வீட்டை மேலும் கட்டும் பணியை மீண்டும் தொடங்கக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஏற்ற கிராம மக்கள், அந்த வீட்டை இடிக்கும் பணியை கைவிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

    இதுகுறித்து ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் கூறும்போது, மக்கள் வசிக்கும் நிலங்கள் 53-வது பிரிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த நிலத்தில் வசிக்கும் மக்கள் வீடு கட்டி கொள்ள சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே உயர் அதிகாரிகளிடம் நேரில் விளக்கம் அளிக்கப்படும் என்றனர்.

    பின்னர் வருவாய்த்துறையினர் கூறும்போது, 53-வது பிரிவு நிலத்துக்குள் கட்டுமான பணிகள் மேற்கொள்ளக்கூடாது. இதை மீறி வீடு கட்டப்பட்டது. அதனை அகற்ற கேட்டுக்கொண்டும், அதற்கு உரிமையாளர் முன்வரவில்லை. உயர் அதிகாரிகளிடம் கலந்துபேசி அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றனர்.
    குன்னூர் அருகே 15 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். பின்னர் குன்னூர் அருகே உள்ள உபதலை சமுதாய கூடத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. அதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் உள்பட 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    பின்னர் 15 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 681 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தொழிற்பயிற்சி முடித்த 15 பேருக்கு சான்றிதழ்களையும் கொடுத்தார். அப்போது மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற வந்த கேத்தி அச்சனகல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 6) என்ற சிறுவனிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். இதில் குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை புரெவி புயலின் தாக்கம் அதிகமாக இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மீட்பு பணிகளை செய்ய தயார் நிலையில் குழுவினர் உள்ளனர். புரெவி புயல் காரணமாக மழை பெய்யும். ஆனால் தீவிர மழையாக இருக்காது. மழை மற்றும் காற்று அதிகமாக இருக்கும்போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றார்.
    பந்தலூர் அருகே டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பந்தலூர்:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பந்தலூர் அருகே உள்ள எருமாடு பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    இதற்கு விவசாய சங்க நிர்வாகி பிலீப் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், எருமாடு பகுதி செயலாளர் ராஜன், முஸ்லிம் லீக் சார்பில் உம்மர், சேரங்கோடு ஊராட்சி தலைவர் சந்திரபோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டியில் கடும் பனிமூட்டம் நிலவியது.
    ஊட்டி:

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புரெவி புயல் காரணமாக அதி கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    ஊட்டி நகரில் நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பகலிலும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. ஊட்டி எல்க்ஹில், மஞ்சனக்கொரை, கோடப்பமந்து உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் ஊட்டி அருகே வேலிவியூ, லவ்டேல் சந்திப்பு ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் இயக்கப்பட்டன.

    ஊட்டியில் பரவலாக மழை பெய்து வருவதால் வழக்கத்துக்கு மாறாக குளிர் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் வீடுகளில் முடங்கினர். மழையில் நனையாமல் இருக்க விவசாய தொழிலாளர்கள் பிளாஸ்டிக் போர்வை அணிந்து பணிகளில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை சுற்றுலா பயணிகள் குடை பிடித்த படியும், கம்பளி ஆடைகள் அணிந்தபடியும் கண்டு ரசித்தனர். இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

    பூங்காவில் மரங்களை சுற்றிலும் பனிமூட்டம் சூழ்ந்து இருந்ததை காண முடிந்தது. மேலும் குன்னூர், கோத்தகிரி, தலைகுந்தா, கேத்தி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.

    தற்போது பெய்து வரும் மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்துக்கு புரெவி புயல் எச்சரிக்கை இல்லை. இருப்பினும் கடந்த வாரம் நிவர் புயல் காரணமாக அனைத்து துறையினர் அடங்கிய குழுக்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் 2 நாட்கள் மழை இருக்கும். ஆனால் தாக்கம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிக காற்று வீசினாலோ அல்லது மழை பெய்தாலோ பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
    மாவோயிஸ்டு நடமாட்டத்தை கட்டுப்படுத்த 3 மாநில வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.
    கூடலூர்:

    தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகம், கேரளாவின் முத்தங்கா சரணாலயம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகியவை 3 மாநிலங்கள் இணையும் இடங்களில் அருகருகே அமைந்து உள்ளன. இங்கு காட்டுயானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இது தவிர சந்தனம், ரோஸ்வுட், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும் உள்ளன. மாநில எல்லைகளில் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால் வன குற்றங்களை தடுக்க வனத்துறையினர் தினமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் கேரளா, கர்நாடகா மாநில வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து விட்டதால் இனி வரும் மாதங்கள் கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது. இதனால் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், மாவோயிஸ்டு நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் 3 மாநிலங்களை சேர்ந்த முதுமலை, முத்தங்கா, பந்திப்பூர் வனத்துறையினர் நேற்று முன்தினம் மாநில எல்லைகள் இணையும் இடத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர்கள் தயானந்தன், சிவக்குமார், முத்தங்கா சரணாலய வனச்சரகர் சுனில் குமார், கர்நாடகாவின் மூலஹல்லா வனச்சரகர் மகாதேவ் மற்றும் வன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது வனப்பகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டத்தை கண்டறிந்து போலீசுக்கு தகவல் கொடுப்பது, எதிர் வரும் நாட்களில் வறட்சியான காலநிலை தொடங்க உள்ளதால் காட்டுத்தீ பரவாமல் தடுக்க இணைந்து செயல்படுவது, பழைய மற்றும் புதிய வன குற்றவாளிகளை கண்டறிந்து மீண்டும் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது. வனங்களை பாதுகாக்கும் பணியில் 3 மாநில வனத்துறையினரும் இணைந்து செயல்படுவது, தகவல்களை உடனுக்குடன் பரிமாறுவது என்று முடிவு செய்யப்பட்டது.
    கூடலூரில் பாக்கு மரங்களில் நோய் தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூரில் தேயிலை, காபி, குறுமிளகு, நேந்திரன் வாழை விவசாயத்துக்கு இணையாக பாக்கு விவசாயமும் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பாக்குகளை மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் கணிசமான வருவாயை ஆண்டுதோறும் விவசாயிகள் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பாக்கு மரங்களை மாகாளி நோய் தாக்கி வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள பாக்குகள் மரங்களில் இருந்து கீழே உதிர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் அவர்கள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஆண்டுக்கு ஒருமுறை பாக்கு விளைகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாக்கு விளைகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் மரங்களில் பாக்கு விளைய தொடங்குகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் மரங்களில் விளைச்சல் அதிகரிக்கும். பின்னர் நவம்பர் முதல் ஜனவரி வரை பாக்கு அறுவடை செய்யப்படும் காலமாகும். இந்த ஆண்டில் பாக்கு விளைச்சல் அதிகரித்து இருந்தது. ஆனால் மாகாளி நோய் தாக்கி மரங்களில் இருந்து பாக்குகள் உதிர்ந்து வருகிறது. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கவலையுடன் கூறினர்.

    இதுகுறித்து கூடலூர் தோட்டக்கலைத்துறையினர் கூறும்போது, இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பல நாட்கள் தேங்கி நின்றது. பாக்கு தோப்புகளில் மழைநீர் தேங்காமல் இருக்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் வெளியே செல்ல முடியாத வகையில் பல இடங்களில் சூழ்ந்து இருந்ததால் பாக்கு மரங்களை மாகாளி நோய் தாக்கி வருகிறது. எனவே போடோ மிக்சர் கலவையை பயன்படுத்தி பாக்கு மரங்களை பாதுகாக்கலாம். இதன் மூலம் நோய் கட்டுப்படுத்தப்படும் என்றனர்.

    இதற்கிடையில் பாக்கு தோட்டங்களில் மர்ம ஆசாமிகள் இரவில் நுழைந்து பாக்குகளை திருடி செல்கின்றனர். பின்னர் மறுநாள் காலையில் மொத்த வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று விடுகின்றனர். இதை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் பாக்குகளை கொள்முதல் செய்யும் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அடையாள ஆவணங்கள் வைத்துள்ள விவசாயிகளிடம் மட்டுமே பாக்குகள் கொள்முதல் செய்ய வேண்டும்.

    இதுவரை பாக்கு திருடர்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இரவில் தோட்டங்களுக்குள் நுழைந்து பாக்குகளை திருடி செல்லும் கும்பலை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
    நீலகிரி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 2,500 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்தார்.
    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரியில் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மற்றும் கோவை மாவட்டத்தை இணைக்கும் சாலைகள் உள்ளன. தமிழக மற்றும் மாவட்ட எல்லையில் நாடுகாணி, கக்கநல்லா, எருமாடு, பர்லியார், குஞ்சப்பனை, பாட்டவயல், முள்ளி உள்பட 16 சோதனைச்சாவடிகள் உள்ளன. எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் இருப்பதால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீசார், வனத்துறையினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வனப்பகுதிகளை ஒட்டி உள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் வாகன திருட்டு உள்பட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தலா ஒரு அதிநவீன தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தானாகவே அந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண் புகைப்படத்துடன் பதிவு செய்யப்படுகிறது. சந்தேகப்படும்படியான நபர் குற்ற செயலில் ஈடுபட்டு தப்பினால், வாகன பதிவு எண்ணை கொண்டும், பதிவு காட்சிகளை வைத்தும் குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களை கண்காணிக்கவும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் பர்லியார், நாடுகாணி, கக்கநல்லா உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் தலா 4 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் ஒன்று அதி நவீன தானியங்கி கேமரா ஆகும். சாலை பாதுகாப்பு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு நிதியின் மூலம் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஜார்கள், வாகன நிறுத்தும் இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாவட்டம் முழுவதும் இதுவரை 2 ஆயிரத்து 500 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் மற்ற இடங்களில் கேமராக்கள் கண்காணிப்பு தேவையா? என்று கண்டறிந்து கூடுதலாக பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
    நீலகிரி மாவட்டத்தில் 113 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரியில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. கடந்த அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. நவம்பர் மாத இறுதியில் தினமும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 20-ஐ கடந்தது. கொரோனா பரவல் இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றது. தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்ந்து 14 நாட்கள் வெளியாட்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் அதிகரித்து காணப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்து உள்ளதால் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களும் குறைந்து உள்ளன. தற்போது 113 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    கோத்தகிரி அருகே மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 43). தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியா(25). இவர்களுக்கு 3½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் செல்வகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கும், அவருடைய மனைவி சந்தியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதற்கிடையில் சந்தியாவுக்கும், செல்வகுமாரின் உறவினரான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி அம்பாள் காலனியை சேர்ந்த மாரிமுத்து(28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    அதன்பின்னர் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து புதுக்கோட்டைக்கு சென்றார். தொடர்ந்து செல்வகுமார் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று, சந்தியா மற்றும் அவரது குழந்தையை தன்னுடன் கீழ்கோத்தகிரிக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் இருந்து கீழ்கோத்தகிரிக்கு செல்வகுமார் வந்தார். பின்னர் இரவு 10 மணியளவில் மாரிமுத்துவின் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென அவரது கழுத்தில் வெட்டிவிட்டு தப்பி சென்றார்.

    இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்துவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற செல்வகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நீலகிரியில் இதுவரை 43,802 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ தெரிவித்தார்.
    ஊட்டி:

    ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ தலைமை தாங்கி பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை 43 ஆயிரத்து 802 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி.(எய்ட்ஸ்) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறக்கும் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது.

    எச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கக்கூடாது. அரசு திட்டங்களில் பயன்பெற முன்வர வேண்டும். எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    எச்.ஐ.வி. பரிசோதனையை விரிவுபடுத்துவதற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 14 நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி. பாதித்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வர பஸ் பாஸ், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம், இளம் விதவை வயது வரம்பை தளர்த்தி மாத ஊதியம், முதியோர் உதவித்தொகை, இலவச மருத்துவ காப்பீடு திட்டம், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து ரேஷன் கார்டு வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் இலவச வீடு போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நீலகிரியில் எய்ட்ஸ் பாதித்த 444 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

    முன்னதாக பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 2 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, 7 பேருக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ஆவின் பாலகம் அமைக்க 4 பேருக்கு ஆணை, 2 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள், 2 பேருக்கு இலவச பஸ் பாஸ் உள்பட 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், சப்-கலெக்டர் மோனிகா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அலகு திட்ட மேலாளர் (பொறுப்பு) அறிவழகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    ஊட்டி மரவியல் பூங்காவில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
    ஊட்டி:

    நீலகிரியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் குறிஞ்சி செடிகள் பரவலாக காணப்படுகிறது. இந்த செடிகளில் பூத்துக்குலுங்கும் நீல நிற மலர்களால் நீலகிரி என்ற பெயர் வந்தது. குறிஞ்சி செடிகளில் பல வகைகள் உள்ளன. அதில் சில மலர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை, ஆண்டுக்கு ஒருமுறை, 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லட்டியில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கின. அப்போது சுற்றுலா பயணிகளை கவருவதற்காக குறிஞ்சி விழா நடத்தப்பட்டது. சமீபத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கியதை காண முடிந்தது.

    இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டியில் செயல்பட்டு வரும் மரவியல் பூங்காவில் தற்போது குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

    பூங்கா நுழைவுவாயில் பகுதியில் குறிஞ்சி செடிகளில் நீல நிறங்களில் மலர்கள் காணப்படுகிறது. இது ‘ஸட்ரோபிலாந்தஸ் குந்தியான்ஸ்’ என்ற வகையை சேர்ந்தது ஆகும். அவை கோவில் மணிகளின் உருவம் போல காட்சி அளிக்கிறது. பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை தேனீக்கள் மொய்க்க தொடங்கி உள்ளன. குறிஞ்சி மலர்கள் பூக்க தொடங்கினாலும், ஊட்டி மரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது.

    எனினும் பூங்காவுக்கு வந்து செல்லும் சில சுற்றுலா பயணிகள் மற்றும் நடைபயிற்சிக்கு வரும் உள்ளூர் மக்கள் குறிஞ்சி மலர்களை புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
    ×