என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் உள்ள எல்க்ஹில் பகுதி
    X
    ஊட்டியில் உள்ள எல்க்ஹில் பகுதி

    ஊட்டியில் கடும் பனிமூட்டம்

    ஊட்டியில் கடும் பனிமூட்டம் நிலவியது.
    ஊட்டி:

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புரெவி புயல் காரணமாக அதி கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    ஊட்டி நகரில் நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பகலிலும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. ஊட்டி எல்க்ஹில், மஞ்சனக்கொரை, கோடப்பமந்து உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் ஊட்டி அருகே வேலிவியூ, லவ்டேல் சந்திப்பு ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் இயக்கப்பட்டன.

    ஊட்டியில் பரவலாக மழை பெய்து வருவதால் வழக்கத்துக்கு மாறாக குளிர் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் வீடுகளில் முடங்கினர். மழையில் நனையாமல் இருக்க விவசாய தொழிலாளர்கள் பிளாஸ்டிக் போர்வை அணிந்து பணிகளில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை சுற்றுலா பயணிகள் குடை பிடித்த படியும், கம்பளி ஆடைகள் அணிந்தபடியும் கண்டு ரசித்தனர். இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

    பூங்காவில் மரங்களை சுற்றிலும் பனிமூட்டம் சூழ்ந்து இருந்ததை காண முடிந்தது. மேலும் குன்னூர், கோத்தகிரி, தலைகுந்தா, கேத்தி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.

    தற்போது பெய்து வரும் மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்துக்கு புரெவி புயல் எச்சரிக்கை இல்லை. இருப்பினும் கடந்த வாரம் நிவர் புயல் காரணமாக அனைத்து துறையினர் அடங்கிய குழுக்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் 2 நாட்கள் மழை இருக்கும். ஆனால் தாக்கம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிக காற்று வீசினாலோ அல்லது மழை பெய்தாலோ பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×