search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிகழ்ச்சியில் கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ, ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கியதை படத்தில் காணலாம்.
    X
    நிகழ்ச்சியில் கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ, ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கியதை படத்தில் காணலாம்.

    நீலகிரியில் இதுவரை 43,802 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை- கண்காணிப்பு அதிகாரி தகவல்

    நீலகிரியில் இதுவரை 43,802 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ தெரிவித்தார்.
    ஊட்டி:

    ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ தலைமை தாங்கி பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை 43 ஆயிரத்து 802 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி.(எய்ட்ஸ்) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறக்கும் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது.

    எச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கக்கூடாது. அரசு திட்டங்களில் பயன்பெற முன்வர வேண்டும். எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    எச்.ஐ.வி. பரிசோதனையை விரிவுபடுத்துவதற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 14 நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி. பாதித்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வர பஸ் பாஸ், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம், இளம் விதவை வயது வரம்பை தளர்த்தி மாத ஊதியம், முதியோர் உதவித்தொகை, இலவச மருத்துவ காப்பீடு திட்டம், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து ரேஷன் கார்டு வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் இலவச வீடு போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நீலகிரியில் எய்ட்ஸ் பாதித்த 444 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

    முன்னதாக பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 2 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, 7 பேருக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ஆவின் பாலகம் அமைக்க 4 பேருக்கு ஆணை, 2 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள், 2 பேருக்கு இலவச பஸ் பாஸ் உள்பட 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், சப்-கலெக்டர் மோனிகா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அலகு திட்ட மேலாளர் (பொறுப்பு) அறிவழகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×