என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், மான், கரடி, செந்நாய்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் தண்ணீர் மற்றும் உணவுக்காக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது.
மசினகுடி- ஊட்டி சாலையில் மாவனல்லா அருகே, 25-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டம், கூட்டமாக நின்றிருந்தன. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி விட்டு பார்த்தனர்.
அப்போது சில செந்நாய்கள் காட்டிற்குள் இருந்து கடமானை தரதரவென இழுத்து சாலைக்கு கொண்டு வந்தன. பின்னர் நடுரோட்டில் போட்டு விட்டு கடமானை சுற்றி வந்து அதனை தின்றன. இதனை கண்டு சுற்றுலா பயணிகளும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மக்கள் செந்நாய் அருகே சென்று விடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் இதனை வீடியோவாகவும் எடுத்தனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வனப்பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு விலங்குகள் வனத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகிறது. இதனால் பொதுமக்களும், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பணிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள சின்னகரும்பாலாம் குடியிருப்பு ஒரு குட்டியுடன் 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. மற்ற 2 குட்டிகளுடன் 9 யானைகள் தேயிலை தோட்டம் வழியாக உலிக்கல் பண்ணமடைக்கு சென்றுள்ளது. அந்த யானைகளை அங்கிருந்து கீழே கொண்டு வர வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
குன்னூர் வனத்துறை வனசரகர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் பட்டாசு வெடிக்காமலும், தகரங்களை வைத்து தட்டாமல், கூச்சலிடாமல் மக்களுக்கு இடையூறு செய்யாதவாறு இரவு, பகலாக யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டுவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். மக்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் யானையை விரட்டும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு இந்த பணியானது தொடரும் என்றனர்.
இதற்கிடையே குடியிருப்பையொட்டிய தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டத்தை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்கிறார்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மத்திய அரசுக்கு சொந்தமான தேயிலை வாரியம் உள்ளது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் அருகே தோட்ட ங்களும், அடர்ந்த வனப்பகுதியும் உள்ளது. இதனால் அடிக்கடி காட்டு விலங்குகள் உள்ளே புகுந்து விடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை வனத்திற்குள் இருந்து ஒரு சாரை பாம்பு தேயிலை வாரியத்திற்குள் வந்தது. அதனை பின்தொடர்ந்து, மற்றொரு நாக பாம்பும் வந்தது. 2 பாம்புகளும் அங்குள்ள புல்தரையில் சிறிது நேரம் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. பின்னர் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து நடனமாடியது. இதனை அங்கிருந்த ஊழியர்கள், தொழிலாளர்கள் பார்த்து அச்சம் அடைந்தனர். இதற்கிடையே ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால் பாம்புகள் பிடிபடவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட நகராமல் நின்ற பாம்புகள் யாருக்கும் எந்தவித தொந்தரவையும் கொடுக்காமல் நடனமாடி கொண்டிருந்தது. பயம் ஒருபுறம் இருந்தாலும் பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து நடனமாடுவதை ஊழியர்களும், தொழிலாளர்களும் சிறிது நேரம் நின்று கண்டு ரசித்தனர். சிலர் தங்களது செல்போனிலும் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். சிறிது நேரம் கழித்து பாம்புகள் அடர்ந்த வனத்திற்குள் சென்று விட்டன.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் தினசரி வெயில் அளவு 100 டிகிரியையும் தாண்டி கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோடை வெயிலுக்கு மத்தியில் மலைப்பிரதேசமான நீலகிரியில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. மசினகுடி பகுதியில் நேற்று காலை முதலே இதமான காலநிலை நிலவியது. மதியத்திற்கு பிறகு வானத்தில் மேகக்கூட்டங்கள் திரண்டு மழை பெய்வது போல காட்சியளித்தன.
சிறிது நேரத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக வாழைத்தோட்டம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் திடீரென சரிந்து விழுந்தது. அப்பகுதிகளில் உள்ள மின் கம்பிகளும் அறுந்தது.
இதனால் மசினகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறை மற்றும் மின்சாரத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர். இதன் பின்னர் மின் வினியோகம் சீரானது.
இந்த மழையால் வனப்பகுதியில் பசுந்தீவனம் மற்றும் விவசாய நிலங்களில் பயிர்கள் வளர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இதேபோல் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
ஊட்டியிலும் மாலையில் பலத்த மழை பெய்தது. கமர்சியல் சாலை, லோயர் பஜார், மத்திய பஸ் நிலையம், கூட்செட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஊட்டி ரெயில்வே மேம்பாலத்தின் கீழும் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தண்ணீரை அகற்ற வியாபாரிகள் சிரமப்பட்டனர்.
கோடை காலத்தை முன்னிட்டு இப்போதே ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழை சுற்றுலா பயணிகள் வருகையை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் குதிரை பந்தயம் மிகவும் பிரபலமானது ஆகும். இங்கு ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குதிரை பந்தயம் நடத்தப்படும்.
மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு அன்று குதிரைப்பந்தயம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும்.
கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு குதிரைப்பந்தயம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு குதிரைப்பந்தயம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் குதிரைப்பந்தயத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதன்படி குதிரைப் பந்தயத்தை பார்க்க பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குதிரை ஜாக்கிகளும், குதிரைகளின் உரிமையாளர்களும் மட்டுமே பங்கேற்றனர்.
இந்தநிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு உள்ளதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குதிரைப்பந்தயத்தை வெகுசிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் பந்தயத்தில் பெங்களூரு, புனே, சென்னை உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்கும் என தெரிகிறது. இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இதுபற்றி மெட்ராஸ் கிளப் நிர்வாகிகள் கூறுகையில் குதிரை பந்தயத்துக்காக மைதானத்தை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குதிரைகள் ஓடும் பாதையில் புற்கள் சமன்படுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா காரணமாக கடந்த 2020-ல் குதிரை பந்தயம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பார்வையாளர்கள் அனுமதியில்லாமல் பந்தயங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் பந்தயத்துக்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் மெட்ராஸ் ரேஸ் கிளப் செய்து வருகிறது என்றனர்.
சமவெளி பகுதிகளில் நிலவும் வெப்பத்தில் இருந்து இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக விடுமுறை தினமான சனி, ஞாயிறுகளில் கூட்டம் அலைமோதுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழாவும் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. செடிகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு, தொட்டிகளில் வைக்கப்பட்டு வருகின்றன. இதனையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை 9 ஆயிரம் பேர் வந்திருந்தனர். இதுவே நேற்று 14 ஆயிரமாக அதிகரித்தது. அதேபோல, ஊட்டி அரசினர் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 3,500 பேர் வந்திருந்த நிலையில், நேற்று 4,500 ஆக அதிகரித்தது. குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு சனிக்கிழமை 2,500 பேரும், நேற்று 3,400 பேரும் வந்தனர்.
அதேபோல ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, கல்லாறு பழப்பண்ணை ஆகிய பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா அருவி, அவலாஞ்சி, மேல்பவானி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். அவர்கள் படகு சவாரி செய்தும், இயற்கை அழகையும் கண்டு ரசித்து சென்றனர்.
ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்லும் சாலை கடந்த ஆண்டு பெய்த மழையால் துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது. அந்த பணிகள் முடிந்து நேற்று திறக்கப்பட்டது.
இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் ஊட்டியில் புகழ்பெற்ற சுற்றுலா மையமான தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரையும், தொலைவிலுள்ள மலைப் பகுதிகளையும் காண நீண்ட வரிசையில் காத்திருந்து, இயற்கை காட்சிகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், தட்டு உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குடிநீர், குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனையும் மீறி யாராவது பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்களா? என்பதும் குறித்தும் அதிகாரிகள் அடிக்கடி கடைகளில் சோதனை மேற்கொண்டு, அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு அபராதம் விதிப்பதால் மட்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியாது. பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுவது கண்டு பிடிக்கப்பட்டால் உடனே அந்த கடையை மூடி சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்பேரில் நேற்று முன்தினம் கலெக்டர் அம்ரித் தலைமையில் அதிகாரிகள் ஊட்டியிலும், குன்னூர், கூடலூர் பகுதிகளிலும் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
நேற்று தொடர்ந்து 2-வது நாளாக கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், ஊட்டியில், நகராட்சி நகர்நல அலுவலர் ஸ்ரீதரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வைரம், மாசுகட்டுபாடு வாரிய உதவி மேலாளர் புனிதா தலைமையிலான குழுவினர் கடைகள், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 5 கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்திய வணிக நிறுவனத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.
இதேபோல், கூடலூரில், ஆர்.டி.ஓ., சரவண கண்ணன் தலைமையில் ஆய்வு செய்த அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 2 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் 50 கடைகளில் சோதனை செய்து, 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 27 வயது இளம்பெண். இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் அந்த இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த இளம்பெண் கடந்த 22-ந் தேதி தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில் இந்த இளம்பெண் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தபோது குன்னூரை சேர்ந்த திருமணமான வாலிபருக்கும் அவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதும்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய வந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. போலீசாரின் முதல் தகவல் அறிக்கையிலும், காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் தற்கொலை செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அந்த இளம்பெண்ணை கள்ளக்காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து போலீசார் பெண்ணின் கள்ளக்காதலனான குன்னூரை சேர்ந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர், தனது நண்பர்கள் தான் அவரது தற்கொலைக்கு காரணம் என தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டரா என்ற கோணத்தில் விசாரிக்க தொடங்கி உள்ளனர்.
மேலும் வீடியோவை அனுப்பி மிரட்டியதாக கூறப்படுவதால் செல்போனில் ஏதாவது தகவல்கள் இருக்கிறதா? என போலீசார் தேடி பார்த்தனர். ஆனால் இளம்பெண் இறந்த பின்பு அவரது செல்போனை காணவில்லை.அதனை எடுத்தவர்கள் யார்? எதற்காக எடுத்தனர் எனவும் விசாரிக்கின்றனர். அந்த செல்போன் கிடைத்த பின்னரே அதில் வீடியோ, ஆபாச போட்டோக்கள் உள்ளதா? என்பது குறித்து தெரியவரும் எனவும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஊட்டி:
சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் வனத்தில் வறட்சி நிலவுகிறது.
இது வனப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. இதனால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தை சுற்றி உள்ள வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் குன்னூர் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்து உள்ளன.
இவை கடந்த ஒரு வார காலமாக ரன்னிமேடு, காட்டேரி, கிளண்டேல் போன்ற பகுதிகளில் முகாமிட்டுள்ளன. குறிப்பாக தேயிலை தோட்டங்கள் மற்றும் சோலை மரக்காடுகளில் உலா வருகின்றன.
இந்த நிலையில் குன்னூர் அருகேயுள்ள கரும்பாலம் பகுதியில் வனப்பகுதி ஒட்டியுள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் நேற்று குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டுள்ளன.
இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. மேலும் குடியிருப்பு பகுதி அருகே யானைகள் நிற்பதால் பொதுமக்களும், தொழிலாளர்களும் அச்சத்துடன் உள்ளனர்.
தொடர்ந்து இரவு பகல் பாராமல் தேயிலை எஸ்டேட்டில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் புதர் சூழ்ந்த பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை கூட்டம் மீண்டும் புதர் சூழ்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஓடை புறம்போக்கு பகுதிகளில் உள்ள நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்ற வருவாய்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். இதன்படி குந்தா தாலுகா கீழ்குந்தா, பிக்கட்டி, இத்தலார் வருவாய் கிராமங்களுக்குட்பட்ட முள்ளிகூர்ஆடா, கட்லாடா, பூதியாடா பகுதிகளில் ஓடைபுறம்போக்கு நிலங்களை ஆக்ரமித்து அங்கு தேயிலை, மலைகாய்கறிகள் உள்ளிட்ட பயிரிட்டு விவசாயம் செய்வதை வருவாய் துறையினர் கண்டறிந்தனர்.
இதை தொடர்ந்து குந்தா தாசில்தார் இந்திரா தலைமையில் டெபுடி தாசில்தார் ஜெபசிங், வருவாய் ஆய்வாளர்கள் வேடியப்பன், பரமேஸ்வரி, கிராமநிர்வாக அலுவலர்கள் செந்தில், தினேஷ் உள்ளிட்ட வருவாய்துறையினர் சம்பவ இடங்களில் ஆக்ரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.
ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் தேயிலை செடிகளை அகற்றியும் அப்பகுதிகளில் கட்டப்பட்டிருந்த மாட்டு கொட்டகைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. வருவாய்துறையினரின் நடவடிக்கையின் மூலம் குந்தா தாலுகாவில் சுமார் 35 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 17 ஏக்கர் ஓடை புறம்போக்கு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின் மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார், சந்தோஷ்சாமி ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய்பாபு முன்னிலையில் சயான், மனோஜ் இருவரும் கோர்ட்டில் ஆஜராகினர். மீதம் உள்ள 8 பேர் ஆஜராகவில்லை.
அரசு சிறப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ், ஆஜராகினர். சென்னை ஐகோர்ட்டில் திபு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நீதிபதி கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதுகுறித்து, அரசு சிறப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடநாடு வழக்கு விசாரணையில் இதுவரை 202 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சில முக்கிய நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் பல செல்போன்களும் கிடைத்துள்ளன. மின்னணு ஆதாரங்கள், தொலைத்தொடர்பு போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவது குறித்தும் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
தடயங்களை சேகரிக்கவும், கூடுதல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.






