என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை ஆகியவை அதிகளவில் உள்ளன. சில நேரங்களில் அவை ஊருக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக காட்டு யானைகள் உலா வருகின்றன. இந்த யானைகள் ரன்னிமேடு, கிளன்டல், பில்லிமலை, சின்ன கரும்பாலம் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீரை தேடி வருகிறது.
தேயிலை தோட்டங்களிலும் காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது. நேற்று கரிமரா எஸ்டேட் பகுதியில் யானைகள் கூட்டம் நுழைந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டினர். இதனால் யானைகள் தேயிலைத் தோட்டம் வழியாக வந்து காட்டேரி சாலையை கடந்தது. பின்னர் அங்கிருந்து சிறிய வனப்பகுதியில் சென்றது.
குன்னூர் - மஞ்சூர் நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும் அங்கு தேயிலை தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் காட்டு யானைகளை பார்த்ததும் பயந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குன்னூர் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து விரட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது தூதூர்மட்டம். இந்த பகுதியில் அதிகமான தேயிலை தோட்டங்கள் உள்ளன.
இங்குள்ள மக்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று காலையும் அப்பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் மதிய வேளையில் பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று 200 மீட்டர் உயரத்திற்கு வானில் பறந்தபடி தேயிலை தோட்ட பகுதிக்குள் வந்து விழுந்தது.
இதனை பார்த்ததும் பதறிபோன அந்த பகுதி தேயிலை தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சிலர் பல அடி தூரம் நின்று கொண்டு, தங்கள் செல்போனில் கார் பறந்து வந்த காட்சியையும், தேயிலை தோட்டத்திற்குள் விழுவதையும் வீடியோவாக படம் எடுத்தனர்.
பின்னர் தங்கள் கிராமத்திற்குள் சென்று கார் ஒன்று வானில் பறந்து வந்து தேயிலை தோட்டத்திற்குள் விழுந்து விட்டதாக கூறி ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர்.
மேலும் அப்பகுதி மக்கள் கார் விழுந்து கிடந்த இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது தான் கார் பறந்து வந்து விழுந்தது விபத்து அல்ல என்பதும் சினிமா படப்பிடிப்பு காட்சி என்பதும் தெரியவந்தது.
நடிகர் நாகர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.
இந்த படத்திற்காக நேற்று தூதூர் மட்டம் பகுதியில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டதும், அப்போது கார் ஒன்று பறந்து தேயிலை தோட்டத்தில் விழுவது போன்று காட்சி எடுக்கப்பட்டது குறித்தும் பொதுமக்களுக்கு படப்பிடிப்பு குழுவினர் விளக்கினர்.
இதன் பின்னரே அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஊட்டி:
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருவள்ளுவர் சாலை மதுபான கடையில் கடந்த மார்ச் 7-ந் தேதி, ஒருவர் ரூ.500 கொடுத்து மது வாங்கினார். அப்போது அந்த நோட்டை வாங்கி பார்த்த ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் விரைந்து வந்து, அந்த நோட்டை வாங்கி பார்த்தபோது, அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மதுபான கடையில் கள்ளநோட்டு கொடுத்ததாக பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ஜெயபால், மனோஜ், சரண், கமல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2.42 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளநோட்டு வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த பிரதீப், ரகுபதி, நாகூர் மீரான், தமீன் அன்சாரி, சரண்ராஜ் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் எங்கிருந்து கள்ளநோட்டு தயாரிக்கும் எந்திரங்கள் வாங்கப்பட்டது என்று விசாரிக்கப்பட்டது.
அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அச்சகம் நடத்தி வரும் தாமஸ் அமலோற்பவ ராஜ்(39) என்பவர் கள்ளநோட்டு தயாரிக்க தேவையான எந்திரங்கள் மற்றும் மை உள்ளிட்டவற்றை வாங்கி தந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்வதற்காக சிறப்பு தனிப்படையினர் ஊட்டிக்கு வந்தனர். பின்னர் ஊட்டியில் தாமஸ் அமலோற்பவ ராஜை கைது செய்து, புதுச்சேரி அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி விட்டு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்கடன் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது.
இந்த பயிற்சி கல்லூரி வளாக பகுதியில் ஜிம்கானா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் ஆண்டுதோறும் ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் மவுண்டன் ஜிம்கானா குழுவினர் சார்பில் குதிரை சவாரி மற்றும் சாகச போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான குதிரை சவாரி மற்றும் சாகச போட்டிகள் நேற்று ஜிம்கானா மைதானத்தில் நடந்தது.
குதிரைகளுக்கான ஓட்டப்பந்தயம், ஆசர்லே, நான்கு ஜம்பிங், ஷோ ஜம்பிங், பால் அண்ட் பக்கெட் ரேஸ் உள்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர், வீராங்கனைகள் குதிரை சாகச போட்டியில் பங்கேற்றனர்.
இதுதவிர நெருப்பு வளையத்திற்குள் குதிரைகள் பாயும் சாகச நிகழ்ச்சி, ஓடும் குதிரையில் அமர்ந்த வீரர், ஈட்டி எறிதல் உள்பட பல்வேறு சாகச போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்குடன் பரிசுகளும் அங்கேயே வழங்கப்பட்டது. பரிசுகளை ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் மோகன் வழங்கினார்.
இந்த போட்டிகளை ராணுவ உயர் அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 நாட்களாக ரன்னிமேடு, கிளன்டல், பில்லிமலை, சின்ன கரும்பாலம் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் நீரோடை பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று கிளன்டல் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் வீடுகளில் வளர்க்க கூடிய வாழை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. வாழை இலைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்துகிறது.
யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர அச்சமடைந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளில் வாழைமரங்கள் அதிகம் காணப்படுவதால் கடந்த 2 நாட்களாக யானைகள் முகாமிட்டு வாழைமரங்களை சேதப்படுத்தி வருகிறது.
இப்பகுதியில் தெரு விளக்குகள் சரிவர எரியாத நிலையில் உள்ளதால் இரவு வேளைகளில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது.
வனத்துறையினர் தொடர்ந்து யானைகளை கண்காணித்து வந்தாலும் அதனை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே விரைவில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் இரவு வேளைகளில் யானைகள் சாலையை கடக்கும் சாத்தியகூறு உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவும் இரவு நேரத்தில் அப்பகுதிமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.






