என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 நாட்களாக ரன்னிமேடு, கிளன்டல், பில்லிமலை, சின்ன கரும்பாலம் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் நீரோடை பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று கிளன்டல் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் வீடுகளில் வளர்க்க கூடிய வாழை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. வாழை இலைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்துகிறது.
யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர அச்சமடைந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளில் வாழைமரங்கள் அதிகம் காணப்படுவதால் கடந்த 2 நாட்களாக யானைகள் முகாமிட்டு வாழைமரங்களை சேதப்படுத்தி வருகிறது.
இப்பகுதியில் தெரு விளக்குகள் சரிவர எரியாத நிலையில் உள்ளதால் இரவு வேளைகளில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது.
வனத்துறையினர் தொடர்ந்து யானைகளை கண்காணித்து வந்தாலும் அதனை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே விரைவில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் இரவு வேளைகளில் யானைகள் சாலையை கடக்கும் சாத்தியகூறு உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவும் இரவு நேரத்தில் அப்பகுதிமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.






