என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
    X
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

    ஊட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் ஊட்டியில் புகழ்பெற்ற சுற்றுலா மையமான தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
    ஊட்டி:

    சமவெளி பகுதிகளில் நிலவும் வெப்பத்தில் இருந்து இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    குறிப்பாக விடுமுறை தினமான சனி, ஞாயிறுகளில் கூட்டம் அலைமோதுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழாவும் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. செடிகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு, தொட்டிகளில் வைக்கப்பட்டு வருகின்றன. இதனையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை 9 ஆயிரம் பேர் வந்திருந்தனர். இதுவே நேற்று 14 ஆயிரமாக அதிகரித்தது. அதேபோல, ஊட்டி அரசினர் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 3,500 பேர் வந்திருந்த நிலையில், நேற்று 4,500 ஆக அதிகரித்தது. குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு சனிக்கிழமை 2,500 பேரும், நேற்று 3,400 பேரும் வந்தனர்.

    அதேபோல ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, கல்லாறு பழப்பண்ணை ஆகிய பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா அருவி, அவலாஞ்சி, மேல்பவானி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். அவர்கள் படகு சவாரி செய்தும், இயற்கை அழகையும் கண்டு ரசித்து சென்றனர்.

    ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்லும் சாலை கடந்த ஆண்டு பெய்த மழையால் துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது. அந்த பணிகள் முடிந்து நேற்று திறக்கப்பட்டது.

    இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் ஊட்டியில் புகழ்பெற்ற சுற்றுலா மையமான தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    இதன் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரையும், தொலைவிலுள்ள மலைப் பகுதிகளையும் காண நீண்ட வரிசையில் காத்திருந்து, இயற்கை காட்சிகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
    Next Story
    ×