என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டி கோர்ட்டில் ஆஜராக வந்த சயான், மனோஜ்
    X
    ஊட்டி கோர்ட்டில் ஆஜராக வந்த சயான், மனோஜ்

    கொடநாடு வழக்கில் 202 சாட்சிகளிடம் விசாரணை நிறைவு- அரசு வக்கீல் தகவல்

    கொடநாடு வழக்கு விசாரணையில் இதுவரை 202 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு சிறப்பு வக்கீல் ஷாஜகான் கூறினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின் மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார், சந்தோஷ்சாமி ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய்பாபு முன்னிலையில் சயான், மனோஜ் இருவரும் கோர்ட்டில் ஆஜராகினர். மீதம் உள்ள 8 பேர் ஆஜராகவில்லை.

    அரசு சிறப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ், ஆஜராகினர். சென்னை ஐகோர்ட்டில் திபு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நீதிபதி கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    இதுகுறித்து, அரசு சிறப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு வழக்கு விசாரணையில் இதுவரை 202 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சில முக்கிய நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் பல செல்போன்களும் கிடைத்துள்ளன. மின்னணு ஆதாரங்கள், தொலைத்தொடர்பு போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவது குறித்தும் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

    தடயங்களை சேகரிக்கவும், கூடுதல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.




    Next Story
    ×