என் மலர்
நீலகிரி
- தனியார் எஸ்டேட்டில் பலாப்பழ சீசன் என்பதால் பலாப்பழகத்தை ருசிக்கும் நோக்கில் யானைகள் சுற்றி திரிகின்றன.
- அவ்வப்போது யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. இதனால் யானைகள் எப்போது வரும் என்ற அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர்.
அரவேணு:
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் இடையே குஞ்சப்பனை ஊராட்சிக்கு உட்பட்ட மாமர தனியார் எஸ்டேட் பகுதி உள்ளது.
அதில் 6 பெரிய யானை, 2 குட்டி யானைகள் முகாமிட்டு உள்ளது. தனியார் எஸ்டேட்டில் பலாப்பழ சீசன் என்பதால் பலாப்பழகத்தை ருசிக்கும் நோக்கில் யானைகள் சுற்றி திரிகின்றன. அங்குள்ள தொழிலாளர்கள் விரட்டினால் யானை கள் கோழிக்கரை கிராமத்துக்குள் புகுந்து விடுகின்றன.
மேலும் அவ்வப்போது யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. இதனால் யானைகள் எப்போது வரும் என்ற அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர். எனவே யானைகளை அங்கிருந்து விரட்ட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
- துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் இருந்தது.
- போலீசாரின் விசாரணையில், சோமன் கடந்த, 2014-ம் ஆண்டு துப்பாக்கி தயாரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சப்பந்தோடு பகுதியில் துப்பாக்கி தயாரிப்பு பட்டறை ஒன்று செயல்பட்டு வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தேவாலா டி.எஸ்.பி., செந்தில்குமார், சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அந்த பகுதி முழுவதும் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் சோமன்(50) என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் அந்த வீட்டில் ஒரு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் இருந்தது.
இதனை பார்த்ததும் அதிகாரிகள் அதிர்ச்சியாகினர். போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சோமன் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிப்பு உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீஸ் சூப்பிரண்டுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த சோமன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், சோமன் கடந்த, 2014-ம் ஆண்டு துப்பாக்கி தயாரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ந்துள்ளது. இதுதவிர கேரள மாநிலத்தில் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு துப்பாக்கி தயாரித்து கொடுத்த வழக்கும் இவர் மீது உள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் சோமன் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவருடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.
- தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர நடைபாதை கடைகள் உள்ளன.
- நகராட்சி நிர்வாகத்தினரை சாலையோர வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர நடைபாதை கடைகள் உள்ளன. இங்கு பூக்கள், பழங்கள், நொறுக்கு தீனி உள்பட பல்வேறு வியாபாரிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடை வைத்து நடத்தி வந்தனர்.
நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊட்டியில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு தாவரவியல் பூங்கா சாலையில் இருந்த கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் மீண்டும் அந்த இடத்தில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் அரசு தாவரவியல் பூங்கா சாலை வழியாக துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்- அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி வருவதால் அந்த சாலையில் உள்ள கடைகளை நிரந்தரமாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் கடைகளை அகற்றும்படி நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் 2 வருடங்களாக கொரோனா காரணமாக வியாபாரம் இல்லாததால் இந்த முறை கோடை சீசனுக்கு மட்டும் அனுமதிக்கும்படி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அதிகாரிகளுடன் வாக்குவாதம் இதைத் தொடர்ந்து இதுவரை வியாபாரிகள் கடைகளை அகற்றாதால் நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் எந்திரம் மூலமாக அங்கு ஆக்கிரமித்து இருந்த கடைகளை அகற்ற வந்தனர். இதனால் ஒரு சில வியாபாரிகள் தங்களது கடைகளை தாங்களாகவே காலி செய்து கொண்டு சென்றனர்.
மேலும் காலி செய்யாத கடைகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அப்போது நகராட்சி நிர்வாகத்தினரை சாலையோர வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தனர்.
- தேவாலா அருகே அட்டி பகுதியில் சம்பவத்தன்று இரவு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.
- காட்டு யானை ஒன்று வீட்டைத்தாக்கி சேதப்படுத்திக் கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அரவேணு:
கூடலூர் தாலுகா தேவாலா அருகே அட்டி பகுதியில் சம்பவத்தன்று இரவு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. மேலும் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிஜூ, வேலு ஆகியோரது வீட்டின் மேற்கூரை மற்றும் சமையலறை பகுதியை உடைத்து சேதப்படுத்தியது. இந்த சமயத்தில் வீட்டில் இருந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் பயத்தில் கூச்சலிட்டனர்.
இதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வந்து உடைமைகளை சேதப்படுத்துவதால் நஷ்டத்துக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஆதிவாசியின் வீடு இதேபோல் கோத்தகிரி அருகே ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சுண்டபட்டி பழங்குடியின ஆதிவாசி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் என்பவரது மகன் சந்திரன். கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர்கள் மற்றும் கூரைகள் திடீரென இடிந்து விழும் சத்தம் கேட்டு அலறியடித்து எழுந்து, வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது, காட்டு யானை ஒன்று வீட்டைத்தாக்கி சேதப்படுத்திக் கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் அங்கிருந்து ஓடிச் சென்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். அவர்கள் தீப்பந்தங்களைக் காண்பித்து குடியிருப்புப் பகுதியில் இருந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் இது குறித்து கோத்தகிரி வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதே போல கடந்த 1-ந் தேதி காக்கா கூண்டு கிராமத்தைச் சேர்ந்த மருதாசலம் என்ற ஆதிவாசி தொழிலாளியின் வீட்டையும் உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதால் பழங்குடியின கிராம மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், காட்டுயானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது.
- கரடி ஒன்று காந்திபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது
குன்னூர்:
குன்னூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. இவைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கோவில்களில் வைத்திருக்கும் எண்ணெய் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி சென்று விடுகின்றன.
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு பொது மக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.
சம்பவத்தன்று, இரவு கரடி ஒன்று காந்திபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் அங்கிருந்த அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை சேதப்படுத்தி சென்று விட்டது.
இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஒரு வார காலமாக குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
- ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் ஊட்டி அரசு கலைகல்லூரியில் நடைபெற்றது.
- ஏற்பாடுகளை வேதியியல் துறையின் இணை பேராசிரியர்கள் முனைவர்கள் ஜீபி மற்றும் கோமதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் உதகை ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் வேதியியல் துறையின் சார்பாக மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் ஊட்டி அரசு கலைகல்லூரியில் நடைபெற்றது.
ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஆனந்தவிஜயகுமார் தலைமை தாங்கினார்.கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு)முனைவர் எபநேசர், மகபேறுசிறப்பு மருத்துவர் பவ்யா மற்றும் கலைகல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் கனகாம்பாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோமதி வரவேற்றார்.
இதில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜூபி, பார்மகாலேஜ் துறை தலைவர் முனைவர் பிரவின், ஈசா யோக மையத்தின் உதவியாளர் சிவக்குமார், முனைவர் கிருஷ்ணவேணி, பேராசிரியர் அருண், விரிவுரையாளர் பிரியதர்ஷனி உள்பட பலர் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறையின் இணை பேராசிரியர்கள் முனைவர்கள் ஜீபி மற்றும் கோமதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
- செவிலியர் பயிற்சி மாணவி ஒருவரிடம், மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் செவிலியர் ஒருவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுரேசை விரைவில் போக்சோ சட்டத்தில் கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஊட்டி:
ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியா் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகளும் படித்து வருகின்றனர்.
கடந்த மாதம் செவிலியர் பயிற்சி மாணவி ஒருவரிடம், மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் செவிலியர் ஒருவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம்போட்டு அங்கிருந்து தப்பி சென்றார். மேலும் இதுகுறித்து மாணவி ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி டீன் மனோகரியிடம் புகாா் அளித்துள்ளாா்.
அந்த புகாரின்பேரில் மருத்துவமனை டீன் மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட விசாகா கமிட்டி சாா்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட முயற்சித்த புகாரின் பேரில் மருத்துவமனை ஆண் செவிலியா் சுரேஷ்(38) என்பவரை மருத்துவக் கல்லூரி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பாக விசாரணையும் நடக்கிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நர்சிங் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுரேசை விரைவில் போக்சோ சட்டத்தில் கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகள் பேரிடா் அபாயமுள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளுக்கு 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- கனமழையின்போது பாதிக்கப்படும் பொதுமக்களை தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன
ஊட்டி:
நீலகிரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை கொட்டியது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் தலைமையில் ஊட்டியில் நடைபெற்றது.கூட்டத்துக்கு, மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்துக்கு பின்னா் அமைச்சா் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழையை எதிா்கொள்வது தொடா்பாக, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, வனத்துறை, மின்சாரத் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பருவ மழையை எதிா்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகள் பேரிடா் அபாயமுள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளுக்கு 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 6 வட்டங்களுக்கு துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். கன மழையினால் ஏற்கெனவே வீடுகள் சேதமடைந்த 16 குடும்பங்களுக்கு ரூ.65,600 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கனமழையின்போது பாதிக்கப்படும் பொதுமக்களை தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. இம்முகாம்களில் தேவையான உணவு, குடிநீா், மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவினா், மருந்துகள் போன்றவற்றை தயாா் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலைகளில் மரம் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளதோடு, நகராட்சி நிா்வாகம் சாா்பில் கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம் , ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- கோத்தகிரி அருகே உள்ள இருப்புக்கல் கிராமத்தில்இரவு நேரத்தில் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது.
- கரடி சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இரவில் உலா வருவதால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்துள்ளனர்.
அரவேணு:
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.
இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள இருப்புக்கல் கிராமத்தில்இரவு நேரத்தில் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது. அவ்வழியாகச் சென்ற வாகனத்துக்கு வழி விடாமல் சாலையிலேயே சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு ஓடிச் சென்று அருகிலிருந்த தேயிலைத் தோட்டத் திற்குள் புகுந்து மறைந்தது.
கரடி சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இரவில் உலா வருவதால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்துள்ளதுடன், இரவு நேரங்களில் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்த்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு அருகில் கரடி ஒன்று பெண்ணை தாக்கி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது மீண்டும் அதே பகுதியில் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தைக் கண்காணித்து, கரடியை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கோத்தகிரி அருகே உள்ள அந்தியூர்மட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
அரவேணு:
கோத்தகிரி அருகே உள்ள அந்தியூர்மட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
கார்த்திக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரவில் கார்த்திக்கின் தந்தை வேலைமுடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கார்த்திக் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
மேலும் சோலூர் மட்டம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆனைகட்டி பகுதியில் காட்டு யானைகள், பறவைகள், மான்கள், புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
- யானையின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் யானை இறந்து நீண்ட நாட்கள் இருக்கும் என தெரிகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆனைகட்டி பகுதியில் காட்டு யானைகள், பறவைகள், மான்கள், புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகம், சீகூா் சரகத்தில் உள்ள ஆனைகட்டி பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அழுகிய நிலையில் யானையின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேற்று வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடலை பார்வையிட்டனர்.
அப்போது யானையின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் யானை இறந்து நீண்ட நாட்கள் இருக்கும் என தெரிகிறது. தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
ஆனைகட்டி வனப்பகுதியில் யானை அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டோம். அப்போது இறந்து கிடந்த யானை 22 வயது பெண் யானை என்பது தெரியவந்தது. இருப்பினும் யானை இறந்ததற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
பிரேத பரிசோதனைக்குப் பின்னா் யானையின் உடல் பாகங்களை டி.என்.ஏ. சோதனைக்காக சென்னைக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் வந்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் சுற்றி திரிவதால் மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்
- நவாநகா் பேலஸ் பகுதியில் உள்ள புல்வெளியில் புலி படுத்திருக்கும் காட்சிகள் தற்போது வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக சிறுத்தை, கரடி, காட்டெருைம போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் சுற்றி திரிவதால் மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில தினங்களாக ஊட்டி நகரின் முக்கிய பகுதியான மாா்லிமந்து, நவா நகா் பேலஸ் பகுதிகளில் புலியின் நடமாட்டம் இருப்பதாகவும், 2 மாடுகளை அடித்து கொன்றதாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினரும் ஊட்டி நகர் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் நவாநகா் பேலஸ் பகுதியில் உள்ள புல்வெளியில் புலி படுத்திருக்கும் காட்சிகள் தற்போது வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த காட்சியானது வேகமாக பரவி வருகிறது.
குடியிருப்பையொட்டி புல்வெளி பகுதியில் புலி சுற்றி திரியும் காட்சி அப்பகுதி மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் இரவு நேரங்களில் வீடுகளை வீட்டு வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். மேலும் வனத்துறையினரும் இரவு நேரங்களில் வெளியில் வருவதையும், தவிர்க்குமாறும், பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.






