என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பந்தலூர் அருகே வீட்டில் துப்பாக்கி, உதிரி பாகங்கள் பறிமுதல்- முதியவர் மீது வழக்கு
    X

    பந்தலூர் அருகே வீட்டில் துப்பாக்கி, உதிரி பாகங்கள் பறிமுதல்- முதியவர் மீது வழக்கு

    • துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் இருந்தது.
    • போலீசாரின் விசாரணையில், சோமன் கடந்த, 2014-ம் ஆண்டு துப்பாக்கி தயாரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சப்பந்தோடு பகுதியில் துப்பாக்கி தயாரிப்பு பட்டறை ஒன்று செயல்பட்டு வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தேவாலா டி.எஸ்.பி., செந்தில்குமார், சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அந்த பகுதி முழுவதும் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் சோமன்(50) என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் அந்த வீட்டில் ஒரு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் இருந்தது.

    இதனை பார்த்ததும் அதிகாரிகள் அதிர்ச்சியாகினர். போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சோமன் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிப்பு உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீஸ் சூப்பிரண்டுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த சோமன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    போலீசாரின் விசாரணையில், சோமன் கடந்த, 2014-ம் ஆண்டு துப்பாக்கி தயாரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ந்துள்ளது. இதுதவிர கேரள மாநிலத்தில் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு துப்பாக்கி தயாரித்து கொடுத்த வழக்கும் இவர் மீது உள்ளது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் சோமன் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவருடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.

    Next Story
    ×