என் மலர்
நீலகிரி
- கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
- பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை மதியம் தொடங்கிய மழை தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை வரை பெய்தது.
மழையால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். மரங்கள் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கூடலூா் முற்றிலுமாக இருளில் மூழ்கியது.
கூடலூரை அடுத்துள்ள மொளப்பள்ளி, இருவல் பழங்குடி கிராமங்களை வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டதால் வருவாய்த் துறையினா் அப்பகுதியில் வசிக்கும் 20 குடும்பங்களைச் சோ்ந்த 72 பேரை தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கவைத்துள்ளனா்.
இந்தநிலையில், அமைச்சா் கா.ராமசந்திரன், முகாமில் தங்கவைக்கப்பட்ட பழங்குடி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
- நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
- கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மழைக்கு பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் கூடலூர் அருகே தேன்வயல், மண்வயல் ஆகிய பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று அங்கிருந்தவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
ஓவேலி அடுத்த சூண்டியில் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதேபோல் கூடலூர் ஹெல்த்கேம் காவலர் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலர் குடியிருப்புகளில் நின்ற மரங்களும் முறிந்து மின்கம்பம் மீது விழுந்தது. இதனால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.
கீழ்நாடுகாணியில், சாலையில் நின்ற மரம் விழுந்தது. ஊட்டி-கூடலூர் சாலையில் கிளன்மார்கன், கல்லட்டி 4-வது கொண்டை ஊசி வளைவு, எமரால்டு சாலை, குந்தா, பெர்ன்ஹில், உலிக்கல் சாலையில் 2 இடங்கள், கிராம பகுதிகளில் பல இடங்கள் என மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
அந்தந்த பகுதிகளில் விழுந்த மரங்களை தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெட்டி அகற்றி வருகின்றனர்.
சளிவயல் பகுதியில் சாலையின் குறுக்கே மின்கம்பம் சரிந்து விழுந்தது. இதுபோன்ற கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல கிராமங்கள் மின்வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. இதேபோல் ஏராளமான இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் ஊட்டி, மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
- நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 32 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது.
- கூடலூர், நடுவட்டம்-35 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 32 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அவலாஞ்சி-332, அப்பர் பவானி-198 பந்தலூர்-137, சேரங்கோடு-86 எமரால்டு-57, தேவலா-50, பாடந்தொரை-41, ஓவேலி-37, கூடலூர், நடுவட்டம்-35 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- 4-ம் மைல் பகுதியில் முக்கிய சாலை வழியாக தினமும் காட்டுயானை காலை மற்றும் இரவில் ஊருக்குள் வருகிறது.
- யானை ஊருக்குள் தினமும் வருவதாக கூறி வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
கூடலூர் அருகே கல்லிங்கரை, 4-ம் மைல் பகுதியில் முக்கிய சாலை வழியாக தினமும் காட்டுயானை காலை மற்றும் இரவில் ஊருக்குள் வருகிறது.
நேற்று காலை 7 மணிக்கு கல்லிங்கரை-4-ம் மைல் சாலையில் காட்டு யானை வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது.
இதை அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது காட்டு யானை ஊருக்குள் தினமும் வருவதாக கூறி வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இதனிடையே சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் அறிவித்தனர். பேச்சுவார்த்தை இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார், கூடலூர் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது காட்டுயானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அது சாத்தியம் இல்லாதது, கிராம மக்களின் கோரிக்கையின்படி காட்டுயானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் விளக்கம் அளித்தனர்.
அதற்கு காட்டுயானை ஊருக்குள் வரும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும், மேலும் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொண்டதால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக கிராம மக்கள் அறிவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே காட்டுயானை வருகையை தடுக்க வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
- கூடலூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- நகர மன்ற உறுப்பினர்கள் அவர்களது கருத்துக்களையும், நகர மன்ற தலைவி அவரது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.
ஊட்டி:
கூடலூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் கூடலூர் நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் அவர்களது கருத்துக்களையும் நகர மன்ற தலைவி அவரது கருத்துக்களையும் பதிவு செய்தனர். இக்கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீனி, நகர துணைச் செயலாளர்கள் ஜபருல்லா, ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் பொருளாளர் தமிழ்ழகன், நகர் மன்ற தலைவர் பரிமளா , நகர்மன்ற உறுப்பினர்கள் வெண்ணிலா, சத்தியசீலன், ஆபீதா, தனலட்சுமி, மும்தாஜ், உஷா, நிர்மல், கவுசல்யா, சகுந்தலா, இளங்கோ,ஜெயலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
- வனப் பகுதிகளிலும், பொது இடங்களிலும் காலி மது பாட்டில்கள் தேங்குவது தவிா்க்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில் 75 சதவீத காலி மது பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி பாட்டில்களை பொது இடங்களில் வீசிவிட்டு செல்வதை தவிா்க்க காலி மதுபான பாட்டில்களை சேகரிக்கும் மையம் 15 இடங்களில் மாவட்ட நிா்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளில் கடந்த மே 15-ந் தேதி முதல் விற்பனை செய்யப்படும் மதுபான புட்டிகளின் மேல் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
காலி பாட்டில்களை எந்தவொரு மதுபான கடையிலும் கொடுத்து ரூ.10 திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் வனப் பகுதிகளிலும், பொது இடங்களிலும் காலி மது பாட்டில்கள் தேங்குவது தவிா்க்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து ஜூலை 31-ந் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட பாட்டில்களில் 75 சதவீத காலி பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊட்டி முத்தோரை பகுதியில் சேதடைந்த சாலையில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்தது.
- அதிக அளவில் மழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.
ஊட்டி
ஊட்டியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரணப் பணிகளை வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் ேநரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஊட்டி- அவலாஞ்சி சாலையில் முத்தோரை பகுதியில் சேதடைந்த சாலையில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி, வேளாண் பொறியியல் துறை சாா்பில் பைகமந்து முதல் பாலாடா வரை கால்வாய் தூா்வாரும் பணி, கல்லக்கொரை கிராமத்தில் அபாயகரமான மரங்களை தேசிய பேரிடா் மீட்பு குழுவினா் அகற்றும் பணி, பாலகொலா ஊராட்சிக்குள்பட்ட பி.மணியட்டி, துளிதலை சாலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு பணிகளை விரைவாக முடித்திட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது:-
மழையினால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், நிவாரண பணிகளை கண்காணிக்கவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக ஆனந்தகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருடன் மாவட்ட கலெக்டர் அம்ரித்தும் பருவ மழை பாதிப்புகளை எதிா்கொள்ள தீவிரமாக பணியாற்றி வருகின்றாா்.
நீலகிரி மாவட்டத்தில் இயல்பை காட்டிலும் அதிக அளவில் மழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. கால்வாய்கள், ஓடைகள் முன்கூட்டியே தூா்வாரப்பட்டதால், மிகப்பெரிய பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் 283 அபாயகரமான பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றைக் கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 456 பேரிடா் நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. தேவையான அளவு அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள் தயாா் நிலையில் வைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது என்றாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்துவருகிறது. நீா்நிலைகள் முற்றிலும் நிரம்பியுள்ளன.
தாழ்வான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கூடலூருக்கு வந்துள்ள பேரிடா் மீட்பு படையினா் தொடா்ந்து பல பகுதிகளுக்கும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனா். கூடலூா் ஓவேலி சாலையில் கெவி ப்பாறா பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா்.
- 2 ஊர்களிலும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அரவேணு
கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட தெங்குமரஹடா ஊராட்சி நீலகிரி மலை அடிவாரத்தின் அமைந்துள்ளது. இதற்கு மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் சாலை வழியாக சென்று மாயார் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.
இங்கு வாழும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்திற்கும் கோத்தகிரி தாலுகா அலுவலகத்திற்கு தான் வர வேண்டும். கிட்டத்தட்ட தனித்தீவு பகுதியை போல் அமைந்துள்ளது இந்த கிராமம். ஊரின் முழு தோற்றம் கொடநாடு காட்சி முனையில் இருந்து பார்க்கும் பொழுது மிக அருமையாகவும், அழகாகவும் தெரியும். தெங்குமரஹடா அல்லிமாயார் இவ்விரு ஊர்களிலும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாய தொழில் மேற்கொண்டு வருகின்றனர்.
இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சோலூர் மட்டம் அடிவாரத்தில் அமைந்துள்ளது, அடர்ந்த வனப் பகுதி என்பதால் மேட்டுப்பாளையம் சத்தி சாலை வழியாக மாயார் ஆற்றை கடந்து அந்த கிராமமக்கள் செல்ல வேண்டும்.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலையான நீலகிரி மாவட்டத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு வாழும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், வேலை மற்றும் மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பவானிசாகர் போன்ற கிராமங்களுக்கு செல்ல தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது.
பரிசல்களில் ஒரு சில மக்கள் இக்கரையில் இருந்து அக்கரை சென்று அத்தியாவசிய பொருட்களுக்காகவும் தங்கள் வேலைவாய்ப்புக்காகவும் செல்கின்றனர். தெங்குமரஹடா பகுதிக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே செல்லும். தற்போது ஆற்றில் வெள்ளம் அதிகமாக செல்வதால் அந்த பஸ் வந்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தெங்குமரஹடாவில் மாயார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வெறும் கனவாக மட்டுமே சென்றுவிடுமோ என்ற கேள்வி தற்போது அப்பகுதி மக்களிடத்தில் எழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.
- குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான வண்டிச்சோலை, அருவங்காடு, வண்ணாரபேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது.
ஊட்டி:
தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும்(ரெட் அலர்ட்) என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று காலை முதலே நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான முத்தோரை பாலாடா, இத்தலார், நஞ்சநாடு, மணிஹட்டி போன்ற பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
கோடப்பமந்து கால்வாயில் வழக்கத்தை விட அதிகளவிலான நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக ரெயில்வே பாலம் அருகே சுமார் 5 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதனால், படகு இல்லம், காந்தல், தீட்டுக்கல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான வண்டிச்சோலை, அருவங்காடு, வண்ணாரபேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது.
இன்று காலை மழை சற்று ஓய்ந்திருந்தது. இருப்பினும் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் சாலையோரம் நிற்கும் ஆபத்தான மரங்கள் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி, கொடநாடு, கீழ்கோத்தகிரி, சோலூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழைக்கு கொடநாடு செல்லும் சாலையோரம் நின்றிருந்த பெரிய ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இதனால் அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
கூடலூா், பந்தலூா் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் புன்னம்புழா, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முதுமலை-தெப்பக்காடு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
கூடலூர் அருகே உள்ள இருவயல், மொலப்பள்ளி பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்குள்ள ஒடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் குடியிருப்பை முழுவதுமாக சூழ்ந்தது. இதனால் அங்கிருந்து 72 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழையையொட்டி மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நீலகிரியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், காட்டேரி பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ் காட்சி முனைகள், நேரு பூங்கா, கொடநாடு காட்சிமுனை உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடியது. சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினா்.
- ஊட்டி மத்திய போலீசார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
- ரூ.65 ஆயிரத்து 735 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது
ஊட்டி,
ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊட்டி மத்திய போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக காந்தல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், சசிகுமார்(வயது 43), தியாகு(44), கணேஷ்(46), முத்தோரைைய சேர்ந்த ஈஸ்வரன்(54), பாலகிருஷ்ணன்( 45), குமார்(42), ஊட்டியை சேர்ந்த யூசுப்(51), அபுதாகீர்(48), மற்றொரு சசிகுமார்(45), பாபு(51), முகமது இப்ராகீம்(43), மற்ெறாரு குமார்(35), வெலிங்டனை சேர்ந்த லட்சுமணன், அணிக்கொரையை சேர்ந்த துரை(51), தலைகுந்தாவை சேர்ந்த மணிகண்டன்(40), எமரால்டு பகுதியை சேர்ந்த சிவகுமார்(37) ஆகிய 17 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.65 ஆயிரத்து 735 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- போதை பொருளின் தீமைக்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பி1 இன்ஸ்பெக்டர் மணிகுமார்,மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருளின் தீமைக்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினர். மாணவ பருவங்களில் போதை பொருட்களை அறவே தவிர்த்து கலவிக்கு மட்டுமே முக்கியம் அளித்து வாழ்கையில் மேன்மையடையும் வழிகள் குறித்தும் பல்வேறு ஆலோசகளை வழங்கினர்.
- தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
- புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெல்வியூ பகுதியை சேர்ந்தவர் மாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார்.
அப்போது எஸ்டேட் பகுதியில் மறைந்திருந்த புலி பசுமாட்டை தாக்கி கொன்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக நடுவட்டம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் மாரியின் மற்றொரு பசு மாட்டை நேற்று மதியம் புலி தாக்கி கொன்றது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது புலி தாக்கி 2 பசு மாடுகள் பலியானது தொடர்பாக உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். தொடர்ந்து தோட்ட தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அப்பகுதியில் நடமாடும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புலி நடமாட்ட பீதியால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.






