என் மலர்
நீலகிரி
- ராட்சத பாறைகள் பிடிமானம் இன்றி இருப்பதால் டிரைவர்கள், பயணிகள் அந்த வழியாக செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.
- ஊட்டியில் காலையில் மழைக்கான அறிகுறியே தெரியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு மேட்டுப்பாளையம் சாலையில், 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், விரைந்து வந்து மண்சரிவை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
சில இடங்களில் ராட்சத பாறைகள் பிடிமானம் இன்றி இருப்பதால் டிரைவர்கள், பயணிகள் அந்த வழியாக செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.
நேற்று மாலையும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குன்னூர், அருவங்காடு, வெலிங்டன், ஓட்டுப்பட்டறை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல தெருக்கள் சேறும், சகதியுமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர். வாகன ஓட்டிகள் சிலர் மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி நின்றனர்.
இதற்கிடையே கனமழை பெய்வதால் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் இரவு நேரத்தில் முன்னெச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் என கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் காலையில் மழைக்கான அறிகுறியே தெரியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. மதியத்திற்கு பிறகு திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்தது. ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
- பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.30 கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
- இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கோத்தகிரி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோத்தகிரி,
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.30 கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கோத்தகிரி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மொரச்சன், துணை பொதுச்செயலாளர் ராஜு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் டேன்டீயை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். அப்போது கட்யினர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
உடனே குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மறியலுக்கு முயன்ற 8 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல் பந்தலூர் பஜாரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 24 பேரை தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
- பல்வேறு வகையான பழ மரங்கள் நடவு செய்யப்பட்டன.
- பெர்சிமன் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளது.
ஊட்டி,
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டத்தில், பேரிக்காய், ஆரஞ்சு, லிச்சி, பிளம்ஸ், பீச், லில்லி உள்பட பல்வேறு வகையான பழ மரங்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது பெர்சிமன் பழ சீசன் தொடங்கி உள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பழப்பண்ணையில் பெர்சிமன் பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்து தொங்குகின்றன.
இதையொட்டி குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளது. இதுகுறித்து குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- கடந்த 1952-ம் ஆ
ண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து பெர்சிமன் பழ நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, குன்னூர் தோட்டக்கலை பண்ணையில் நடவு செய்யப்பட்டது. இது ஆதாம்-ஏவாள் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழம் மருத்துவ குணம் வாய்ந்தது. குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழம் கிலோவுக்கு ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- சோலூர்மட்டம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை லேசான மழை பெய்தது.
- அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
அரவேணு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொடநாடு, கீழ்கோத்தகிரி, சோலூர்மட்டம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை லேசான மழை பெய்தது. இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
விடிய, விடிய கொட்டிய மழையால் கரிக்கையூர், சோலூர்மட்டம், கீழ் கோத்தகிரி கோடநாடு கைகாட்டி கட்டபெட்டு அரவோனு குஞ்சம் பானை மூள்ளூர் மசக்கல் கூக்கல்தெரை என அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
- கோரஞ்சால் பகுதிக்கு 2 வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று வந்தது.
- உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.
ஊட்டி
கேரள வன பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம், கூடலூா் வன கோட்டத்தில் உள்ள சேரம்பாடி வனசரகம் வென்ட்வொா்த் எஸ்டேட், கோரஞ்சால் பகுதிக்கு 2 வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று வந்தது.
இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.
உடனடியாக வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். கால்நடை டாக்டர் தொடர்ந்து யானையின் உடல்நலத்தை கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இதில் குணமாகவே அந்த யானை மீண்டும் கேரள வனப் பகுதிக்குள் சென்றது.
பின்னா் மீண்டும் உடல்நிலை மோசமடைந்த யானை சேரம்பாடி வனச் சரக பகுதிக்கு வந்தது. தகவல் அறிந்து வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதையடுத்து, கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் மருத்துவக் குழுவினா் யானை உடலை பிரேத பரிசோதனை செய்தனா். இதன் முடிவுகள் வந்த பிறகே யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
- 5 இடங்கள் ஒத்திகைப் பயிற்சியை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- தேசிய பேரிடர் மேலாண்மை - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஊட்டி, :
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து செப்டம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கபட கூடிய 5 இடங்களில் அனைத்து துறைகளும் இணைந்து வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு பருவகாலங்களில் வெள்ளத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஊட்டி முத்தோரை பாலாடா நஞ்சநாடு, குந்தா முள்ளிகூர், குன்னூர் நகரம், கோத்தகிரி கன்னிகாதேவி காலனி, மேல் கூடலூர் ஆகிய 5 இடங்களில் வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சியை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒத்திகை நிகழ்ச்சியில் முன் எச்சரிக்கை அறிவிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு, பொதுமக்களை அப்புறப்படுத்துதல், தற்காலிக முகாம்களில் தங்க வைத்தல், முதலுதவி மற்றும் மருத்துவ பரிசோதனை செய்தல் ஆகியவை குறித்து வழக்கப்படும்.
மேலும், இயற்கை பேரிடர் ஏற்படும்போது மக்கள் தங்களை தாங்களாகவே எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பாதுகாப்பான இடத்திற்கு எவ்வாறு செல்வது, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய நபர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, போலீசார், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை. உள்ளாட்சித் துறை மருத்துவ துறை போன்ற பல்வேறு துறைகள் இணைந்து இந்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
நாளை மறுநாள் நடைபெறும் மாவட்ட அளவிலான மாதிரி ஒத்திகை பயிற்சியில் அனைத்து துறை அலுவலர்களும், பொது மக்களும் மற்றும் முதல் நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
- புதர் செடிகள் வளர்ந்தும், பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது.
- கொசு தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது.
ஊட்டி,
பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் (டேன்டீ) ரேஞ்ச் எண்.2 மலை மாரியம்மன் கோவில் அருகே பூமரத்து லைன்ஸ் பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அரசு மூலம் கட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பத்தினருடன் தங்கி தோட்டங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். குடியிருப்பு பகுதியில் 200 மீட்டர் தொலைவில் தொழிலாளர்களுக்காக கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. அந்த கழிப்பறைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதர் செடிகள் வளர்ந்தும், பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குடியிருப்பில் இருந்து நீண்ட தொலைவில் கழிப்பறைகள் உள்ளதால், இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க செல்ல முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் குடியிருப்புகளுடன் கூடிய கழிப்பறைகள் அமைத்து தர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிதாக கழிப்பறைகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஊட்டி, நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கல்லட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது
- குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகளுக்காக மண் அகற்றப்பட்டது
ஊட்டி
. தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்தன. பருவமழை தீவிரம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மார்க்கெட் பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் படகு இல்லம் செல்லும் சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் மற்றும் ரெயில்வே போலீஸ் நிலையம் பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ரெயில் நிலையம் எதிரே உள்ள வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் ஜவுளிக்கடையில் இருந்த ஆடைகள் நீரில் மூழ்கி சேதமானது.
. பணிகள் முடிந்தும், தொங்கும் நிலையில் இருந்த பாறைகள் அகற்றப்படவில்லை. கனமழையால் கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் இடையே ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் பாறைகள் தள்ளி வைக்கப்பட்டது. இதேபோல் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ஊட்டியில் உள்ள தமிழகம் சாலையில் மரங்கள் விருந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். இதேபோல் கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழையால் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டது. மேலும் கடும் குளிர் நிலவுதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
- பிள்ளைகள் சிறு வயதில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும்.
- மாணவிகள் விடுப்பு எடுக்காமல் வருகை புரிய வேண்டும்
ஊட்டி:
குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக மனநல மருத்துவர் டாக்டர் புணர்ஜீத் மற்றும் டாக்டர் ரமேஷ், அரசு பொதுநல மருத்துவர் டாக்டர் பாரதி ஆகியோர் கலந்துகொண்டு பெற்றோர்களுக்கு இடையே குழந்தைகளை கவனிக்கும் முறையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
டாக்டர்கள் ேபசும் போது கூறியதாவது:-
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே செல்போன்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் சிறு வயதில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும்.
பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும். மேலும் சிறு வயதில் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்தல் உடல், மன அளவில் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்பு கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலன் பற்றிய கருத்துக்களை மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தனர். தலைமை ஆசிரியர் பேசுகையில் மாணவிகள் விடுப்பு எடுக்காமல் வருகை புரிய வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
அரவேணு
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகர பகுதிகள், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 315 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
ஊட்டியில் பூசாரிகள் பேரவை சார்பில் 40, சிவசேனா சார்பில் 15, கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் 30 என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதுதவிர பல்வேறு கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் சிலைகள் வைக்கப்பட உள்ளன.
பூசாரிகள் பேரவை சார்பில் வருகிற 3-ந் தேதியும், மாவட்டம் முழுவதும் 4-ந் தேதியும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வெளி மாவட்ட போலீசாரும் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, குன்னூர், பந்தலூர் ஆகிய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஊட்டியில் தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய கொடி அணிவகுப்பு, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக மத்திய பஸ்நிலையத்தை அடைந்தது. கோத்தகிரி டானிங்டன் பகுதியில் வஜ்ரா வாகனத்துடன் தொடங்கிய கொடி அணிவகுப்பு காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், மார்க்கெட் சாலை வழியாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தது. குன்னூரில் சிம்ஸ் பூங்கா பகுதியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு லாலி ஆஸ்பத்திரி கார்னர், மவுண்ட் ரோடு வழியாக பஸ்நிலையம் வரை நடந்தது. இதில் போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர்.
- ஊட்டி அருகே அழகர் மலை கிராமத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.
- தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்கு மழை கொட்டி வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மண்சரிவும் ஏற்பட்டு சாலைகளும் சேதம் அடைந்துள்ளது.
ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கே.என்.ஆர். நகர், மரப்பாலம் இடையே ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே லேசான மண் சரிவு ஏற்பட்டது.
ஊட்டியில் இருந்து நடுவட்டம், கிளன்மாா்கன், கல்லட்டி, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததாலும், ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெடுஞ்சாலை, தீயணைப்பு மற்றும் வனத்துறையினா் உதவியுடன் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் சரிவுகளும் அகற்றப்பட்டன.
ஊட்டி அருகே அழகர் மலை கிராமத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. அங்கு வீட்டுக்கு முன்புறமும், பின்பும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அந்த வீடுகளில் வசித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டி-எடக்காடு சாலையில் எமரால்டு பகுதியை அடுத்த காந்திகண்டி பகுதியில் சுமார் 200 அடி நீளத்துக்கு சாலையில் பெரிய அளவிலான பிளவு ஏற்பட்டுள்ளது. சாலையில் செல்லும் வாகனங்கள் அந்த குழியில் விழுந்து விபத்து ஏற்படாத வகையில் எச்சரிக்கைக்காக அங்கு மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் இந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
- சூழல் உணர்திறன் மண்டலத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
- தமிழக அரசு சூழல் உணர்திறன் திட்டத்தை கைவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
நாடு முழுவதும் உள்ள வன உயிரின காப்பக எல்லையில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிப்பதாக கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
இது தொடர்பாக ஆய்வு நடத்தி, 3 மாதங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
சூழல் உணர்திறன் மண்டலம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி, புத்தூர் வயல், அள்ளூர் வயல் உள்பட பல கிராமங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சூழல் உணர்திறன் மண்டலத்தை கைவிடவேண்டும். மேலும் மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.
நேற்று முன்தினம் கூடலூர் மற்றும் ஸ்ரீமதுரை பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூடலூருக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் புதிய பஸ்நிலையம் முனை சந்திப்பு, ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி திடலுக்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று சூழல் உணர்திறன் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் தொகுதியில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாக கூடலூர் வணிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை சூழல் உணர்திறன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூடலூர் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மளிகை கடைகள், செல்போன் கடைகள், வணிக வளாகங்கள், இறைச்சி கடைகள் என அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டிருந்தது. வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கடை வீதிகள், முக்கிய பகுதிகள் அனைத்தும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
அப்போது அவர் கூறுகையில், சூழல் உணர்திறன் மண்டலத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும். மேலும் தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அ.தி.மு.க சார்பில் கண்டன பேரணி நடக்க உள்ளது. இதேபோல் அடுத்த மாதம் 5-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் கூடலூர் காந்தி மைதானத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டமும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.






