என் மலர்
நீலகிரி
- வீட்டின் பின்புறத்தில் இருந்து சுமார் 4 அடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.
- தடை செய்யப்பட்ட வெடிமருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் அதிகப்படியான கஞ்சா புழக்கம் இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தொடர்ந்து புகார் வந்தவண்ணம் இருந்தது. கடந்த வாரம் ஊட்டி பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்தால் கஞ்சாவை மாவட்டத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்து வலுவான கோரிக்கை எழுந்தது.
இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையிலான சிறப்பு போலீசார்கள் கஞ்சா வேட்டையில் இறங்கினர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி கண்ணெரிமுக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமா ன்காண், முஜாஹிர், சரவ ணன், சிவமணிகண்டன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சபீர்கான் ஆகியோர்கள் மோகன் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் இருந்து சுமார் 4 அடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.
பின்பு போலீசார் அவரது வீட்டில் மேலும் கஞ்சா செடிகள் இருக்கிறதா? என்று சோதனை செய்தபோது அவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்பு அவரிடமிருந்து சுமார் 125 கிராம் கொண்ட 5 வெடிமருந்து நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், மருந்துகளை வெடிக்க வைக்கும் ஒயர்கள் போன்றவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கண்காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன.
- தானிய வகைகளின் விளைச்சல்களை அதிகரிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் சிறுதானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது.
கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மலை காய்கறிகள், சமவெளி பகுதிகளில் விளையக்கூடிய நாட்டு காய்கறிகளால் செய்யப்பட்ட அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியில் இடம்பெற்ற 1.2 டன் எடையில் 15 அடி உயரத்தில் குடை மிளகாயால் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட மக்காச்சோளம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
1.2 டன்னில் பரங்கிக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் வடிவமைக்கப்பட்ட டிராகன் உருவம், 600 கிலோ எடையில் ஊதா நிற கத்திரிக்காயால் உருவாக்கப்பட்ட யானைகள் உருவம் ஆகியவற்றை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
முருங்கை காயால் வடிவமைக்கப்பட்ட கம்பு, 200 கிலோ எடையில் கத்தரிக்காய், கேரட், பீட்ரூட், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட ஊட்டி 200 என்ற அலங்காரம் அற்புதமாக இருந்தது. பஜ்ஜி மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட டெடிபியர் மற்றும் 1.5 டன்னில் அனைத்து வகையான காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்ட பிரமாண்ட நுழைவு வாயில் ஆகியவையும் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கண்காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன.
மேற்கு தொடர்ச்சி மலை தொடர்களில் வாழக்கூடிய ஹான்பில் பறவைகளின் வடிவங்கள் மற்றும் தானிய வகைகளின் விளைச்சல்களை அதிகரிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் சிறுதானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் தொடங்கிய காய்கறி கண்காட்சியை கடந்த 2 நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் காய்கறி அலங்காரங்கள் முன்பு நின்று போட்டோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- குன்னூர், கோத்தகிரி, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.
- நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து செயற்கை நீரூற்றை கண்டு ரசித்தனர்.
ஊட்டி:
கோடை விடுமுறையையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்தனர். இதேபோல் தாவரவியல் பூங்கா பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் மற்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். நேற்று பூங்காவுக்கு 17 ஆயிரத்து 171 பேர் வந்தனர்.
இதனால் ஊட்டி படகு இல்லத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர். அப்போது படகு இல்லத்தில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குதூகளித்தனர்.
ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்வதற்காக சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்தனர். ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரெயிலுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்பட்ட சுற்று ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர். மேலும் தொட்டபெட்டா மற்றும் பைக்காரா, சூட்டிங் மட்டம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
இதேபோல் குன்னூர், கோத்தகிரி, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.
சீசன் களை கட்டி இருப்பதால், ஊட்டி குன்னூர் உள்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் நீண்ட நேரம் வாகனங்கள் சாலையில் காத்திருந்து மெதுவாக ஊர்ந்து சென்றன.
இதேபோல் குளுகுளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கும் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை அவர்கள் பார்த்து ரசித்தனர்.
நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து செயற்கை நீரூற்றை கண்டு ரசித்தனர்.
பழனி முருகன் கோவிலிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 1½ மணி நேரம் காத்திருந்து அவர்கள் தரிசனம் செய்தனர்.
- நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- திராவிட மாடல்” பாடல் நீலகிரி மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
ஊட்டி,
ஊட்டி நகர தி.மு.க. சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது.தி.மு.க துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள "திராவிட மாடல்" பாடலை கழக துணை பொதுச்செயலாளர் நீலகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.இதில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், ராஜூ, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
- சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
- ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள காரணத்தினால், மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இதற்காக மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் போதுமான பொக்லைன் எந்திரம், பவர்ஷா ஆகியவற்றையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மின்வாரியம் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் போன்ற மின் சாதனங்கள் ஏதேனும் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க போதுமான பணியாளர்களுடன் தயாராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்களை கூடுதலாக இருப்பு வைக்க வேண்டும், பேரிடர் மேலாண் ைமத்துறை சார்பில் முதல் நிலை மீட்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் முன்கூட்டியே மிக அபாயகரமான பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
மழையினால் பயிர்களுக்கு சேதம் ஏதேனும் ஏற்படின், அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் நல்லநிலையில் உள்ளனவா எனவும், பள்ளியின் மேற்கூரையில் உள்ள குப்பைகள் மற்றும் செடிகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். மண் சரிவு ஏற்படும் பகுதிகளின் அருகில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் வைத்திருக்க வேண்டும். அபாயகரமான பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, தோட்டக்க லைத்துறை இணை இயக்குநர் கருப்பசாமி, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, முகம்மது குதுரதுல்லா, பூஷணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- லேம்ஸ்ராக் காட்சி முனையில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- கழிப்பறை, நடைபாதை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
குன்னூர்
தற்போது சமவெளிப் பகுதிகளில் கடுமையான வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீலகிரி மாவட்டத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனையில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அழகிய பசுமை நிறைந்த காடுகளையும். சமவெளி பகுதிகளில் ஓடும் ஆறுகளையும் வானுயர்ந்த மலைகளையும் பார்க்கலாம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் சுற்றுலா தளங்களை மேம்படுத்த மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் குன்னூர் லாம்ஸ் ராக் காட்சி முனை பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்க இருக்கை அமைப்பது, கழிப்பறை, நடைபாதை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது சுற்றுலா துறை அலுவலர் உமா சங்கர், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், பர்லியார் ஊராட்சி மன்ற தலைவி சுசீலா மற்றும் பலர் இருந்தனர்.
- இதையொட்டி கூடலூர் பகுதி மக்களுக்கு கூடுதல் மண்ணெண்யை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஊட்டி தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூடலூர்
கேத்தி, மசினகுடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அமைச்சர்கள் திடீரென ஆய்வு செய்தனர். பின்னர் ஆதிவாசி மக்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கினர். ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிலையில் கேழ்வரகு வழங்கும் திட்டம் ரேஷன் கடைகளில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர். கேத்தி, உல்லாடா, அதிகரட்டி, வாழைத்தோட்டம், மசினகுடி ஆகிய ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு வந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கூறியதாவது:- மத்திய அரசு தமிழகத்துக்கு மண் எண்ணை அளவை குறைத்து வழங்கி உள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக்கூடிய மண் என்ணை அளவு குறைந்துள்ளது. 2007-ம்ஆண்டு முன்னாள் முதல் - அமைச்சர் மு. கருணாநிதியால் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மானிய விலையிலும் தரமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் மத்திய அரசு மண்எண்ணை வழங்குகிறது. அதை தமிழக அரசு மானிய விலையில் மக்களுக்கு வழங்குகிறது. கூடலூர் பகுதியில் மின்சார விநியோகப் பிரச்சினை உள்ளதால் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி கூடலூர் பகுதி மக்களுக்கு கூடுதல் மண்ணெண்யை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ திராவிட மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் லோகநாதன், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் மிர்ஹாசன் முசாபர் இம்தியாஸ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஊட்டி தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆனால் 24-10-2020 அன்று நோயாளி நினைவிழந்து விட்டார்
- இதை தொடர்ந்து சபாபதி ஊட்டி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்
குன்னூர்
நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததாக கூறி, அவரின் குடும்பத்திற்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு வழங்க கோரி குன்னூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த உபதலை காந்திநகரை சேர்ந்தவர் சபாபதி. மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விமலா. கடந்த 19-10-2020 அன்று உடல் நலக்குறைவு காரணமாக குன்னூரில் உள்ள நன்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவர் குணமடைந்து வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறி வந்து உள்ளது. ஆனால் 24-10-2020 அன்று நோயாளி நினைவிழந்து விட்டார். அவரை உடனடியாக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று நன்கம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி உள்ளனர். இந்தநிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விமலா 2-11-2020 அன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிருப்தி அடைந்த சபாபதி இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டார். அதற்கு அவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதை தொடர்ந்து சபாபதி ஊட்டி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார. அதில் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் யாரும் இல்லாமல் இது போன்ற தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அனுமதித்து, நோய் மிக தீவிரம் அடைந்த நிலையில் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வைப்பது, பணம் பறிப்பதற்காக செய்யப்படும் மோசடி ஆகும். முதலுதவி மட்டும் வழங்கி விட்டு கோவை மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் நோயாளி உயிர் பிழைத்திருக்கலாம். மருத்துவமனையின் அலட்சியமே எனது மனைவியின் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் பி.ஆல்துரை வழக்கில் வாதாடினார். மருத்துவமனை சார்பில், நோயாளியின் தினசரி மருத்துவ குறிப்பு, தீவிர சிகிச்சை பிரிவில் செய்யப்பட்ட பதிவுகள் என எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க இயலவில்லை. எனவே, சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்து இருக்கிறது என்று கூறி, நோயாளியிடம் வசூலித்த ரூ.1 லட்சத்து 82 ஆயிரம், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் சித்ரா உத்தரவிட்டு உள்ளார்.
- இதனால் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றக்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார்
- இதையடுத்து மூலவர் மற்றும் சுற்றுக் கோவில் தெய்வங்களை வழிபட்டார்.
ஊட்டி
காந்தல் விஸ்வநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மடத்தில் கோவை மடாதிபதி பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தட்சிணாமூர்த்தி மடம் நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தலில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார், 5 ஏக்கர் நிலப்பரப்பில் துளசிமடம் எனப்படும் தட்சிணாமூர்த்தி மடம் அமைந்து உள்ளது. கடந்த, 2015-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. Also Read - மேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வேள்வி பூஜை Powered By இதன்பின்னர் பேரூர் ஆதீனம் மடாதிபதி மருதாச்சல அடிகளார், தட்சிணாமூர்த்தி மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டதால், அவரை நீக்கி, மதுரை சொக்கலிங்க தம்பிரான் மடாதிபதி, நியமிக்கப்பட்டு பணிகளை கவனித்து வந்தார். இந்தநிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மடாதிபதி மருதாச்சல அடிகளார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2017-ல் கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் கோவில் நிர்வாக பணிகளை கவனிக்கலாம் என்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அந்த சமயத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் பொறுப்பேற்க வரவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றக்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்தநிலையில், கடந்த மாதம் 24-ந் தேதி கோவை மடாதிபதி மருதாசல அடிகளார் பொறுப்பேற்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பக்தர்கள் எதிர்ப்பு இதைத்தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் அஸ்வினி, உதவி கமிஷனர்கள் கருணாநிதி விமலா, மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன், போலீஸ் சூப்பிரண்டுகள் யசோதா, விஜயலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் கோவை பேரூர் ஆதீனம் பொறுப்பேற்க நேற்று காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்தார். அப்போது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். ஆனாலும் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்பதால், போலீசார் பாதுகாப்புடன் மருதாசல அடிகளாரை கோவிலுக்கு அழைத்து சென்றனர். மேலும் கோவிலை சுற்றி 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதன் பின்னர் அவர் காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து மூலவர் மற்றும் சுற்றுக் கோவில் தெய்வங்களை வழிபட்டார்.
- சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது.
- 30 முதல் 40 கி.மீட்டர் தூரம் 10 நிமிடம் வரை பயணம் இருக்கும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது.
வருகிற 19-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அதன்படி இன்று கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி தொடங்கியது. 7-ந் தேதி நாளை முதல் 31-ந் தேதி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி, 8-ந் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடைபயணம், 11-ந் தேதி படகு போட்டி என பல்வேறு கோடை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
இதில் சிறப்பம்சமாக வருகிற 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஹெலிகாப்டர் சுற்றுலாவும், 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பலூன் திருவிழாவும் நடைபெற உள்ளது.
கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஊட்டி நகரின் 200 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தொடங்கப்பட உள்ளது.
இதை தொடர்ந்து படிப்படியாக மருத்துவ ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்படும். தனியார் நிறுவனம் மூலமாக ஊட்டி தீட்டுக்கல் மைதானத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெறும். ஒரு முறை ஹெலிகாப்டரில் 6 பேர் செல்லலாம்.
அங்கிருந்து 30 முதல் 40 கி.மீட்டர் தூரம் 10 நிமிடம் வரை பயணம் இருக்கும்.
விமான நிறுவன உத்தரவின்படி சுமார் ஆயிரம் அடி உயரம் வரை பறந்து, ஊட்டி நகரை கண்டு ரசிக்கலாம். இதற்கான கட்டணமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை இருக்கலாம்.
ஆன்லைன் மூலமாக முன் அனுமதி பெறலாம். தீட்டுக்கல் மைதானத்துக்கு வந்தும் அனுமதி வாங்கலாம். ஊட்டி காலநிலையை பொறுத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பொதுப்பணி, வனம் உள்ளிட்ட துறைகளில் அனுமதி கேட்கப் பட்டுள்ளது.
- கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடக்க விழா நடந்தது.
- பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்த வண்ண, வண்ண மலர்களையும் கண்டு ரசித்து சென்றனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்காவின் நுழைவுவாயில், ஆயிரம் கிலோ எடை கொண்ட பல்வேறு காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் 1,500 கிலோ குடை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு, சோளம், கம்பு ஆகியவற்றை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குடை மிளகாய், பஜ்ஜி மிளகாயை கொண்டு மக்கா சோளமும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
300 கிலோ பாகற்காய் கொண்டு முதலை வடிவம், கத்தரிக்காய், பூசணிக்காய் ஆகியவற்றை கொண்டு டிராகன், ஊதா நிற கத்தரிக்காய் கொண்டு யானை உருவமும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்படவும் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்தும் தோட்டக்கலைத்துறையினர் பங்கேற்றனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகளில், கத்தரிக்காய், பூசனிக்காய், கேரட், பீட்ரூட், குடைமிளகாய் போன்ற காய்கறிகளைக் கொண்டு யானை, மயில், கிளி, சேவல், பான்டா கரடி, வரி குதிரை, மீன் போன்றவற்றை உருவாக்கி கண்காட்சியில் வைத்திருந்தனர்.

காய்கறி கண்காட்சியையொட்டி காலையிலேயே கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் பூங்காவில் நுழைந்து, அங்கு பல்வேறு வகையான காய்கறிகளால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த முதலை, டிராகன், யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பொம்மைகளை கண்டு ரசித்தனர். அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இதேபோன்று அங்கு ஐ லவ் கோத்தகிரி, ஊட்டி 200 லட்சினையைும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதுடன் செல்பி புகைப்படமும் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்த வண்ண, வண்ண மலர்களையும் கண்டு ரசித்து சென்றனர்.

தனியார் காய்கறி உற்பத்தியாளர்கள், இயற்கை காய்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் இதனை சார்ந்துள்ள தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் குறித்தும் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.
- சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருகின்றனர்
- நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஊட்டி,
ஊட்டிக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாகவும், கோவை உள்பட தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை கூடலூர், கல்லட்டி. சாலை வழியாகவும் வாகனங்கள் சேர்ந்து வருகின்றன. இதனால் ஊட்டி-குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருவதால் குன்னூர் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தற்போது சீசன் தொடங்கி இருப்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பர்லியாறு, காட்டேரி லாஸ் நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் நின்று இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கின்றனர். அப்போது செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கும் ஆசையால், குறுகலான சாலை இருக்கும் ஒரு சில இடங்களிலும் நின்று கொள்கின்றனர். இதனால் விபத்து அபாயம் இருக்கிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை செல்லும் சாலை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் வாகன போக்கு வரத்து அதிகம் என்பதால் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக லாஸ் நீர்வீழ்ச்சி பாலத்தில் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது நிற்கின்றனர். இதனால் அவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல் லாஸ்ட் நீர்வீழ்ச்சியில் எப்போதும் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்பதால் தவறி விழுந்தால் உயிரிழப்பு ஏற்படலாம். முதலில் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் வனவிலங்கு நடமாட்டம் இருக்கக்கூடிய பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்க வேகத்தடை அமைத்தும் வேகமாக செல்கின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி மேற்கண்ட பிரச்சினைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






