search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியை 20 ஆயிரம் பேர் ரசித்தனர்
    X

    கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியை 20 ஆயிரம் பேர் ரசித்தனர்

    • இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கண்காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன.
    • தானிய வகைகளின் விளைச்சல்களை அதிகரிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் சிறுதானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது.

    கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மலை காய்கறிகள், சமவெளி பகுதிகளில் விளையக்கூடிய நாட்டு காய்கறிகளால் செய்யப்பட்ட அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியில் இடம்பெற்ற 1.2 டன் எடையில் 15 அடி உயரத்தில் குடை மிளகாயால் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட மக்காச்சோளம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    1.2 டன்னில் பரங்கிக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் வடிவமைக்கப்பட்ட டிராகன் உருவம், 600 கிலோ எடையில் ஊதா நிற கத்திரிக்காயால் உருவாக்கப்பட்ட யானைகள் உருவம் ஆகியவற்றை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

    முருங்கை காயால் வடிவமைக்கப்பட்ட கம்பு, 200 கிலோ எடையில் கத்தரிக்காய், கேரட், பீட்ரூட், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட ஊட்டி 200 என்ற அலங்காரம் அற்புதமாக இருந்தது. பஜ்ஜி மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட டெடிபியர் மற்றும் 1.5 டன்னில் அனைத்து வகையான காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்ட பிரமாண்ட நுழைவு வாயில் ஆகியவையும் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

    இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கண்காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன.

    மேற்கு தொடர்ச்சி மலை தொடர்களில் வாழக்கூடிய ஹான்பில் பறவைகளின் வடிவங்கள் மற்றும் தானிய வகைகளின் விளைச்சல்களை அதிகரிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் சிறுதானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் தொடங்கிய காய்கறி கண்காட்சியை கடந்த 2 நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகள் காய்கறி அலங்காரங்கள் முன்பு நின்று போட்டோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×